வன்னியில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்திலிருந்து உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள போர்க்குற்ற சாட்சிகளை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் இரகசியமாக கைது செய்துவருவதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இத்னபிரகாரம், தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைத்துள்ள அகதிகள் முகாமிலிருந்து அண்மைக்காலமாக பலர் மர்மமான முறையில் காணமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் புலனாய்வுத்துறையினர் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு இரகசியமாக மேற்கொண்டுவருவதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாள் போராளிகள் பலரும் இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது. புலனாய்வுத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டுவருவதால், இறுதிப்போர்க்காலத்தின் பின்னர் தமிழகத்துக்கு வந்த பல ஈழத்தமிழர்கள் இலகுவாக அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் அறியவருகிறது.
இறுதிப்போரின்போது வன்னியிலிருந்து தப்பி இந்தியா சென்று தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் மர்மமான முறையில் இந்திய புலனாய்வுத்துறையினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என்றும் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இந்த வைத்தியருக்கு தெரிந்திருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்புக்கள் இந்தியாவுக்கும் சென்று அங்கு தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் சாட்சிகளை பெற்றுவருகிறார்கள் என்றும் அந்த அமைப்புக்களிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியளித்தார்களா என்றும் – அண்மையில் மன்னார் பகுதிக்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தின் விசேட குழு ஒன்று அப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை மிரட்டிச்சென்றுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவித்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற இறுதி போரின்போது இந்திய படையினரின் நேரடி பிரசன்னம் அங்கு காணப்பட்டதால், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும் என்ற அச்சத்திலேயே இந்தியாவின் புலனாய்வுத்துறையினர் சாட்சிகளை கடத்தும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments