ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி

தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி



தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னிணியின் சார்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய நான் எனது கொள்கை நிலைப்பாடு பற்றியும், என்மீது சேறு பூசும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் வதந்திகள் தொடர்பாகவும், எனது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டமைப்பு தலைமையின் தவறான நடவடிக்கைகள் காரணமாக நாம் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டமை தொடர்பாகவும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிப்பட்டமைக்கு காரணம்

த.தே.கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிரிணய உரிமை ஆகியவற்றில் உறுதியாக நின்றமையினாலும், கொள்கையை கைவிட்ட கூட்டமைப்பு தலைமையின் தீர்மானங்களுடன் உடன்பட மறுத்தமையினாலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை உறுதியாக ஆதரித்தமையினாலும், நாங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்வர்கள் என்ற காரணத்தினாலும், கூட்டமைப்பு தலைமைகளுக்குப் பின்னால் உள்ள சில வலிமை மிக்க சக்திகளின் ஆலோசனைகள் காரணமாகவும் நாங்கள் கூட்டமைப்பு தலைமையினால் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டோம்.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான வரைபு ஒன்றினை தயாரித்திருந்தனர். அந்த தீர்வுத்திட்டமானது அடிப்படை அரசியல் கொள்கைகளான தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை மறுதலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்வுதிட்டமானது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகளிலேயே அமைய வேண்டும், அதனை கைவிட முடியாது என்ற நிலைப்பாட்டை நானும், கNஐந்திரகுமார் பொன்னம்பலம், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தோம்.

2009 டிசம்பர் மாதம் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எங்களது ஆலோசனைகளை உள்ளடக்க முடியாது என்றும் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், ஆகிய கொள்கைகளை கடைப்பிடிப்பதை இந்தியா விரும்பாது என்றும் இந்தியா விரும்புவதையே தீர்வுத்திட்டமாக முன்வைக்க முடியும் என்றும் உறுதிபடக் கூறிவிட்டது. மேலும் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டமே இறுதியானது என்றும் அதனையே முன்வைப்போம் என்றும், எங்களது ஆதரவு இல்லாவிட்டாலும் அதனை முன்வைத்தே தீருவோம் என்றும் அடித்துக் கூறியது.

ஒற்றுமையை பாதுகாக்கவே த.தே.கூ இன் தலைமைகளது தவறான நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லை.

மக்களைப் போலவே நாங்களும் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பினோம். அதன் காரணமாக மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கூட்டமைப்புத் தலைமையை கொள்கையை ஏற்றுக் கொள்ள வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தோம். அதற்காக இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் த.தே.கூ இன் தேர்தல் விஞ்ஞானபத்தில் அடிப்படை அரசியல் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையிலே தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும், தேர்தலில் வென்ற பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் மேற்படி கொள்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளினதும் உத்தியோக பூர்வமான அனுமதியுடனேயே சமர்ப்பிக்கப்படும் என்ற எழுத்து மூலமான உத்தரவாதத்தினை பெறுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடுமையாக முயற்சி செய்தார். எனினும் அவ்வாறான எழுத்து மூலமான உத்தரவாதம் எதனையும் தரமுடியாது என கூட்டமைப்பு தலைமை மறுத்து விட்டது. அத்துடன் கொள்கைகளை கைவிட்டு ஒற்றுமைக்காக கூட்டமைப்பினுள் இருக்கும்படி வலியுறுத்தினர். கூட்டமைப்பின் ஒற்றுமையை கொள்கை அடிப்படையில் உறுதியாக நின்று கட்டிக்காக்க நாம் எவ்வளவோ முயன்றும் அதன் தலைமைகள் ஒத்துழைக்கவில்லை. இந் நிலையில் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையை நன்கு தெரிந்த நிலையில் மக்களுக்கு இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை எங்களுக்கு எழுந்தது.

கொள்கைப் பற்றுள்ள மக்களுக்கு கொள்கை அடிப்படையில் வாக்களிக்கும் வாய்ப்பை அளிப்பதற்காகவே தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்காது போட்டியிடத் தீர்மானித்தோம்.

ஆரம்பத்தில் மேற்படி கூட்டமைப்பின் கொள்கை தவறிய நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவு படுத்திவிட்டு ஒதுங்கியிருக்கலாம் என்று யோசித்தோம். எனினும் கூட்டமைப்புத் தலைமைகள் மீண்டும் வழி தவறிச் செல்வதனை இனம் கண்டு அவர்களை நிராகரிக்க விரும்பும் மக்களுக்கு மாற்றுத் தெரிவுக்கான வாய்ப்பு ஒன்றினை வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாங்கள் போட்டியிடத் தீர்மானித்தோம்.

