சமூகப் பிராணிகள் நடத்தும் மக்களாட்சி


நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் நடத்தும் மக்களாட்சியில் கருத்து-மோதல்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, இன்றியமையாதவையும் கூட.

அத்தகைய கருத்து-மோதல்கள் எக்காரணம் கொண்டும் வன்முறைக்கு இட்டுச்செல்லக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வோல்டயர் முன்வைத்த ஓர் அரும்பெருங் கூற்று

நீ கூறுவதை நான் ஏற்கவில்லை. எனினும், அதனைக் கூறுவதற்கான உனது உரிமைக்காக நான் என்றென்றும் குரல்கொடுப்பேன்!
நுண்ணிய கட்டுக்கோப்பு வாய்ந்த மனித மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுடன்தான் குழந்தை பிறக்கிறது என்கிறார் நோம் கொம்ஸ்கி (Chomsky-Foucault Debate on Human Nature, The New Press, New York, 2006, 2-4). அதனை அவர் பிறவி மொழி (innate language), அல்லது இயல்பூக்க மொழி (instinctive language) என்று குறிப்பிடுகிறார். அத்தகைய ஆற்றலைக் கொண்டே, தான் செவிமடுக்கும் மொழியைத் தேர்ந்து தெளியும் படிமுறையில் குழந்தை அடியெடுத்து வைக்கிறது என்று அவர் கருதுகிறார்.

மனிதரை ஒரு சமூகப் பிராணி என்று வர்ணிக்கும் அரிஸ்டாட்டில், தனது கருத்தை உணர்த்துவதற்கு logos என்னும் கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார். Logos என்பது வாக்கு, நீதி, நியாயம் மூன்றையும் ஒருங்கே உணர்த்தும் கிரேக்கச் சொல். அந்த மூன்று தன்மைகளும் மனிதரில் இயற்கையாகவே காணப்படுகின்றன. அதாவது மனிதர்கள் நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் (zoon politikon) என்பதே அரிஸ்டாட்டில் கொண்ட கருத்து. அந்த வகையில் அவர்கள் ஒருவருக்கொருவர் நிகரானவர் என்றும், ஒப்பானவர் என்றும் (equal and like) அவர் குறிப்பிடுகிறார்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது அரிஸ்டாட்டிலுக்கு முற்பட்ட ஆசான்களின் (Sophists) அடிப்படைப் போதனை. அதனை வலியுறுத்தும் பொருட்டு புறொட்டேகொறஸ் (Protagoras) என்னும் ஆசான் கூறும் கிரேக்க புராணக் கதை ஒன்று இருக்கிறது: கிரேக்கரின் முழுமுதல் கடவுள் (கிரேக்கரின் சிவன்!) Zeus தனது தூதரை (Hermes) அழைத்து மக்களுக்கு அரசியல் கலையை வழங்கும்படி பணிக்கிறார். ஏற்கெனவே ஏனைய கலைகளை ஆங்காங்கே வழங்கிய இறைதூதர் அரசியல் கலையையும் ஆங்காங்கே வழங்கிவிடட்டுமா என்று கடவுளைக் கேட்கிறார். அதற்குக் கடவுள் கொடுக்கும் விடை:

அரசியல் கலையை எல்லோருக்கும் வழங்கிவிடு. அதில் எல்லோருக்கும் பங்குகொடு. அதனை ஒருசிலருக்கு மட்டும் வழங்கினால், மக்கள் எல்லோரையும் மேம்படுத்த முடியாது போய்விடும். அத்துடன் அரசியல் கலையில் ஈடுபடாதோர் மக்களைப் பீடித்த பீடைகளாய் மாள்வர் என்பதையும் அவர்களுக்கு உணர்த்திவிடு… மேற்படி ஆசான்களின் இறுதி முழக்கம்: வேறு துறைகளில் மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியாவிட்டாலும், அரசியலைப் பொறுத்தவரை மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியும், பங்குபற்ற வேண்டும்.... இதனை நாங்கள் மக்களீர் நிலைப்பாடு எனலாம்.

