சரியான பாதையில் எமது அரசியல் பயணம் தொடரும்- கலா நிதி. திருலோக மூர்த்தி

Dr.Thirulokamoorthy

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ்க்கங்கிராஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் கந்தசாமி திருலோகமூர்த்தி அவர்கள் வழங்கிய நேர்காணல். முதலில் உங்களை பற்றியொரு சிறு அறிமுகம் தாருங்கள்?


தீவுப்பகுதியை சேர்ந்த வேலணையை பிறப்பிடமாக கொண்ட நான் கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சியில் நிரந்திரமாக வசித்து வருகிறேன் நான் ஒரு சுதேச வைத்திய பட்டதாரி அத்துடன் 2௦ வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்ட திடீர்மரண விசாரணை அதிகாரியாக கடமையாற்றி உள்ளேன். ஈழநாடு, முரசொலி, ஈழமுரசு ,ஈழநாதம் பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளேன், கடந்த பல வருடங்களாக வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கடமையாற்றி வருகிறேன்.எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு தமிழ் தேசியப்பற்றாளன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


யுத்தசூழ்நிலையில் வன்னியில் வாழ்ந்த தாங்கள் இத்தேர்தலில் போட்டியிட முன்வந்தது ஏன்?

யுத்தத்தால் ஈழமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெரும்பாதிப்பை சந்தித்துள்ளனர்.என் குடும்பமும் மிகப்பெரிய அழிவை சந்தித்தது.இது இப்படி இருக்க அரசு எம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தது கிடையாது.மீள் குடியேற்றம் கூட ஒழுங்கான முறையில் இன்னும் இடம்பெறவில்லை அகதி வாழ்க்கையும் தரப்பால் வாழ்க்கைக்கும் இன்னும் முற்றுப்புள்ளி இல்லை.எமது மக்கள் என்ன பாவம் செய்தார்கள் முட்க்கம்பி வாழ்க்கைக்கு எப்போது விடிவு கிடைப்பது.இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்ப்பார்க்க முடியாது.

மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய வரலாற்று தருணமிது .தமிழ் மக்கள் சரியான பாதையை நோக்கி தமது அரசியல் பயணத்தை தொடரவேண்டும்.தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சரியான பாதையில் மக்களை அழைத்து செல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.

தாங்கள் சேர்ந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கோட்பாடு என்ன அதனை எவ்வாறு முன்னெடுத்து செல்லப்போகிறீர்கள்?

எமது முன்னணி தமிழ்தேசத்திற்கான சுயநிர்ணய உரிமை உண்டு.இலங்கை தீவின் வடகிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம். தமிழர்கள் தனித்துவமான இனம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எமது முன்னணி தமது பயணத்தை இப்பாராளுமன்ற தேர்தலினூடாக பயணிக்கின்றது.நான் இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் வன்னி மக்களின் குரலாகவும், தமிழ் மக்களின் குரலாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பேன் இதற்காக எந்தவித சுயநலமும் இல்லாது உழைப்பேன் என்று உறுதி மொழி எடுக்கின்றேன் .

தற்போது இங்குள்ள தேர்தல் பிரச்சார முன்னெடுப்புகள் எவ்வாறு உள்ளது ?

தமிழ் மக்கள் இன்று பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக யுத்தத்தாலும், இடம்பெயர்வாலும் வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவிற்கு துயரங்களை அனுபவித்துகொண்டு இருக்கின்றார்கள்.இந்த நிலையில் சில கட்சி வேட்பாளர்கள் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற நோக்கில் நடுநிலைமை தவறுகின்ற சில இணையதளங்களின் வாயிலாகவும் ஏனைய வழிகளிலும் மிகவும் அநாகரிகமான முறையில் எதிர் வேட்பாளர்களை கேவலப்படுத்தி அரசியல் நடத்துவது வருந்தத்தக்கதும் வெட்கப்படவேண்டிய விடயமும் ஆகும்.

குறிப்பாக இன்றைய சூழ்நிலையை பாருங்கள் எம் மக்கள் ஒரு தேர்தலை எதிர் நோக்கும் சக்தியற்றவர்களாக இருக்கின்றார்கள் இவர்கள் முன் வேட்பாளர்கள் தமது கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் கொண்டு செல்லவேண்டும்.அதனை விடுத்து எதிர்வேட்பாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இல்லாதவற்றை கூறி பிரச்சாரம் செய்வது கேவலமான அநாகரிகமான செயலாகும்.

எமது மக்கள் பணம் படைத்தோரின் அற்ப சொற்ப சலுகைகளிட்கு அடிபணியாதவர்கள்.எமது மக்களிற்கு எது உண்மை என்பது தெரியும்.எம் மக்களின் வாழ்வு மறுமலர்ச்சியடைய வேண்டும் இத்தேர்தலில் அளிக்கப்போகும் ஒவ்வொரு வாக்கையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

தங்களின் தேர்தல் தொகுதியான கிளிநொச்சி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்களின் முன்னேற்றம் கருதி எவ்வாறான சேவைகளை ஆற்றுவீர்கள்?

முதலில் எம் மக்களை சரியான முறையில் மிக விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.அதற்கு மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேற வேண்டும்.சரியான சிவில் நிர்வாகம் எமது பகுதியில் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னிடம் பல திட்டங்கள் என்னிடம் உண்டு. சரியான முறையில் அரசியல் பயணத்தை தமிழ் கட்சிகள் தொடருமானால் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு கிட்டும்.

எமது மூத்த தலைவர்கள் சுயநலப்போக்கில்
செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

எமது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அதனை சரிப்படுத்தி சரியான பாதையில் இட்டுச்செல்லும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.இந்த நோக்கில் முன்னணியின் அங்கமான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் 1ம் இலக்கத்தில் போட்டியிடும் என்னையும் எனது முன்னணியையும் வாக்களித்து வெற்றி பெறச்செயுங்கள் என வேண்டி நிற்கின்றேன்.

Comments