மாறாக நாங்கள் கூட்டமைப்புத் தலைமைகளின் தீர்மானங்கள் எதனையும் ஆட்சேபிக்காமால், எல்லாவற்றுக்கும் தலையசைத்து சம்மதம் தெரிவித்திருந்தால் கூட்டமைப்பில் போட்டியிட எங்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால் 150000 திற்கும் அதிகமான மக்களும், 40000 திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளும் உயிர்த்தியாகம் செய்த தமிழ்த் தேசியக் கொள்கையை விற்று பதவியை பெற நாங்கள் விரும்பவில்லை.

விடுதலைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்பதை நிரூபிக்கவே குடாநாட்டில் இருந்து வன்னிக்குச் சென்றோம்.

2002 – 2006 ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட முன்னரும் பின்னரும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்ட நாள் தொடக்கம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு வலிவடக்கு உட்பட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும், கடல்வலயத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு மீனவர்கள் சுதந்திரமாக மீன்படிக்க அனுமதிக்கப்படல் வேண்டுமெனவும், மாணவர்களது சுமூகமான கல்விக்கான சூழல் உருவாக்கப்படல் வேண்டுமெனவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டுமெனவும், சிறைக் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தி உறுதியாக குரல் கொடுத்து வந்திருந்தோம். இச் செயற்பாடுகளை மக்களது தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் அமைவாகவே மேற்கொண்டிருதோம்.

2006 ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்த சூழல் ஒன்று உருவாகியது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதம் என்று கூறி இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளையும், அவர்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்த வன்னிப் பிரதேசத்தில் வாழந்த இலட்சக்கணக்கான மக்களையும் தனிமைப்படுத்தியது. அங்கு சர்வதேச இராஐதந்திரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், வெளிநாட்டு உள்நாட்டு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாதவாறு தனிமைப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களது ஆதரவுடன் பாராளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்குச் செல்வதனை தவிர்ப்பதன் மூலம் இலங்கை அரசின் பொய்ப் பிரசாரத்திற்கு துணை புரியக் கூடாது என்ற நிலையில் 2006 ம் ஆண்டு முற்பகுதியில் சில தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் எனது குடும்பத்தினரும் வன்னிக்குச் சென்று அங்கு தங்கியிருந்தோம்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி வன்னியை தனிமைப்படுத்தி யுத்தத்தை ஆரம்பித்த பொழுது நாங்கள் வன்னிக்குச் செல்லாது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்திருந்திருக்கலாம். அவ்வாறு இருந்திருந்தாலும் கூட எங்களது உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்காது. ஏனெனில் புலிகளின் அமோக ஆதரவில் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட ஸ்ரீலங்கா அரசு கூறுவது போன்று விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் புலிகளுக்கு எதிராக அரசு ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமே தமக்குப் பாதுகாப்பானது என்றும் கருதி அங்கு தங்கியுள்ளனர் எனவும் பிரசாரம் செய்து வன்னி மக்கள் மீதான போரையும் இனப்படுகொலையையும் சர்வதேச ரீதியில் நியாயப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு நாம் சந்தர்ப்பம் வழங்கியவர்களாக இருந்திருப்போம். அவ்வாறான ஒருவிடயம் அரசுக்கு அரசியல் ரீதியாக மிகவும் சாதகமானது என்பதால் நிச்சயம் எமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது.

இவ்வாறான ஓர் பிரசாரத்திற்கு இடமளிக்க கூடாது என்ற காரணத்திற்காக தேசியத் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் வன்னிக்குச் சென்று தங்கியிருந்தோம். அதன் காரணமாக நாம் யாழ்குடாநாட்டு மக்களுடன் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