அடுத்தது சிட்டர்-நிலைப்பாடு: புத்திமான்கள் அதனை முன்னெடுத்துச் செல்வதுண்டு. அதனை நாங்கள் புத்திமான்மியம் என்றும் கொள்ளலாம்! அவர்களை, மக்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் செய்யும் தரகர்கள் என்கிறார் கொம்ஸ்கி. மெய்நிகழ்வுகளுக்கு விளக்கமளிப்பதை விடுத்து, தனி நலன்களைப் பேணுவதற்காகவே சமூக-அரசியல் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன என்று வேறு எச்சரிக்கிறார் நோம் கொம்ஸ்கி (அதே நூல், ப.69). எனினும் மக்களால் அவற்றை எளிதில் இனங்காண முடியும் என்பது அவர் துணிபு. திறந்த மனது, சராசரி விவேகம், நியாயமான ஐயம் என்னும் மூன்றும் தனது சித்தாந்த ஆய்வுகளுக்கு கைகொடுப்பதை அவர் எடுத்துரைத்துள்ளார். அது எவர்க்கும் கைகூடும் என்பது அவர் வாதம்.

சிறப்புப் பயிற்சிபெற்ற துறைஞர்களால் மட்டுமே சமூக-அரசியல் ஆய்வுகளை, மேற்கொள்ள முடியும் என்ற வாதத்தை கொம்ஸ்கி மறுத்துரைக்கிறார் (அதே நூல், ப.70). நாட்டம் கொண்ட எவர்க்குமே அது கைகூடும் என்று அவர் அடித்துக் கூறுகிறார். நியாயத்தின் துணையுடன் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் எவருமே சமூக-அரசியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் வாதிடுகிறார்.

சமூக-அரசியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிறப்புப் பயிற்சி தேவையா என்னும் வினாவுக்கு, இல்லை என்று விடையளிக்கும் கொம்ஸ்கி, சமூக-அரசியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பொது அறிவே போதுமா என்னும் வினாவுக்கு, ஆம் என்று விடையளிக்கிறார்!

பிறவி மொழி அல்லது இயல்பூக்க மொழி பற்றி கொம்ஸ்கி முன்வைக்கும் விளக்கமும், மனிதரை நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் என்று அரிஸ்டாட்டில் இனங்காணும் விதமும், மக்களாட்சியில் ஒருவர் வாக்களிக்கும் தகைமை பெறுவதற்கு, தனக்குரிய மொழியில் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரிந்திருக்க வேண்டும் என்னும் முதல் விதியும் ஒன்றுடன் ஒன்று உடன்படுபவை.

நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் நடத்தும் மக்களாட்சியில் கருத்து-மோதல்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, இன்றியமையாதவையும் கூட. அத்தகைய கருத்து-மோதல்கள் எக்காரணம் கொண்டும் வன்முறைக்கு இட்டுச்செல்லக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வோல்டயர் முன்வைத்த ஓர் அரும்பெருங் கூற்று: நீ கூறுவதை நான் ஏற்கவில்லை. எனினும், அதனைக் கூறுவதற்கான உனது உரிமைக்காக நான் என்றென்றும் குரல்கொடுப்பேன்!

எத்தகைய சுதந்திரம் எங்களுக்கு மறுக்கப்பட்டாலும், சிந்திக்கும் சுதந்திரத்தை எவராலும் அபகரிக்க முடியாது. சிந்திக்கும் சுதந்திரத்தைக் கொண்டு ஏனைய சுதந்திரங்கள் அனைத்தையும் ஈடுசெய்யவோ மேம்படுத்தவோ எங்களுக்கு வாய்ப்புள்ளது. சிந்தித்து, நியாயம் பேசி, நீதியை நிலைநாட்டும் வல்லமையை ஈட்டிக்கொள்ள வேண்டிய காலகட்டத்துள் இன்று நாங்கள் அடி எடுத்து வைத்துள்ளோம். இலங்கையில் இலட்சக் கணக்கான உடன்பிறப்புகளை இழந்து கதறும் உலகளாவிய தமிழ் மக்கள் என்றுமிலாவாறு நியாயம் பேசும் மக்களாக மேலோங்க வேண்டிய தருணம் இது. மனிதநேயக் கடப்பாடு தமிழ்கூறு நல்லுலகை அறைகூவி அழைக்கிறது.

ஈழ மக்கள் கடுகதியில் இயல்பு-வாழ்வுக்கு மீளும் சூழ்நிலை தோன்றுவதற்கு இயன்றவரை பாடுபடும் தலையாய பணி இன்று வெளியுலக மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அங்கு அவரசகாலச் சட்டம் தளர்த்தப்பட்டு, அதற்கமைய இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, அவற்றுக்கிணங்க சிறைசெய்யப்பட்டவர்கள், விசாரணை எதுவுமின்றிக் காவலகங்களிலும், படை-முகாங்களிலும், அகதி-முகாங்களிலும் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்கள், இடம்பெயர்ந்த மக்கள்… அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு ஏதுவான சூழ்நிலை தோன்றுவதற்கு நாங்கள் துணைநிற்க வேண்டும்.

