தந்திரோபாயக் கூட்டிற்கு தயாராகிறதா இந்தியா?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரச தரப்பினர் பாரிய வியூகங்களை அமைத்து வருகின்றனர். 13ஆவது, 17ஆவது திருத்தச் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது உட்பட பல நிகழ்ச்சி நிரல்கள் மூன்றில் இரண்டில் உள்ளடக்கப்படுகின்றது.

அதேவேளை, மேற்குலகின் ஊடாக பிறிதொரு நெருக்கடிக்களமொன்று அரசை நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, மந்த கதியில் செயற்பட்ட ஐ.நா. தற்போது சிறப்பு நிபுணர் குழு அமைக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சிங்கள தேசத்தினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்ட பின்னர் மேற்குலக கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.
அந்த இடைவெளியை நிரப்பிட ஐ.நா. சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகமொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டுமென்று ஜோன் ஹோம்ஸ் அன்று அறிவித்திருந்தார்.

அதனை தென்னிலங்கையில் எல்லோரும் கூட்டிணைந்து எதிர்த்தார்கள். அவ்வாறான கண்காணிப்புக் குழுவொன்றினை தமது அரசு அமைக்குமென்றும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அனுசரணையும், புலமைசார் அறிவுரைகளும் இருந்தாலே போதும் என்கிற எதிர்வாதமும் முன்வைக்கப்பட்டது.

காலப்போக்கில் ஐ.நா. கண்காணிப்பகக் கதைகளும் மௌனித்து விட்டன. போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற கொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளிற்கான நிபுணர் குழுவொன்றை அமைக்க வேண்டுமென்பதன் ஊடாக இவ் விவகாரம் மறுபடியும் ஐ.நா. சபையில் முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமை பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் அழுத்தங்களின் காரணமாக இக்குழு அமைக்கும் விவகாரம் மேலோங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இறைமையுள்ள தேசங்களின் ஒன்றுகூடும் மையான ஐ.நா. சபைக்கு இது குறித்து குழு அமைப்பதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கு உரிமை உண்டென பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாதிடுகிறார். இங்கு "இறைமை' என்கிற பதத்தின் வரையறை குறித்து சிங்கள தேசமும், பான் கீ மூனும் பனிப்போர் நிகழ்த்துவதை அவதானிக்க வேண்டும். பூர்வீக தேசிய இனமொன்றிற்கு இறைமை, சுயநிர்ணய உரிமை உண்டு என்கிற ஐ.நா. சபை சாசன விதிகளை தவிர்த்தவாறு சிங்கள தேச இறைமை குறித்து பொதுச் செயலாளர் பேச முற்படுவதையும் கவனத்தில் கொள்ளலாம்.

ஆயினும் இப்புதிய நகர்வில், வழமைபோல் நழுவல் போக்கினை ஐ.நா. கடைப்பிடிக்குமா அல்லது உறுதியாகவிருக்குமாவென்பதை உலக வல்லாதிக்க நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்று கணிப்பிடலாம். ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இரத்துச் செய்யும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய உயர்மட்ட அமைச்சர்களின் பிரசன்னம், மூன்றாம் கட்ட நிதி வழங்கலில் சர்வதேச நாணய நிதியம் போடும் நிபந்தனைகள் போன்றவற்றோடு, நிபுணர்குழு அமைக்கும் விவகாரத்தையும் பொருத்திப் பார்த்தால் மேற்குலகின் இராஜதந்திர நகர்வினை புரிந்து கொள்ளலாம்.

இந்நகர்விற்கு எதிராக சிங்கள தேசத்தின் பக்கமாக நிலை எடுத்துள்ள செயலற்றுக் கிடந்த அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பும் போர்க் கொடி தூக்கியுள்ளது. இலங்கை விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தில் இரண்டு முகாம்கள் தோற்றம் பெறுவதனை இச் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
ஆனாலும் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு ரில்லியன் பொருளாதாரத்தை கொண்ட இந்திய தேசமானது எவ்வகையான தந்திரோபாயக் கூட்டினை முன்னெடுக்கப் போகிறது என்பதாகும்.

உலக வளங்களைப் பங்கிடுதலில் ஏற்பட்டுள்ள போட்டி சீனாவின் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில் தாக்கங்களை உருவாக்குமென்று இந்தியா உணர்கிறது. முரண்பாடுகள் தணிவடைவதற்கு ஆசியாவின் இரண்டாம் நிலையிலுள்ள அணு ஆயுத பொருண்மிய பலம் கொண்ட இந்தியாவின் அனுசரணையும் தற்காலிக கூட்டு உறவும் தேவை என்பதை சீனா புரிந்து கொள்ளும்.