வன்னியில் நாம் மிகுந்த இடர்களை எதிர்கொண்டோம். வன்னி மீதான பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, எரிபொருள் தடை, கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதல்கள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை, மின்சாரவசதியின்மை, தொலைத்தொடர்பு வசதியின்மை என அடிப்படை வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. யுத்த சூழல் ஒன்றில் வன்னிப் பிரதேசம் எவ்வளவு நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என்பதனை நான் நன்கு அறிவேன். 1993 ம் ஆண்டில் முல்லைத்தீவில் வசித்த பொழுது வன்னி மீதான அரசின் திட்டமிட்ட மருந்துத் தடை காரணமாக எனது தந்தையாரை இழந்தேன். தந்தையார் பாம்புக்கடிக்கு இலக்காகிய பொழுது மருத்துவ வசதி இன்மையால் இறந்தார். யுத்த சூழல் எப்படி இருக்கும் என்பது நன்கு தெரிந்த நிலையிலும் மீண்டும் யுத்த சூழல் நெருங்கிய பொழுது உரிமைப் போராட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வன்னிக்குச் சென்று நெருக்கடி மிகுந்த யுத்த சூழலிலும் கூட நாம் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற வன்னி மண்ணில் 2008 நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை தங்கியிருந்தோம். ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டு வந்த யுத்தம் நிறுத்தப்படல் வேண்டுமெனவும், பொது மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டுமெனவும், இராணுவம் பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டுமெனவும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் இடம்பெற வேண்டுமெனவும் உறுதியாகவும், துணிச்சலுடனும் குரல் கொடுத்து வந்தோம்.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வன்னியில் இடம் பெற்ற கொடூர யுத்தத்தை நிறுத்தி மக்களையும் போராட்டத்தினையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க வெளி நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களால் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அங்கு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அதே போன்று 2008 நவம்பர் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காகவும், வன்னி மீது இடம் பெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து ஐனாநயக ரீதியான போராட்டங்களை நடாத்தி சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களிலும் ஈடுபடுவதற்காகவும் 2008 நவம்பர் மாத இறுதியில் நான் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

போரை நிறுத்தக் கோரி உலகம் முழுவதிலும்; வாழும் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த நாடுகளில் தொடர் போராட்டங்களை இரவு பகல் பாராது மேற்கொண்டனர். இச் செயற்பாட்டில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து அற்பணிப்புடன் ஈடுபட்டு போராட்டத்தினையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு இறுதிவரை முயன்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர் என்ற வகையில் இது எமக்கு தலைமையினால் தரப்பட்டிருந்த பணியாகும்.

மாணவர்கள் கடத்தப்பட்ட பொழுதெல்லாம் உரத்துக் குரல் கொடுத்தோம்.

பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட ஒவ்வொரு சந்தற்பத்திலும் நான் அதற்கெதிராக பாராளுமன்றிலும் பாராளுமன்றுக்கு வெளியிலும் உறுதியாக குரல் கொடுத்து வந்தேன். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கடத்தப்பட்ட ஒவ்வொரு சந்தற்பத்திலும் நான் அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பாக உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை அக்கறையுடன் மேற்கொண்டிருந்தேன்.

நான் கொள்கையில் உறுதியாகவும், நேர்மையாகவும் இருந்து அனைத்து கடத்தல்கள் கொலைகள் உள்ளிட்ட மகிந்த அரசின் இனப்படுகொலை யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தமையினாலேயே எனது சகோதரர் கடத்தப்பட்டார். இல்லாவிட்டால் அவர் கடத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது. எனினும் நான் தொடர்ந்து மக்களுக்காகவும், விடுதலைக்காகவும் துணிந்து குரல் கொடுத்து வந்தேன்.

யுத்தகாலத்தில் ஊடகங்கள் மீது சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறைகள் உச்சத்தில் இருந்தமையினால் எமது செய்திகளை பிரசுரிக்க முடியாதளவுக்கு ஊடகங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக எமது செயற்பாடுகள் தொடர்பாக குடாநாட்டிலுள்ள மக்களோ, மாணவர்களோ அறிந்து கொள்ள முடியாமல் போனமை துரதிஸ்டவசமானது.

நான் இலங்கை திரும்ப முடியாதளவுக்கு எனக்கு எதிராக சட்டப்பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுவதிலும், இலங்கை திரும்புவதற்காக ராஐபக்சேக்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்தேன் என்றும் கூறும் குற்றச் சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை.

கடந்த 2008 டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய nஐயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், நான் உட்பட்ட மூவருக்கு எதிராக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறையினரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நான் முன்னர் குறிப்பிட்டபடி மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுவதற்காக நவம்பர் 2008 ல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் டிசம்பர் 2008 இல்; வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மட்டும் இலங்கையில் இருந்தார். Nஐர்மனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்துக்களை கூறியதாகவும் அது அரசியல் அமைப்பை மீறும் செயல் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு அரசியலமைப்பின் 6 ம் திருத்தச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

எமக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களானது புதினம்.கொம் என்ற இணையத்தளத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அந்த ஆதாரத்தினை விட வேறு எந்தவிதமான ஆதரங்களும் அரசிடம் இருக்கவில்லை. அந்த இணையத்தளமானது உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உத்தியோக பூர்வமான, அங்கீகரிக்க்பபட்ட செய்தி ஊடகம் அல்ல.