இயல்பு-வாழ்வுக்கு மீளும் மக்கள் தம்மால் இயன்றவரை தமது வாக்குரிமையை நிலைநாட்டுவது தவிர்க்கவியலாதது. உள்ளூராட்சி, மாகாண, நாடளாவிய தேர்தல்களில் தமது வாக்குரிமையை அவர்கள் தங்குதடையின்றிப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மக்களாட்சிக்கு அடிப்படையாக விளங்கும் வாக்குரிமையை மக்கள் என்றென்றும் கட்டிக்காக்கக் கடமைப்பட்டவர்கள். வாக்காளர் முன்னிலையில் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு கருத்து-மோதல்களில் ஈடுபடுவது வழமை. மக்கள், தேர்தல்களில் வாக்களித்து தமது தீர்ப்பை வெளிப்படுத்துவது உலகளாவிய முறைமை.

மக்களின் தீர்ப்புக்கு கட்சிகள் கட்டுப்படும் அதேவேளை, மக்கள் முன்னிலையில் தமது கருத்து-மோதல்களை அவை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அடுத்த தேர்தலில் தமது தீர்ப்பை நிலைநிறுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு அத்தகைய கருத்து-மோதல்கள் மக்களுக்குத் துணைநின்றே தீரும்.

கட்சிகளிடையே நிகழும் கருத்து-மோதலை, மக்களாட்சி-நெறிக்கு உட்பட்ட கருத்துரையாடலாக மேம்படுத்தும் வல்லமையை ஊடகங்கள் ஈட்டிக்கொள்வது நலம் பயக்கும். உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், கருத்துரைகள் வேறுபடலாம் என்னும் கூற்றை அவை அடியொற்றிச் செல்ல வேண்டும்.

மக்கள் நாடுவதை விடுத்து, மக்களுக்குத் தேவையானவற்றையே ஊடகங்கள் இனங்காட்ட வேண்டும் என்கிறார் ஒரு பிரெஞ்சு ஊடக அதிபர். ஒரு நியாயத்தை ஏற்பதா, மறுப்பதா என்பது அதனைச் செவிமடுக்கும் மக்களைப் பொறுத்தது. அதேவேளை மக்கள் நாடுவதையும், மக்களின் தேவையையும் இயைபுபடுத்தும் பணியில் கட்சிகளும், ஊடகங்களும் அவர்களுக்கு கைகொடுக்கக் கடமைப்பட்டவை.

வாக்குரிமையால் நிலைமைய மாற்றலாம் என்றால், அவர்கள் எங்களுக்கு வாக்குரிமையே தந்திருக்கமாட்டார்கள் என்று ஆஸ்கார் வைல்ட் (Oscar Wilde) கூறியதுண்டு. இது ஓரளவு உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் வாக்காளர்களின் பலவீனத்தை நாங்கள் வாக்குரிமையின் பலவீனமாகவோ, மக்களாட்சியின் பலவீனமாகவோ கொள்ளக் கூடாது.

அப்படி என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளூராட்சி மன்றம் அல்லது மாகாண ஆட்சிமன்றம் அல்லது நாடாளுமன்றம் எத்தகையது? அதற்கான விடை ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபடக்கூடும். எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமன்றம் எத்தகையதோ அத்தகைய ஆட்சிமன்றத்தைப் பெற்றுக்கொள்வதற்கே அவர்கள் அருகதை உடையவர்கள் என்று அதற்கு ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் வதையுண்டு, புதையுண்ட இலட்சக் கணக்கான உடன்பிறப்புகளை நினைந்துருகும் அதேவேளை, எங்களை நாங்களே ஆற்றவும், தேற்றவும் வேண்டிய ஓர் இக்கட்டினுள் நாங்கள் அகப்பட்டுள்ளோம். அது எத்துணை கடினமாயினும், அதனை நாங்கள் உடனடியாகவே செய்ய வேண்டியுள்ளது. உடனடியாக எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு, எங்கள் உடன்பிறப்புகள் நலன்கருதிச் செயற்பட வேண்டியுள்ளது.