இத்தகைய பிராந்திய நலன் சார்ந்த தந்திரோபாய இணைவு, சிங்கள தேசத்தை பலப்படுத்த உதவும் என்பதை மறக்க முடியாது.

தற்போது சீன மக்கள் பேரவையின் மாநாட்டில் பொருளாதார இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்படும் விடயங்கள் பற்றியே இந்தியாவும் மேற்குலகும் அதிக கரிசனை கொள்கின்றன.
இந்தியாவை சுற்றி முத்துமாலை போன்று கோக்கப்பட்டும், குவாடர், அம்பாந்தோட்டை, சிட்டகோங், சிட்வே துறைமுகங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனாலும், தென்சீனக் கடலிலுள்ள சன்யா அணு ஆயுத ஏவுகணைகளைத் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் தளம் போன்று இன்னுமொரு கடற்படைத் தளத்தினை இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் சீனா நிர்மாணிக்க முற்படலாமென்கிற பேரச்சமே இந்திய மேற்குலகை வாட்டி வதைக்கிறது.

அண்மையில் வெளியிட்ட கட்டுரையொன்றில் இந்திய ஆய்வாளர் பாஸ்கர் ரோய் சீனாவின் இராணுவ தொழில்நுட்ப விரிவாக்கம் குறித்து விரிவான பல தகவல்களை வழங்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு, சீனா ஒதுக்கிய நிதி 78.25 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இது ஏறத்தாழ 7.5 சதவீத நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பாகும். சீனாவின் தேசிய மொத்த உற்பத்தியில் 1.4 சதவீதமும் தேசிய பாதீட்டில் 6.3 சதவீதமும், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டளவில் சந்தைப் பொருளாதார முறைமையை ஏற்றுக்கொண்ட சீனா, மக்கள் விடுதலை இராணுவத்தை வர்த்தகமயமாக்கி விட்டதென்கிற பார்வை, பல இராணுவ, அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுவதை உணரலாம்.

இதன் எதிர்விளைவுகள், இராணுவக் கட்டமைப்பில் ஊழல்களை உருவாக்குவதால் படைத்துறை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, சரியாகக் கையாளப்படுமாவென்கிற அச்சம் சீன அரச உயர்மட்டத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 80களில் முன்னெடுக்கப்பட்ட, அணுஆயுதம் தாங்கிய 093, 094 வகை ஏவுகணைகளை கொண்டு செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைக்கும் திட்டம் 2004 2006 ஆண்டளவில் பூர்த்தியாகி இயங்கு நிலையை அடைந்துள்ளது.

அத்தோடு ஜனவரி 2007இல் பாதுகாப்புச் செயற்கைக்கோள் ஒன்று நிலத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்ட நிகழ்வு, விண்வெளி யுத்த களத்திற்கு, சீனா தன்னை தயார்ப்படுத்தி வருவதை உணர்த்தியது.

இதைத்தவிர சைபர் தாக்குதல்கள், கதிரியக்க யுத்த உபகரணங்கள் மற்றும் லேசர் ஆயுதங்கள் என்பவற்றிலும் தனது ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றினை உருவாக்கும் பலத்தையும் சீனா பெற்றுள்ளது. இவற்றோடு ஒப்பிடும் போது, இந்தியாவின் அதியுயர் ஆயுதமாக 3500 கி.மீற்றர் வீச்செல்லை கொண்ட அணு ஆயுதம் தாங்கிய அக்னி ஏவுகணையினை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆகவே, தனது பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு பொருளாதாரக் கட்டுமானங்களை விரிவாக்குவதற்கும் அணு விரிவாக்க தொழில்நுட்பங்களுக்கும் மேற்குலகில் தங்கியிருக்கும் அவசியம் இந்தியாவிற்கு ஏற்படுவதை அவதானிக்கலாம்.

உலக உணவுத் திட்டத் தகவலின்படி பட்டினியால் வாடும் உலக மக்களின் 50 சதவீதமானோர் இந்தியாவில் வாழ்கின்றார்கள். இந்நிலையில் 6.7 சதவீத பொருளாதார வளர்ச்சி அத்தோடு உலகின் முதல் பத்து நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது என்கிற விவகாரங்களெல்லாம் மக்களின் வாழ்வாதார உயர்வு இல்லாதவிடத்து வெறும் பேச்சுப் பல்லக்கு கதையாகவே அமைந்து விடும். சீனாவுடன் ஏற்படும் ஆதிக்கப் பனிப்போர், தேசிய மொத்த உற்பத்தியின் பெரும் பகுதியை ஆயுத உற்பத்திக்குள் முடக்கி விடும். இந்நிலையில், இலங்கையில் சீனாவின் பொருண்மிய முதலீட்டு ஆதிக்கத்தை முறியடிக்க தொடர்ச்சியாக பல கடனுதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருவதைக் காணலாம்.

தென்பகுதி புகையிரத சேவை அபிவிருத்திக்கு மேலதிக கடனுதவியாக 100 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா இரண்டாம் கட்டமாக 67.4 மில்லியன்களை வழங்கவிருக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக அதே புகையிரத சேவை விரிவாக்கத்திற்கும், மாத்தறை விமான நிலைய கட்டுமானங்களிற்குமாக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது எக்சிம் வங்கியூடாக சீனா உதவுகிறது. 2009ஆம் ஆண்டிற்கான சீனாவின் நிதியுதவி 1.2பில்லியன் டொலர்களை தாண்டி விட்டதாக கூறப்படும் செய்தி அனைத்துலக நாணயச் சபைக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். தன் பங்கிற்கு 42.4 மில்லியன் டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, மேற்குலகின் அழுத்தங்களுக்கு சிங்கள தேசம் அதிர்ந்து போகாது என்பதனை உணர மேற்குறிப்பிட்ட முதலீட்டுத் தரவுகள் போதுமானது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் இந்திய சீன நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு அமையுமென்பதை மேற்குலகும் கூர்ந்து கவனிக்கும். ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றக் கதிரைகளை அதிகமாக நிரப்பும் வாய்ப்பு இத்தேர்தல் மூலம் உருவாகுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் தமிழர் தாயக அரசியல் நிலைமை மிகவும் சிக்கலானதொரு நிலை நோக்கி நகர்கின்றது.

நூற்றுக்கணக்கான சுயேட்சைக் குழுக்களும் ஓரணிக்குள் ஏற்பட்ட பல பிரிவுகளும் ஆளும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்களும் தமிழ்த் தேசிய அரசியலின் பலமிக்க தளமொன்றை சிதைத்து விடலாம்.

அதேவேளை, சிங்களதேசத்தின் அடுத்த தேர்தல் அறிவித்தல், தமிழர் அரசியல் தளத்தினை மேலும் பலவீனமடையச் செய்யும் விடயமாக அமையப் போகிறது. அதுதான் வடமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு. வடக்கின் வசந்தம், மாகாண சபை மாளிகையாக நிர்மாணிக்கப்படப் போகிறது. இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகிறது. வடமாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளுமா என்கிற கேள்வியும் எழுகிறது. வட மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்தால் அரச சார்ப்புக் கட்சி ஆட்சியில் அமர்ந்து விடுமென இப்போதே சிலர் வாதம் புரிகிறார்கள். அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொண்டால் இணைந்த தாயகக் கோட்பாட்டை கைவிட்டது போலாகி விடுமென வேறு சிலர் எச்சரிக்கிறார்கள்.

ஆகவே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற கோட்பாடுகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த கூட்டமைப்பு, பிரிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான சபைத் தேர்தலில் பங்குகொள்ளுமா, இல்லையா என்பதை இப்போதே தெரிவிக்கலாம். வேளைவரும் போது சிந்திக்கலாம் என்கிற விடயமல்ல இது. அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வடக்குகிழக்கு தமிழர் பிரதிநிதித்துவம் குறைவடைந்து எந்தவொரு தமிழ் தேசிய அணிக்கும் பேரம் பேசும் அரசியல் வலு அற்றுப் போனால் சிங்கள தேசத்துடனான இந்தியாவின் தந்திரோபாயக் கூட்டு புதிய பரிமாணமெடுக்கும்.

அதாவது கூட்டமைப்பின் வேண்டுகோள்களை செவிமடுக்கும் அவசியமும் இந்தியாவிற்கு இருக்காது. கிழக்கு மாகாண சபை மற்றும் புதிதாக உருவாகும் வட மாகாண சபை ஊடாக அபிவிருத்தி, மீள்கட்டமைப்பு புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அதேவேளை, தாயக மக்களின் இனப் பிரச்சினை, மாகாண சபை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்தியா அறிவிக்கும்.

இந்த நிலை நோக்கியே இந்திய இலங்கை தந்திரோபாயக் கூட்டு நகரப் போகிறது.

- இதயச்சந்திரன்

Comments