அரசியல் அமைப்பை மீறும் குற்றச் சாட்டுத் தொடர்பான எந்தவொரு வழக்கும் இலங்கையின் உச்ச நீதிமன்றிலேயே(சுப்றீம் கோட்) தாக்கல் செய்ய முடியும். ஆனால் எமக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நீதிமன்றுக்கு குறித்த வழக்கை விசாரிப்பதற்கான எந்தவிதமான சட்ட அதிகாரமும் கிடையாதென எனது தரப்பில் ஆஐராகிய சட்டத்தரணி திரு.தவராஐh அவர்கள் வாதிட்டதுடன் தனது தரப்பினருக்கு எதிரான அந்த வழக்கை தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிற்கு வந்து சுதந்திரமான முறையில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். நீதவான் நீதிமன்றுக்கு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லாமல் இருந்மையினாலேயே அந்த வேளையில் இலங்கையில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஆனாலும் எம்மை அச்சுறுத்தி செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது குறித்த வழக்கை மீறப் பெற்றுக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தது. எனினும் ஒருவருடங்கள் கழிவதற்கு முன்னர் நீதவான் நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தாக வேண்டும் என்ற நிலையில் 2009 ஒக்டோபர் 25 ம் திகதி சிஐடி யினரால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

சட்ட ரீதியாக எனக்கு எதிராக இருந்த ஒரே ஒரு குற்றச்சாட்டு அதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு இதுவேயாகும். அந்த வழக்குத் தள்ளளுபடி செய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு திரும்புவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

வழக்கு முடிவடையும் வரை இலங்கை திரும்ப முடியாத நிலையில் வெளிநாட்டில் தங்கியிருந்து வன்னியில் இடம் பெற்ற போரை நிறுத்தவும், யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் இடம்பெற்ற கடத்தல்கள் கொலைகளை தடுத்து நிறுத்தவும் புலம்பெயர்;ந்து வாழும் மக்களுடன் இணைந்து இராஐதந்திர ரீதியாக அழுத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம்.

2008 நவம்பர் நடுப்பகுதி வரை வன்னியில் தங்கியிருந்தேன். அக்காலப் பகுதிவரை எனக்கெதிராக இலங்கையில் எவ்வித சட்டரீதியான குற்றச் சாட்டுக்களும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நான் வெளிநாடு செல்ல முன்னரே கைது செய்யப்பட்டிருப்பேன்.

அதனை விடவும் நான் இலங்கை திரும்பியது 2009 நவம்பர் 28 ம் திகதி. அப்பொழுது ஐனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு சரத்பொன்சேகாவும், மகிந்தராஐபக்சவும் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரங்களும் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அது வரைகாலமும் தமிழ் மக்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் பரம விரோதிகளாக இரண்டு தரப்புமே கருதி செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் மகிந்தவுக்கும் சரத்பொன்சேகாவும் இடையில் முறுகல் ஏற்பட்டு சரத்பொன்சேகாவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவருக்கு நம்பிக்கையான இராணுவத் தளபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகளை விடவும் சரத்தும் மகிந்தரும் ஒருவரை ஒருவர் பரம எதிரிகளாக கருதி ஒருவரை ஒருவர் பழிவாங்கும் எண்ணத்தில் அதிகாரத்திற்காக போட்டியிடத் தொடங்கியிருந்தனர்.

அப்போதிருந்த நிலையில் மகிந்தராஐபக்ச தோல்வியை தழுவக் கூடும் என்றும் பொன்சேகா பதவிக்கு வந்து மகிந்தரின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப் போகின்றார் என்ற கணிப்பும் மேலோங்கியிருந்தது. போர் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

தனது வெற்றி தொடர்பாக மிகவும் அச்சம் ஏற்பட்ட காரணத்தினாலேயே தமிழ் மக்களின் வாக்குகளை கவர வேண்டிய தேவை மகிந்தருக்கு எற்பட்டது. 2009 ஏப்பிரல் மாதத்தில் இருந்து இலட்சக்கணக்கான மக்களை ஈவிரக்கம் இன்றி முகாம்களில் அடைத்துவைத்து தினமும் விசாரணை என்ற பெயரில் பல்லாயிரம் பேரை கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்தது அரசு. பல வருடங்களுக்கு மக்களை அங்கேயே அடைத்து வைக்கும் நோக்கிலேயே அவர்களது நடவடிக்கை நகர்ந்தது. எனினும் எதிர்பாரத விதமாக சரத்பொன்சேகா தேர்தலில் களமிறங்கியதால் நிலைமை தலை கீழாக மாறியது. மகிந்தவுக்கு தான் தேர்தலில் தோல்வி அடையப் போகின்றேன் என்ற பீதி பற்றியது. அந்தச் சூழ்நிலையிலேயே தமிழ் மக்களது வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக பெருமளவான மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு மகிந்தருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருந்த தேர்தல் கால அரசியல் சூழலில் என் மீது சட்டரீதியான குற்றச் சாட்டுக்கள் எதுவும் அற்ற நிலையில் நான் இலங்கை திரும்புவதற்காக யாருடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

அவ்வாறு ஒப்பந்தம் செய்துதான் நான் இலங்கை திரும்ப வேண்டும் என்ற தேவை ஏற்பட்டிருந்தால் இவ்வளவு உயிர்த்தியாகங்களின் பின்னர் அந்தக் கேவலமான ஈனத்தனமான செயற்பாட்டை நான் ஒரு போது செய்திருக்கமாட்டேன் அதனிலும் பார்க்க நான் வெளிநாட்டில் அகதித் தஞ்சம் கோரியிருக்க முடியும்.

நான் 2008 நவம்பர் வரை இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அரசுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களை வெளியிட்டது பாராளுமன்ற விவாதங்களின் பொழுதேயாகும். பாராளுமன்ற விவாதங்களின் பொழுது பாராளுமன்றில் ஆற்றப்படும் உரை தொடர்பாக எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் அதற்கு இடமளிக்காது. இந் நிலையில் என் மீது எத்தகைய சட்ட ரீதியான குற்றச் சாட்டுக்களும் இல்லாத நிலையில் நான் இலங்கை திரும்புவதில் சட்ட ரீதியான பிரச்சினைகளும் இருக்கவில்லை. அரசுக்கு எவ்வளவு ஆத்திரம் என் மீது இருந்தாலும் அதற்குப் பழிவாங்க இரண்டு வழிகளையே கையாள முடியும்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தல்.
இனந்தெரியாத முறையில் படுகொலை செய்தல்.

முதலாவது வழிமுறைக்கு நான் வாய்ப்பளிக்காத நிலையில் இரண்டாவது வழி முறையே அவர்களுக்குச் சாத்தியமானது. அதனை எப்போதும் அவர்கள் செய்யலாம். அதற்கு நான் அதிகம் அஞ்சுபவன் இல்லை. அதனாலேயே 1995 ற்குப் பின்னர்; மரண பயத்தில் உறைந்து போயிருந்த யாழ்ப்பாண சமூகத்தில் நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் எனது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் நானும் இன்னும் பலநூறு மாணவர்களும், சில விரிவுரையாளர்களும் துணிச்சலுடன் செய்ப்பட்டு 1999 – 2002 வரையான காலத்தில் பல்கலைக்கழக சமூகம் மத்தியிலும், ஏனைய உயர் கல்வி மாணவர்கள் மத்தியிலும், பொது அமைப்புக்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டி எழுப்பி அதனூடாக யாழ் குடாநாட்டில் அடக்கு முறைக்குள் ஒடுங்கியிருந்த மக்களை பேரெழுச்சி கொள்ளச் செய்ய முடிந்தது. அந்தச் செயற்பாட்டினூடாக உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் பேரெழுச்சியை உண்டுபண்ண முடிந்து. அன்றய காலத்திலும் நிமலராஐன் போன்ற பலர் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனையும் தாண்டி நாங்கள் எங்கள் உயிர்களை பணயம் வைத்து தேசத்திற்காக உழைத்தோம்.

2000 ஆம் ஆண்டு ஆனையிறவு யுத்த காலத்தில் பளை, சோரன்பற்று, மாசார், தருமக்கேணி, வண்ணாங்கேணி உள்ளிட்ட பல கிராம மக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களை வெளியேறவிடாது இராணுவம் தடுத்து மனிதக் கேடயங்களாக வைத்திருந்தது. அவர்களை விடுவிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த நாங்கள் அன்று துணிந்து போராட்டங்களை நடாத்தி அவர்களை மீட்டோம். நாங்கள் உயிருக்கு அஞ்சியிருந்தால் அன்று அந்த மக்களை காப்பாற்றியிருக்க முடியாது. அசாதராண துணிச்சல் எங்களிடம் இருந்தது.

அந்த துணிச்சல் காரணமாகத்தான் யுத்தம் நடைபெற்ற வன்னி மண்ணில் இடைவிடாத விமானத் தாக்குதல்கள், தொடர் கிளைமோர்த்தாகுதல்கள், தொடர் எறிகணைத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, எரிபொருள் தடை என்பவற்றின் மத்தியிலும் வன்னியில் தங்கியிருக்கவும், அங்கிருந்து கொழும்புக்குச் சென்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் வன்னிக்கு திரும்பிச் செல்லவும் முடிந்தது. அத்துடன் இன்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்பட முடிகின்றது. எனது உயிர் இருக்கும் வரை கொள்கையில் உறுதியோடு செயற்பட என்னால் முடியும்.

எனது சகோதரர் கடத்தப்பட்ட பொழுது அவரை விடுவிப்பதற்காக ராஐபக்சேக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதான செய்திகள் அப்பட்டமான பொய்.

இது பற்றி வெளியான செய்தியில் எனது சகோதரர் கடத்தப்பட்டு இரண்டு நாட்களிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரைகாலமும் கடத்தப்பட்டவர்களில் யாராவது இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டார்காளா என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததுடன் நான் ராஐபக்சேக்களுடன் ஒப்பந்தம் செய்தமையினாலேயே அவ்வாறு இரண்டு நாளில் விடுவிக்க கூடியதாக இருந்ததாகவும் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

எனது சகோதரர் யாழ் பல்கலைக்கழகத்தின் நிரந்தர விரிவுரையாளர். அவர் தனது மேற்படிப்பை தொடர்வதற்காக பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கற்கைநெறிக்கால விடுமுறையில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் 2008 மார்ச் 24 ம் திகதி கடத்தப்பட்டு மிகக் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்களின் பின்னர் 2008 ஏப்பிரல் 8 ம் திகதி விடுவிக்கப்பட்டார். உண்மை இவ்வாறு இருக்க இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது நான் ராஐபக்சேக்களுடன் ஒப்பந்தம் செய்யததாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அவர் கைது செய்யப்பட்ட செய்தியும் 14 நாட்களின் பின் விடுதலை செய்யப்பட்ட செய்தியும் அனைத்து உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும்; வெளியாகியிருந்தது.

சகோதரர் கடத்தப்பட்ட பொழுது அவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யும் எண்ணம் எனக்கு இருந்திருக்கவில்லை. புனிதமான இலட்யத்திற்காக பல்லாயிரம் இளைஞர்களும் மக்களும் தங்கள் உயிர்களை தினம் தினம் தியாகம் செய்து கொண்டிருந்த நிலையில் என் சகோதரனின் விடுதலைக்காக அரசிடம் ஒப்பந்தம் செய்து அரசிடம் மண்டியிடக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன்.

எனது சகோதரர் யாழ் பல்கலைக்கழக நிரந்தர விரிவுரையாளராக இருந்த காரணத்தினால் அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினரும் ஆசிரியர்களும் கடுமையாக முயற்சி செய்திருந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் மனித உரிமை அமைப்புக்களும் கொழும்பிலுள்ள தூரகங்களும் மேற்கொண்ட கடுமையான முயற்சியினாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கை அரச படைகளால் கடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் காணமல் போயிருந்தார்கள், கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசப்பட்டிருந்தாhர்கள். அதேவேளை மேலும் பல நூற்றுக் கணக்கானோர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் யாருடைய தலையீடும் இன்றி; குற்றுயிரும் குலை உயிருமாக வீதிகளில் வீசப்பட்டனர் என்பதும் இந்த மண்ணில் வாழந்த மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறு வீசப்பட்டவர்களில் என்னுடய தம்பியும் ஒருவர்.

வன்னிப் போர் இறுதிக்கட்டத்தை அடையும் வரை எனது தாயாரும், உடன் பிறந்த சகோதரியும் அவரது ஒருமாத கைக்குழந்தையும், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் வன்னியில்தான் வாழ்ந்தார்கள். வன்னி மக்கள் அனுபவித்த அத்தனை துன்பங்களையும் கொடுமைகளையும் அவர்களும் அனுபவித்தார்கள். நான் கடந்த 2008 ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுவதற்காக வன்னியில் இருந்து கடந்த 2008 நவம்பர் நடுப்பகுதியில் கொழும்புக்குச் சென்றேன். அப்பொழுது எனது சகோதரிக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் மட்டுமே கடந்திருந்தது. நான் விரும்பியிருந்தால் எனது சகோதரியையும் அவரது குழந்தை மற்றும் கணவருடன் எனது தாயாரையும் அழைத்துக் கொண்டு கொழும்பு சென்றிருக்க முடியும். ஆனாலும் நான் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் நான் சந்தர்ப்பவாதியாக நடந்துகொள்ள விரும்பவில்லை.

இறுதியாக வன்னியில் இருந்து அனைத்தையும் இழந்து அவர்கள் நடைப்பிணங்களாக முகாமுக்குச் சென்றடைந்தனர். எனது சகோதரி தனது ஐந்து மாதங்கள் நிரம்பிய குழந்தையுடன் நவம்பர் மாதம் முற்பகுதி வரை முகாமில் இருந்து அத்தனை துன்பங்களையும் கொடுமைகளiயும் அனுபவித்தார். நவம்பர் மாத முற்பகுதியில் தேர்தலுக்காக பெருமளவு மக்கள் விடுவிக்கப்பட்ட பொழுதிலேயே எனது சகோதரியும் முகாமில் இருந்து வெளியேற முடிந்தது.

சிலர் கூறுவது போன்று 2008 ஏப்பிரல் 8 ல் தம்பி விடுவிக்கப்பட்டதில் இருந்து எனக்கு எனக்கு ராஐபக்சேகளுடன் ஒப்பந்தம் ஒன்று இருந்திருந்தால் நான் மே மாதம் உடனடியாகவே இலங்கைக்கு திரும்பி ராஐபக்சேக்களின் புண்ணியத்தில் எனது சகோதரியை முகாமில் இருந்து மீட்டு கொழும்பில் தங்க வைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான வழிமுறைகளை கையாள நான் விரும்பவில்லை அனதால் எனது தங்கை 5 மாதங்களுக்கு மேல் முகாமில் இருந்து அவலப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாங்கள் தமிழ் தேசியக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்கு எங்கள் உயிருள்ள வரை இணங்கப் போவதில்லை என்பதனை நன்கு உணர்ந்து கொண்டுள்ள தேசித்திற்கு எதிரான சக்திகள் பலவாறான பொய்யான பரப்புரைகளை எங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளன.

தமிழ் மக்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளை கைவிடுவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை சிதைக்கவும், தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்தவும் வழிவகுக்கும்.

தமிழ் மக்கள் விரும்கின்ற அரசியல் உரிமைக்காக உறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கும் நிலை இருந்து அந்த நேரத்தில் நாங்கள் இவ்வாறு தனித்துப் போட்டியிட்டிருந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இராணுவ ரீதியாக தமிழ் மக்கள் தோற்றுவிட்டதாக மீண்டும் மீண்டும் மக்களுக்கு அழுத்திக் கூறி மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி அவர்களை தாமாகவே விரும்பி தமது அரசியல் கோரிக்கைகளை கைவிடவைக்கும் முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. மக்களது அரசியல் கோரிக்கைகளை முற்றாக கைவிட்டு ஸ்ரீலங்கா அரசு வழங்க விரும்புவதனையும், இந்தியா பெற்றுத்தர விரும்புவதனையும் தீர்வுத்திட்டமாக முன்வைத்து அதன் மீது மக்களாணை பெறுவதன் மூலம் பிற சக்திகளின் தேவைகளை நிறைவேற்றி தமிழ்த் தேசியத்தை அழிக்க கூட்டமைப்பு தலைமைகள் மேற்கொண்டுவரும் சதியை நாங்கள் முறியடித்து தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையையும், கொள்கையையும் காப்பாற்ற முன்வந்துள்ளோம்.

அடிப்டை கொள்கைகளை கைவிட்ட கூட்டமைப்பு இன்று தமிழ் தேசியம் பற்றி பேசுவதற்கு காரணம் நாங்கள் இவர்களது த.தே.கூ தலைமைகளின் கபடத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியமையே காரணமாகும். தேர்தல் காலத்தில் இவர்கள் தேசியம் பேசினாலும் தேர்தலுக்குப் பின்னர் தாம் ஏற்கனவே தயாரித்துள்ள தீர்வுத்திட்டத்தினையே சமர்ப்பித்து தமது எஐமானர்களை திருப்திப்படுத்த உள்ளனர்.

