அயர்லாந்து தலைநகரில் ஈழத் துயர் பற்றி ஓவியக் கண்காட்சி

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் 27 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஓவியக் கண்காட்சி Temple Bar காட்சிக் கூடத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

கடந்த மாதம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் (Permanent People's Tribunal) வெளியிடப்பட்ட சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணை முடிவுகளின் ஒலிவடிம் ஒலித்துக்கொண்டிருக்கும் பொழுது பிரபல ஓவியர்கள் Sandra Johnston மற்றும் Dominic Thorpe ஆகியோர் தங்களது மனதில் உதித்ததை ஓவியமாக வரைந்து அந்த ஓவியம் பற்றிய மக்களின் அபிப்பிராயங்களை கேட்டதுடன் அந்த ஓவியத்திற்குரிய விளக்கத்தினையும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.

வரையப்பட்ட இந்த ஓவியமானது போர்க்குற்ற விசாரணை அறிக்கையின் ஓவியப்பிரதியாக அமைவதுடன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறவுள்ள போர்க்குற்ற விசாரணைக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந் நிகழ்விற்கு பல இன மக்கள் வயது வேறுபாடு இன்றி கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட ஓவியக் கலைஞர்கள் எவ்வாறு ஓவியங்கள் மூலம் அனைத்து இன மக்களுக்கும் இலங்கையில் தமிழ்மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலை துயரத்தை எடுத்து காட்டலாம் என கூறினர். இதுபோன்ற ஓவியக் கண்காட்சிகளை அனைத்து நாடுகளும் ஒழுங்குபடுத்தி அந்தந்த நாட்டு மக்களுக்கு இலங்கையில் இடம்பெற்ற மனிதப்படுகொலைகளை எடுத்துச் காட்ட வேண்டும் எனவும் கூறினர்.

மேலும் இந் நிகழ்வின் பொழுது நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றது.





Comments