கதிரை சண்டையில் தமிழர் மும்முரம்; நிலங்கள் கவர்வதில் சிங்களவர் தீவிரம்

ஈழம் நோக்கிய தமிழர்களது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது.

ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மழைக்காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக, கிளிநொச்சியின் ஜெயபுரம், முல்லைத்தீவின் பாண்டியன் குளம் என மீள்குடியேற்றம் இடம்பெற்ற வன்னியின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கட்டட நிர்மாணத்திற்கான மணல் விநியோகம் முதல் பாரிய நிர்மாணப் பணிகள் வரை அனைத்து ஒப்பந்தங்களும் இவர்களுக்கே சென்று சேர்கிறது.

தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள ஆறுகளில் ஆற்றுமண்ணை ஏற்றுவதற்கான ‘உரிமத்தினை’ குறித்த பகுதிகளில் உள்ள இராணுவத் தளபதிகள் சிங்கள ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.

அந்தந்தப் பிரதேச செயலகங்களே மணல் ஏற்றுவதற்கான அனுமதியினை வழங்குவது வழமை.

கட்டட ஒப்பந்த வேலைகளை மேற்கொள்ளும் சிங்கள ஒப்பந்தகாரர்கள், இராணுவத்தினரது கறுப்புச் சந்தையில் நிலை, கதவு, யன்னல் மற்றும் கம்பி உள்ளிட்ட கட்டடப் பொருட்களை வாங்குகிறார்கள்.

தமிழர்களது வீடுகளிலிருந்தும் வியாபார நிலையங்களிலிருந்தும் உடைத்தெடுக்கப்பட்டவையே இவை.

குடியரசுத் தலைவரின் ஆலோசகரும் வடக்கு சிறப்பு செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, முறிகண்டிச் சந்திக்கு வட மேற்காக, விடுதலைப் புலிகள் அமைத்திருந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டத் தொகுதிக்கு அண்மையாக ஒரு தங்குவிடுதி அமைப்பதற்காக அரச காணியிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்கான அனுமதியினை கடந்த வாரம் வடக்கு ஆளுனர் செயலகம் வழங்கியிருக்கிறது.

முல்லைத்தீவின் நாயாற்றுப் பகுதியில், சிங்கள மீனவர்கள் குடில்கள் அமைத்துத் தங்களது மீன்பிடித் தொழிலை ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தப் பிரதேசத்தின் உண்மையான சொந்தக்காரர்களான தமிழர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்தும் வவுனியாவிலுள்ள முகாம்களில் வாடுகிறார்கள்.

வன்னிப் பகுதியில் படை முகாம்களை அமைப்பதற்கென தமிழர்களது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக மிகப்பெரும் நில ஆக்கிரமிப்பு முல்லைத்தீவின் கேப்பாபிலவுப் பகுதியில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்காக 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் கூட்டுப்படைத் தளம் அமைக்கும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தட்டிக்கேட்க யாரிருக்கிறார் என்ற இறுமாப்பில், புதிய படைத்தளக் கட்டுமானத்திற்காக முள்ளியவளை - புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்திருக்கும் சூரிபுரம், கேப்பாபிலவு, வாவியடி, சீனியாமோட்டை, உடையாவெளி, கொண்டைமடு மற்றும் கண்ணன் கிராமம் உள்ளிட்ட கிராமங்களை இலங்கை இராணுவம் வலுக்கட்டாயமாகத் தனதாக்கியிருக்கிறது.

