மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!

மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.

போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இறுதி நாட்களில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தாலும், அங்கிருந்து தப்பி வெளியேறியவர்கள் வெளியிட்டுவரும் தகவல்களின்படி, பலிகொள்ளப்பட்ட தமிழர்களின் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் ஒரு உறுப்பினர்கூடத் தப்பியிருக்கவில்லை என்பதால், இது குறித்த உண்மை விபரங்கள் வெளிவரக் கால தாமதம் ஆகலாம்.

இருப்பினும், யுத்தம் முடியும்வரை மவுனத்தைக் கடைப்பிடித்த மேற்குலகுக்கு, யுத்தத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் அணுகுமுறை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வும், எதிர்கால நம்பிக்கையுடனான புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்ற மேற்குலகின் வற்புறுத்தல்கள் சிங்கள அரசால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்தில், இந்த அழுத்தங்களை இந்திய – சீன – ரஷ்ய ஆதரவுகளுடன் முறியடித்த சிறிலங்கா அரசு தற்போது, ஐ.நா. ஊடான யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்குப் பின்பலமாக நின்ற இந்தியா, மேற்குலகின் மனிதாபிமான அணுகு முறைகளுக்கும் தடை போட்டுத் தனது சிங்களக் கூட்டாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களது பகை நாடாகக் கருத வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் தமக்கான நீதிக்காக மேற்குலகின் பக்கம் சாயவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவின் தென் திசைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயம் கொண்டது என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. இதனால்த்தான், தனது இறுதித் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் களத்தில் இறக்கியுள்ளது.

ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளையும், சிங்கள தேசத்தின் மேலாதிக்க சிந்தனையும் இந்தியாவின் மிரட்டல் அரசியலுக்கு இலங்கைத் தீவு களமாகியது. ஈழத் தமிழர்கள் ஊடான இந்தியாவின் இலங்கைப் பிரவேசம் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பால் தடம் மாறியது. இந்தியாவின் எதிர்பார்ப்பை விடுதலைப் புலிகள் நிர்மூலம் ஆக்கியதால், அதன் மிரட்டல் அரசியல் சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது.

அதனை சிங்கள தேசம் அழகாகக் கையாண்டு, முள்ளிவாய்க்கால் வரை இந்தியாவின் துணையோடு ஈழத் தமிழர்கள் மீது அத்தனை கொடூரங்களையும் நடாத்தி முடித்தது. தற்போது, சிங்கள அரசு இந்தியா மீது மிரட்டல் அரசியலை ஆரம்பித்துள்ளது. அது இந்தியாவை தற்போது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியா விரித்த சதி வலையில் இந்தியாவையே சிங்கள தேசம் சிக்க வைத்துள்ளது. தற்போது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டும் அரசியலை சிங்கள தேசம் ஆரம்பித்துள்ளது.

இந்தியாவை மீறி தெற்காசியாவில் எதுவுமே சாத்தியமில்லை என்ற காலம் காலாவதியாகி, இலங்கைத் தீவிற்கான தமிழீழ நுழைவாயிலையும் இந்தியா இழந்து தடுமாறுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடத்தைப் பிடித்தால், அவர்கள் மூலமான காய் நகர்த்தல்கள் ஊடாகத் தன்னை இலங்கைத் தீவில் நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்குப் போடுகின்றது. இதற்குச் சமாந்தரமாக கிழக்கின் முதல்வராக மகிந்தாவால் முடி சூட்டப்பட்ட பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் வலை விரிக்கப்படுகின்றது. ஆனாலும், கிழக்கு தமிழர்களது கரங்களை விட்டு நழுவிச் செல்லும் நிலையை அடைந்து விட்டதால், அது எதிர்பார்த்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் கூட வடக்குடன் இந்தியக் கனவு முடிவுக்கு வரப் போகின்றது.

தற்போது, சிங்கள அரசு மேற்கொள்ளும் இராணுவக் குடியிருப்புக்கள், சிங்கள வர்த்தகர்களது யாழ். முற்றுகை, வர்த்தக வளாகங்கள் என்ற போர்வையிலான சிங்களத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் என்று வடக்கு சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் சென்று கொண்டுள்ளது. இது வட பகுதித் தமிழர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பதுடன், அவர்களது மொத்த கோபமும் இந்தியா மீது திரும்பும் நிலையில், தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியும் சிங்கள ஆக்கிரமிப்பு வர்த்தகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தமிழீழத்தின் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பூசிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் சிதைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது.

சிங்கள தேசத்தினதும் அதன் காடையர் கூட்டத்தினாலும் ஈழத் தமிழர்களின் போராட்டகால நினைவு சின்னங்களும், கலாச்சார அடையாளங்களும் திட்டமிட்டுத் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு வருவது புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. சிங்கள தேசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் சோகங்களால் சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் நீதி கோரிப் போராட வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழக்கூடிய அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. இது சாத்தியமல்ல என்று தத்துவம் பேசுபவர்கள் இஸ்ரயேலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதிலிருந்து எதிர்கால நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் போராட மறுத்தாலோ, தயங்கினாலோ சிங்கள ஆக்கிரமிப்புக்குள் நாம் எமது தேசத்தை இழந்துவிடுவது மட்டுமல்ல, எமக்கான அடையாளங்களையும் இழந்து விடுவோம். சிங்கள தேசத்திற்கு எதிராகவோ, ஒற்றைச் சிங்களவனுக்கு எதிராகவோ நாம் கருத்துக் கூறாவிட்டாலும் கூட, நாம் தமிழர்களாக வாழ முற்பட்டால் அவர்களது தாக்குதல்களுக்கு இரையாகுவோம் என்பதே தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி இடிப்பு எமக்கு உணர்த்தும் செய்தியாகும். எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய சார்பு நிலைப்பாடும் புலம்பெயர் தமிழீழ மக்களின் சுதந்திரத் தமிழீழ நிலைப்பாடும் ஒரே புள்ளியில் சந்திப்பதற்கான சாத்தியம் அற்றே காணப்படுகின்றது. இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும்.

நன்றி: ஈழநாடு

Comments