வன்னி மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது: சி.என்.என்

வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி. என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.




அதன் செய்தியாளர் சரா சின்டர் தொகுத்து வழங்கிய செய்தியின் ஒரு பகுதியின் தமிழாகம்.

இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள் ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால்

“எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்;கை கொண்டுள்ளார். ஏனெனில் கடந்த காலம் அவருக்கு தந்த அனுபவம் அது.


என்னால் தற்போது எதுவுமே செய்யமுடியாது, அது தான் எனக்குள்ள பிரச்சனை எனக்கூறிய ஜனதாவின் மெல்லிய புன்னகை மெல்ல மறைந்து கண்களை கண்ணீர் நிறைத்துக்கொண்டது. அவரின் நம்பிக்கையான குரல் உடைந்து போனது. கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

எனக்கு எல்லாவற்றிற்கும் உதவிகள் தேவை என கண்ணீருக்கு மத்தியில் அவர் தெரிவித்தார்.

வன்னியில் நடைபெற்ற போரில் இறுதிப்பகுதியில் அங்கு வாழ்ந்த 280,000 மக்களில் ஜனதாவும் ஒருவர். சிறீலங்கா அரச படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அங்கு கடும் சமர் நடைபெற்றிருந்தது. விடுதலைப்புலிகள் சுதந்திர தனிநாடுகோரி போராடி வந்தனர்.
இந்த மோதல்களில் இருந்து ஜனதா உயிர்தப்பியிருந்தார். ஆனால் அவர் தனது இரு கால்களையும், ஒரு கண்ணையும் இழந்திருந்தார்.

நாம் பதுங்குகுழியினுள் பாதுகாப்பு தேடி ஓடினோம் ஆனால் எறிகணை ஒன்று பதுங்குழிக்குள் வீழந்து வெடித்தது. எனது உறவினர் கொல்லப்பட்டார். நான் எனது இரு கால்களையும் இழந்தேன், தனது கதையை கூறும் போது இழந்துபோன தனது கண்ணை அவர் மறந்துவிட்டார்.

பின்னர் ஒரு நிமிட அமைதியின் பின் கூறினார் எனது ஒரு கண்ணையும் நான் இழந்தேன் என்று. ஜனதா தனது குடும்பத்துடன் வடபகுதியில் வசித்து வந்தார். அவர்களும் அங்கிருந்த ஏனைய குடும்பங்களும் போரின் கொடுமையை விபரித்தனர். பல மாதங்களாக தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் ஒவ்வொரு பதுங்குகுழியாக மாறி மாறி வாழ்ந்தனர்.

போர் உக்கிரமடைந்த போது கண்ணீர்த்துளியை போல இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்திருந்த சிறீலங்காவை நோக்கி உலகின் கவனம் ஒன்று குவிந்தது. 2009 ஆம் ஆண்டின் முன்னைய சில மாதங்களில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன உலகத்தின் கவனத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. இரு தரப்பின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. விடுதலைப்புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.

வைத்தியசாலைகள் உட்பட, பாதுகாப்பு வலையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது சிறீலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களையும், குண்டு வீச்சுக்களையும் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தளபதிகள் அதனை மறுத்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் உக்கிரமடைந்தபோது, சிறீலங்கா அரசு அங்கு சுயாதீன ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை. அங்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் அது பல கேள்விகளை எழுப்பியிருந்தது. எனவே அங்கு நடைபெற்ற சம்பவங்கள் பல பொதுமக்கள் கூறமுடியாது மறைந்துபோய்விட்டன.

போர் நிறைவடைந்து பல மாதங்களாகியும் அங்கிருந்து வெளியேறியவர்களை அரசு முகாம்களில் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அது பல முகாம்களை திறந்து விட்டிருந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ஜனதாவும் வெளியேறியிருந்தார்.

போரை தவிர அவர் தனது வாழிவில் எதiயும் காணவில்லை. அவரின் கதையும் ஏனையவர்களின் கதைகளும், கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. தனக்கும், தனது உறவினர்களுக்கும் நடந்தவற்றை மறந்து புதிய சூழ்நிலையில் எவ்வாறு வாழ்வது என்ற கேள்வியை அவரின் நிலைமை ஏற்படுத்தியது.

நான் மகிழ்ச்சியை உணர்ந்தாலும், எனது பிரச்சனைகள் என்னில் இருந்து விடுபடப்போவதில்லை என தனது இழந்துபோன கால்களை மறைத்தபடி அவர் தெரிவித்தார். நாம் மிகவும் கடுமையான உழைத்த பின்னரும், பல வருடங்கள் போராடிய பின்னரும், பெரும் அழிவுகளை சந்தித்த பின்னரும், அதனால் என்ன பயன்? அவை எல்லாம் எதற்கு? நாம் தற்போதும் பழைய இடத்திற்கே திரும்பி வந்துள்ளோம் என அவர் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழம் இ நியூஸ்

Comments