நாங்கள் எவ்வாறு செயற்படப் போகிறோம் என்பது எங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்தது. எங்கள் வழமையான பொருளுதவி என்றென்றும் தொடரும் என்பதில் ஐயமில்லை. அதற்கு அப்பாலும் நாங்கள் துணைநிற்றல் வேண்டும். இலங்கையில் அமைதி நிலவிய காலத்திலும், எங்கள் உடன்பிறப்புகளை சுனாமி பலிகொண்ட வேளையிலும் எங்களுள் பலர் ஓடோடிச் சென்று அவர்களுக்கு ஒத்தாசை புரிந்ததுண்டு. அத்தகைய உதவிகள் இன்று அவர்களுக்குப் பன்மடங்கு தேவைப்படுகின்றன.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் நிலவும் சமூக-அரசியல் சூழ்நிலையை இம்மியும் பொருட்படுத்தாது அங்கு சென்று தமது குடும்பத்தவர்களை அரவணைக்க வேண்டியுள்ளது. துறைஞர்களுக்கான பணி அங்கு காத்துக் கிடக்கிறது. பொது மருத்துவர்கள், உளமருத்துவர்கள், தாதியாளர்கள், தொண்டர்கள்… முதலியோர் மருந்துவகைகளுடனும், உபகரணங்களுடனும், பிற பொருள்வகைகளுடனும் பறந்துசென்று புண்பட்ட மக்களையும், வடுப்பட்ட உள்ளங்களையும் குணப்படுத்த வேண்டியுள்ளது.

அத்தகைய பணிகளை ஆற்றுவதில் ஐ.நா.வும், செஞ்சிலுவைச் சங்கமும் ஏற்கெனவே தடங்கல்களை எதிர்நோக்குவது தெரிந்ததே. அப்படி என்றால், எங்கள் சொந்தத் துறைஞர்கள், எங்கள் உடன்பிறப்புகளை அணுகுவது எங்கனம்? இங்கேதான் நாங்கள் நியாயம் பேசும் சமூகப் பிராணிகள் என்பதை இடைவிடாது மெய்ப்பிக்க வேண்டியுள்ளது. எங்கள் மக்களுக்கு உதவும்படி வெளியுலக அரசுகளிடம் எங்களால் இயன்றவரை ஏற்கெனவே நாங்கள் வேண்டிக்கொண்டு விட்டோம். அது ஒருபுறம்.

மறுபுறம், இலங்கையில் எங்கள் மக்களின் உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அனைவருடனும் நாங்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு, அவர்களின் உறுதுணையுடன் எங்கள் மக்களை அணுகித் தொண்டாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளதைத் தெரிவிக்க வேண்டும். எங்கள் உறுதி மக்களின் பிரதிநிதிகளுக்குத் தெம்பூட்டல் திண்ணம்.

கொள்கையளவில் எந்தப் பிரதிநிதியும் இதற்கு மறுப்புத் தெரிவிக்க நியாயமில்லை. செயலளவில் இது கைகூடும் வாய்ப்பு கையோடு கிடையாது போகக்கூடும். அப்படி என்றால், மக்களை அணுகித் தொண்டாற்றுவதில் எங்களுடனும், தங்களிடையேயும் ஒத்துழைப்பது என்னும் கொள்கையை மட்டுமாவது முதற்கண் கருத்தில் கொள்ளும்படி பிரதிநிதிகள் அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உள்ளக் கிடக்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் எந்தத் தரப்பினரிடையேயும் அத்தகைய ஒத்துழைப்பு கைகூடல் திண்ணம். சமூக-அரசியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த எங்கள் பிரதிநிதிகளுக்கு தனி நலன், பொது நலன் என்பவற்றுக்கு இடையே காணப்படும் வேறுபாடு நன்கு தெரியும். அந்த வகையில், அவர்கள் தத்தம் தனி நலனைக் கருதி தனித்தனியாக இயங்கும் அதேவேளை, மக்களின் பொது நலனைக் கருதி ஒத்தழைக்க நியாயமும் உண்டு, வழிவகையும் உண்டு.

அத்தகைய வழிவகையை இனங்காண்பதே அவர்களுடைய முதலாவது நடவடிக்கையாக அமையத்தக்கது. எங்கள் உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் பொது நலனைக் கருதி ஒத்துழைக்கும் வழிவகையைக் கண்டறியும் வாய்ப்பினைக் கருத்தில் கொள்ளும் நோக்குடன் உடனடியாக ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள். பருகவும் தண்ணீரின்றி மக்கள் சிந்தும் செந்நீரும், கண்ணீரும் எங்கள் பிரதிநிதிகளை ஒத்துழைக்க வைக்க வேண்டும். எங்கள் பிரதிநிதிகளிடையே வேறு எந்த விடயத்திலும் திண்மை இல்லாதொழியலாம். ஆனால், மக்களின் பொது நலனைப் பொறுத்தவரை அவர்களிடையே திண்மை ஓங்கியே தீரவேண்டும்.

Comments