சூரிபுரம் சந்திக்கு முன்னதாகவுள்ள கள்ளுத் தவறணை வளைவு தொடக்கம் கண்ணன் கிராமச் சந்தி வரையிலான ஐந்து கி.மீ நீளமான வீதியினை உள்ளடக்கியதாக இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

கேப்பாபிலவு காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் விமான ஓடுதளத்தினை உள்ளடக்கிய விமானப்படைத் தளம், கேப்பாபிலவு கிராமத்தினை மையமாகக் கொண்ட மாவட்டத் தரைப்படைத் தலைமையகம் என்பனவற்றை இந்தக் கூட்டுப்படைத் தளம் கொண்டிருப்பதை இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இரண்டு இந்துக் கோவில்கள், ஒரு கிறிஸ்தவத் தேவலாயம், ஒரு பாடசாலை, ஒரு சனசமூக நிலையம், இரண்டு பொதுநோக்கு மண்டபம் மற்றும் மூன்று சிறுவர் பாடசாலைகள் என்பனவும் புதிய உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்குகிறது.

விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்புப் பிரிவினர் 1994ம் ஆண்டிலும் 1999ம் ஆண்டிலும் உருவாக்கிய 200 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தேக்கம் தோட்டங்களும் இந்தத் தளத்தினுள் அடங்குகிறது.

2007ம் ஆண்டின் புள்ளி விபரத்தின் படி, இந்தப் பகுதிகளில் வசித்துவந்த 293 குடும்பங்களைச் சேர்ந்த 1432 பேர் தங்களது நிலங்களை இழக்கிறார்கள்.

புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த விவசாயிகள் பலரது வயல் நிலங்களும் புதிய படைத்தளப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. விவசாயம் மற்றும் நந்திக் கடலில் சிறுகடல் மீன்பிடி ஆகிய தொழில்களில் இக் கிராமங்களின் மக்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்தக் கூட்டுப்படைத் தளத்தினுள் அடங்கும் தேங்கந் தோட்டத்தினை அண்டிய பகுதியில் இராணுவத்தினருக்கான சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதோடு, கேப்பாபிலவின் நுழைவாயிலில், நந்திக் கடலை அண்டியதாக, உலங்குவானூர்தி இறங்கு தளமும் படையினருக்கான பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளையில் அமைந்திருக்கும் தனியார் வீடுகள் மற்றும் பொதுக்கட்டடங்களிலிருந்து கழற்றி எடுக்கப்பட்ட கட்டடப் பொருட்களைக் கொண்டே இந்த விடுதிகள் அமைக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, [இன்று] 11 மார்ச் 2009 அன்று கேப்பாபிலவுக்கு அடுத்ததாக உள்ள வற்றாப்பளைக் கிராமத்திற்தில் மீள்குடியேற்றப்படுவதற்கென வவுனியாவிலுள்ள முகாம்களிலிருந்து மக்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

வற்றாப்பளைப் பாடசாலையிலிருந்து அண்ணளவாக 725 மீற்றர் தூரத்தில் படையினரின் இந்தக் கூட்டுப்படைத்தள வளாகம் ஆரம்பிக்கிறது.

படையினரின் செறிவு அதிகமாகவுள்ள வற்றாப்பளைப் பிரதேசத்தில் தங்களது பிள்ளைகளுடன் சென்று மீள்குடியேறுவதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறாக மூன்று கிராமங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பகுதியை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாகத் தமதாக்கியமை தொடர்பில் தொடர்புடைய அரச அதிகாரிகள் முல்லை மாவட்டப் படைத் தலைமையை அணுகி, அவை பொது மக்களுடைய உறுதிக் காணிகள் என்றும் அவை மக்களுக்கே சொந்தமானது எனக் கூறியபோதும், தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும் உரிமை படையினருக்கு இருக்கிறது எனப் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

“வன்னிப்; பிராந்தியத்தில் சட்டமும் ஒழுங்கும் நிலவுவதை உறுதிப்படுத்துவதற்கும் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்கும் இந்தப் படை முகாம்களின் பிரசன்னம் அவசியமானது. ஆதலினால், வன்னியில் இராணுவப் பிரசன்னம் அவசியமானதே. அங்கிருந்து படையினரை முழுமையாக மீளப்பெற முடியாது” என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க அண்மையில் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments