தமிழர் பலத்தை சிதைத்து பதவிக்காய் அலையும் "ஊடகப் பிதாமகனும்" "உதயன் நாளிதழும்"..?

பத்திரிகையையும் பத்திரிகையாளர்களையும் இங்கு குற்றம் கண்டுபிடிப்பது நோக்கம் அல்ல அப்படி தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதும் நல்லதல்ல ஆனால் மக்களின் தலைவனாக இருக்க விரும்புகிறவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

  • ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற திடமான நம்பிக்கையில் இன்போ தமிழ் இந்தக் கருத்துக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது.

தமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் தேர்தல்

தமிழ் மக்கள் என்றுமே அரசியலில் வெறுப்புற்றவர்களாக காணப்படும் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு தேர்தல் தமிழர்களின் பலத்தைக் சிதைக்கும் செயலாகவே உள்ளது. ஸ்ரீலங்காவின் இவ் அரசியல் திணிப்பானது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மக்களை வெறுப்பேற்றத்தை அதிகரிக்கும். அதாவது தமிழ் தலைமைமீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பல படுகொலைகள் தற்கொலைகள் போன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இது நடக்கும் என்று ‘அரசியல் சதியில் பலியாக இருக்கும் தமிழினம்” என்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்றைய பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழர்களின் நிலைப்பாடு படு மோசமடையும் என்பதும் நிச்சயம். யாழ் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்னர், ஒரு சில வேட்பாளர்களை பணம் பெற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது அது பற்றி பின்னர் பார்க்கலாம்.

  • இறுதியாக எழுதிய பகுதியில் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட சில ‘காசு பிசாசுகள்” இழுபறியில் நிற்கின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இக் காசு பிசாசுகளில் ஆபத்து மிக்கவர் ‘உதயன்” நிர்வாக இயக்குனர் சரவணபவன். ‘சப்றா” நிறுவனத்தின் மூலம் நிதியை மக்களிம் திரட்டி நிறுவனத்தை முடக்கிய அவர், அந்நிதியை மக்களிடம் திருப்பிச் செலுத்தாமல் பெற்றெடுத்த குழந்தையே ‘உதயன்” என்பது யாழ் அறிந்த உண்மை.

  • பல இன்னல்கள் மத்தியில் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்த உதயனை இப்படி திட்டலாமா?

பத்திரிகையையும் பத்திரிகையாளர்களையும் இங்கு குற்றம் கண்டுபிடிப்பது நோக்கம் அல்ல அப்படி தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதும் நல்லதல்ல ஆனால் மக்களின் தலைவனாக இருக்க விரும்புகிறவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

குண்டு வீச்சுகள் மத்தியிலும், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும், ஓலையில் பத்திரிகை வெளிவராததே குறை என்பது போன்ற பொருளாதார தடை உச்சமடைந்திருந்த வேளையிலும் உதயன் வெளிவந்தது மறக்கமுடியாதது, வரலாற்றில் பதியப்படவேண்டியது.

  • மக்களின் தேவையை உணர்ந்து அதை பணமாக்குவது எப்படி என்பதை அறிந்திருந்ததும் உதயன் நிர்வாகமே.

    குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் அதிபருக்கு எவ்வளவிற்கு மரியாதை செலுத்த வேண்டுமோ அவ்வளவிற்கு அதிகமாக நிர்வாக இயக்குனரை மதிக்க வேண்டும் என்ற ஒழுங்கு பின்பற்ப்பட்டுவந்தது. மேலும் மக்களின் உணர்வுகளை பணமாக மாற்றிய இந் நிர்வாகம் ஊழியர்களுக்கு தகுந்த கொடுப்பனவுகளையும், காப்புறுதி உள்ளிட்ட ஓய்வூதிய திட்டங்களையும் வழங்க மறுத்தது, தவிர ஊழியர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பாக உறுதியாக நின்றவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். பயிற்சி என்ற போர்வையில் பல இளம் சந்ததியினர் தமது சக்தியை இலவசமாக வழங்கினர். முதலீடும் மக்களிடம் கொள்ளையடித்த பணமே.

  • தவிர ‘வித்துவான் பதில்கள்” என்ற பகுதியில் இளம் சந்ததியினரை பாழான சிந்தனைக்கு இழுத்துச் சென்றதுமல்லாமல், ஒரு பெண்ணுறுப்பின் முழு உருவப் படம் ஒன்றை நடுப்பக்கத்தில் மிகத் தெளிவாகவும்,பெரிதாகவும் பிரசுரித்து சாதனை படைத்தது உதயன் நிர்வாகம். எந்த ஒரு நாட்டு பத்திரிகையிலாவது (வயது வந்தோருக்கான பத்திரிகை தவிர்ந்த-நாளாந்த,வாராந்த செய்திதாளில்) நிர்வாண மங்கையின் படம் பிரசுரித்துள்ளார்களா? இதனால் தான் என்னவோ ‘மக்கள் மனம் நிறைந்த தமிழ் தேசிய நாளிதழ்” என்ற வாசகம் இடப்படுகின்றதோ?

ஒருவர் செய்த நன்மையிலும் அவர் விட்ட ஒரு சில தவறுகளை சுட்டிக் காட்டுவது ஒழுங்கல்ல என்பது உண்மை, இருப்பினும் மக்களின் உணர்வை,அனுதாபத்தை தூண்டி பணமாக மாற்றிய ஒருவர் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை ஏற்றால் நடுத் தெருவில் நிற்கும் தமிழினத்தின் நிலைமை என்னாவது?

உலகம் முழுக்க உதயன் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார் என்ற அனுதாபம் உள்ளது,

  • பத்திரிகையாளன் வர்மன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனது ஊழியர் என்பதை உதயன் ஏற்க மறுத்தது. சம்பவ தினம் மாலை வர்மனின் சடலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு எடுத்து வரப்பட செய்தி கேள்வியுற்று அங்கு விரைந்தேன் அநாதரவாக இருந்த வர்மனின் சடலத்தை கொண்டுவந்திருந்த பொலிஸார் சடலத்தை அடையாளம் காட்டும்படி கூறினர் உதயனின் செய்தியாளர் என கூறிய போது இல்லை என அவர்கள் கூறியுள்ளனரே என்றார். அதனை மறுத்து இல்லை அவர் அங்கு தான் வேலை செய்கின்றார் என உறுதியாக கூறினேன், அந்நேரத்தில் நான் அங்கு இல்லாதிருந்தால் இனம் தெரியாத நபர் பட்டியலிலோ அல்லது இளைஞன் சுட்டுக் கொலை என்ற பட்டியலிலோதான் வர்மன் இருந்திருப்பான். மேலும் வர்மனின் மரணச் சடங்கில் அச்சுறுத்தல்களின் மத்தியில் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் முன்நின்றது. அங்கு உதயன் சார்பில் வைக்கப்ட்டிருந்த மலர் வளயம் எப்படி வந்தது என்பது எமக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வர்மன் தனது கிராம மக்களை எவ்வளவு நேசித்தான் எவ்வளவிற்கு அவ் ஏழைமக்களுக்கு உதவி செய்தான் என்பதை அச்சுறுத்தலின் மத்தியில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டமே சாட்சி அந்த கால் தூசுக்கும் தகுதியில்லாமல் உதயன் நின்றது தான் வேதனை.

  • கொல்லப்பட்வர்களின் பெயரால் வயிறு வளர்ப்போர் கொல்லப்பட்டவர்களின் குடுப்பங்களுக்கு தன் வயிறு வளர்த்த மீதி துணிக்கையும் போடவில்லை வர்மனுக்கும் அதுவே. நிமலராஜனின் மறைவிற்கு மக்களிடம் இருந்தே நிதியை சேகரித்து வழங்கியது. அதாவது நிமலராஜனின் நிதி சேகரிப்பு மூலம் புலிகளிடம் நல்ல பெயரை வாங்கி தமிழ் தேசியத்திற்காக உறுதியாக நிற்பவன் என்று காட்டிக்கொள்ளவும், நிமலின் மரணம் குடாநாட்டு மக்களை அவ்வேளையில் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் அதன் வழியே விளம்பரத்தை தேடும் உத்தியாகவும் அந் நிதி சேகரிப்பு இருந்தது.

இறுதி புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் ‘தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் தமது பத்திரிகையை படிக்கிறார்” என்ற மகா விளம்பரத்தை செய்து பிழைப்பு தேடிய சாதனையும் சரவணபவனையே சாரும்.

யாழ் குடா நாட்டுக்கு விஜயம் செய்யும் சர்வதேச இராஜதந்திரிகள், அமைப்புக்கள் மற்றும் பிரபலமான அரசியல்வாதிகள் ஓய்வெடுப்பதற்காக தமது விடுதிகளை வாடகைக்கு கொடுத்து அவர்களுடன் நின்று எடுக்கும் நிழல் படங்களை பிரசுரித்தும், தமது பத்திரிகை காரியாலயத்திற்கு விஜயம் செய்வதற்கான நிகழ்சி நிரலின் கட்டாயத்தை தெளிவுபடுத்தி பின்னர் அவர்களின் விஜயத்தை படம்பிடித்தும் குடாநாட்டு மக்களை ஏமாற்றியது.

  • இலங்கையில் ஊடக சுதந்திரம் வேண்டும் என்று சர்வதேசம் குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் 1999 ‘வலம்புரி” வெளிவரத் தொடங்கிய போது அதனை ஈ.பி.டி.பி பத்திரிகை என இரகசிய பிரசாரம் செய்து அங்கு கடமையில் இருந்த சுமார் 80 பேருக்கு உயிர் அச்சுறுத்தலை உருவாக்கிய வள்ளல் உதயன் நிர்வாகம் (வலம்புரியின் சுத்துமாத்துகள்,குப்பாடித் தனங்களை சர்ந்தப்பம் வரும்போது கூறலாம்) மேலும் இதற்கிடையே ‘சூரியகாந்தி” என்ற பத்திரிகை யாழில் வெளிவந்த போது அதன் நிர்வாகத்துக்குள் ஊடுருவிய சரவணபவன் குழுவினர் அப்பத்திரிகையை முடிக்கினார். இவ்வாறு தனிக்காட்டு ராஜாவாக நிலைநிற்க பல சதிகளை (தேசியபற்று அல்வா புலிகளுக்கு) தீட்டி வெற்றிநடைபோட்டு வந்தவர் சரவணபவன். இதன் காரணமாக குடா நாட்டு மக்கள் நீண்ட காலமாக ஆக்கபூவமான விடயங்களை அறியதிருந்தனர், அக் குறை ‘நமது ஈழநாடு” ‘யாழ் தினக்குரல்” ‘வீரகேசரி” வருகையின் பின்னரே தீர்க்கப்பட்டது.

மேலும் தனது நிறுவன பத்திரிகையாளர்கள் எந்தவொரு பத்திரிகை அமைப்பிலும் இணைவதை இன்று வரை தடுத்து வரும் உதயன் அவ்வாறு இணைந்தோர் மீது நடவடிக்கையையும் எடுத்து அவர்களை அச்சுறுத்தியும் வந்தது. (தமக்கு தாமே செயற்படுவோம் எனவும் கூறினர்) இதன் ஊடாக குடா நாட்டு ஊடகவியலாளர்களுக்கான பலத்தை சிதைவடையச் செய்த பெருமையும் ஐயாவையே சாரும்.

ஆக நீண்டு செல்லும் இவ் குற்றச் சாட்டுக்கள் பத்திரிகையையோ என் சக பத்திரிகையாளர்களையோ கொச்சப்படுத்துவதற்கல்ல அவர்களை இவ்வாறு தமது பணத்தேவைக்காக இருத்தி எழுப்புபவர் மக்கள் பிரதி நிதியாக நாளை வந்தால் குடா நாட்டின் நிலை என்ன? தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்து குடா நாட்டு மக்களை எவ்வளவிற்கதிகமாக அடைவு வைக்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்க தலைவெடிக்கின்றது.

குடாநாட்டின் ஊடக சுதந்திரம் என தனியாக போராட்டம் நடத்த வேண்டிய கால கட்டத்தை உருவாக்காமல் இருப்பது வாக்காளர் உங்களின் கடமை, இப்படி மக்களின் உணர்வுகளை காசாக்குபவர்களை கசக்கி வீசவேண்டும். இதே போன்று பல வர்த்தக குண்டர்கள் இம் முறை த.தே.கூட்டமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பது மக்களிடத்தில் த.தே.கூட்டமைப்புக்குள்ள செல்வாக்கை கடுமையாக பாதிக்கும்.

மேலும் ஏற்கனவே வேறு பகுதிகளில் நான் கூறியது போல த.தே.கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்களின் தீர்ப்பக்கு விட்டிருந்தால் இன்றைய தேவையற்ற பிளவுகள் ஏற்பட்டிருக்காது,

இன்றைய ஸ்ரீலங்காவின் அடக்கு முறை ஆட்சியில் த.தே.கூட்டமைப்பின் முடிவு முக்கியமாக இருந்தாலும் முன்னாள் உறுப்பினர்களை தூக்கியெறிந்திருக்கக்கூடாது, அவர்களை தற்காலிகமாக நிறுத்தியிருக்காலாம், அவர்களும் மக்களுக்காக ஒறுத்து போயிருக்கலாம்.

என்ன தான் செய்தாலும் தமிழ் தலைமைகள் மீது அல்லது அரசியலில் வெறுப்படைந்துள்ள தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் த.தே.கூட்டமைப்பின் மாற்றங்களை கண்டு வரவேற்கமாட்டார்கள். அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப்ட்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஆக தமிழ் தலைமைகளின் பலத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்களம் டக்ளஸிற்கு வெற்றிலையை கொடுத்து அவர்களின் கோஷமான ‘வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசம்” கைவிடவைத்துள்ளது.

  • இந் நிலையிலேயே வர்த்தக குண்டர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர், இது வியாபாரம் செய்யும் நேரம் அல்ல. ஆகவே இலாப நோக்கம் மக்களின் உணர்வுகளில் வோண்டாம், தமிழர்களை தாங்கியிருந்த ஒற்றைத் தூண் புலிகளே என்பது இப்போது தெளிவாகின்றது.

ஆகவே செருப்பு என்றால் ‘பாட்டா” சக்லேட் என்றால் ‘கன்டோஸ்” போன் என்றால் ‘டயலக்” இப்படியே பழமை வியாதியில் ஊறியிருக்கும் எம் சனத்தின் மனம் மாறாமல் இருந்தால் பத்திரிகை என்றால் ‘உதயன்’ என்பதை மட்டுமே அறியும் வாய்ப்பு உள்ளது.

பழமை வியாதி என்ற பலவீனத்தின் வழியே அரசியல் பிரவேசம் செய்ய உள்ளோருக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுக்க வேண்டும்.

அரசியலில் புகுந்துவிடும் அவர்கள் நாளை தமது கையில் தலைமையை எடுப்பதற்கும் இவ் பழைமை வியாதியே காரணமாக இருக்கும்.

எனவே வர்த்தக குண்டர்களை வாக்காளர்களே தூக்கி வீசுங்கள்.

- வின்சென்ற் ஜெயன் -

Comments