த.தே.கூ இன் தலைமைகள் இன்று கூறுவது போன்ற அதிகாரப் பகிர்வு ஊடான அரசியல் தீர்;வு ஒன்றின் மூலம் இலங்கையில் சிங்களக் குடியேற்றங்களை கட்டுப்படுத்தவும், மொழி, கலாச்சாரம், பண்பாடு, அபிவிருத்தி, பொருளாதாரம் உள்ளிட்ட இனப்படுகொலைகளை தடுக்வும் முடியுமாக இருந்திருந்தால் தந்தை செல்வா நிச்சயம் அதனை அப்பொழுதே செய்திருப்பார்.

அவரது அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்தமையினாலேயே 1976; ம் ஆண்டில் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தனித் தமிழீழத் தீர்மானத்தை இயற்றினார்.

கடந்த 35 ஆண்டுகளில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட தமிழ் அரசியல் தலைமைகள் சுயநிர்ணய உரிமைக்காக ஒரு மாதகாலம் கூட நேர்மையாகப் போராடவில்லை. ஆயுத பலம் அழிக்கப்பட்டிருந்தாலும் அரசியல் ரீதியாக இனியாவது உறுதியாக செயற்பட்டால் இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் எமது உரிமைகளை அங்கீகரிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கூட்டமைப்பின் தலைமைகள் கடந்த 35 ஆண்டுகளில் ஒரு மாதகாலம் கூட சுயநிர்ணய உரிமைக்காக நேர்மையாகப் செயற்படவில்லை. இதுவே இன்றைய அழிவு நிலைக்கு காரணமாகும். தந்தை செல்வா தலைமையில் 1976 ம் ஆண்டில் தமிழீழத் தீர்மானம் இயற்றிய மகாநாட்டில் கலந்து கொள்வதனை சம்பந்தன் அவர்கள் தவிர்த்திருந்தார். ஏனெனில் அவருக்கு தமிழ் மக்களுக்கு தனி நாடு அமைவதில் உடன்பாடு இருக்கவில்லை.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ம் ஆண்டு ஆடி மாதம் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவோம் என்ற கொள்கையை மக்கள் முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது. தமிழீழம் உருவாகுவதனை விரும்பாத சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றப் பதவிக்காக ஆசைப்பட்டு அந்தத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றது. அப்போது தந்தை செல்வா உயிருடன் இல்லை.

பாராளுமன்றம் சென்றதும் இந்தியாவின் ஆலோசனைப்படி தமது கொள்கைகளை முற்றாக கைவிட்டு எதிர்க்கட்சிப் பதவியை பெற்று அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயற்படத் தொடங்கினர்.

ஆனால் இவர்களது தீர்மானங்களால் உந்தப்பட்ட இளைஞர்களும், தமிழ் மக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைகளைக் கண்டு ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்களும் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் பெறும் ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் இணைந்து கொண்டு போராடத் தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் கூட்டணித் தலைமைகள் இளைஞர்களது போராட்டங்கள் பயங்கரவாதப் போராட்டங்கள் என கூறி இலங்கை, இந்திய அரசுகளுடன் இணைந்து போராட்டத்தை அழிக்க அரசியல் ரீதியாக செயற்பட்டனர்.

குறிப்பாக இன்றுள்ள கூட்டமைப்புத் தலைமைகள் 1990 – 2000 ம் ஆணடு காலத்தில் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு அதிகாரப் பகிர்வு ஊடான அரசில் தீர்;வு ஒன்றைப் பெற்றுத் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழலாம் என்ற நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுடன் இணைந்து பரப்பியதன் மூலம் ஆயுதப் போராட்த்தினை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து, புலிகளை அழிக்க இலங்கை அரசுக்குத் தேவையான ஆயுதங்களை உலக நாடுகளிடம் இருந்து பெறுவதற்கு முழுமையாக பங்களிப்புச் செய்து வந்திருந்தனர்.

இதே வேளை தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளில் ஒன்றின் தலைவர் 1987 – 1989 வரை (முன்னாள் துணை இராணுவக் குழு ஒன்றின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளர்) இந்தியப் படையுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டததை காட்டிக் கொடுத்து, போராளிகளையும் அவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் போன்றோரை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார். 1990 ற்குப் பின்னர் 2000 வரை இலங்கைப் படையுடன் இணைந்து அதே செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்தச் சதிகளை எல்லாம் தாண்டி 2000 ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் nஐயசிக்குறு நடவடிக்கையை முறியடித்து, ஆனையிறவை கைப்பற்றி பெரும் இராணுவ வெற்றியை நிலைநாட்டிய பொழுது தனிநாடு அமையப்போகின்றது என்ற ஒரு கருத்து நிலை மேலோங்கியது. அந்த சந்தற்பத்தில் தமது அத்தனை முயற்சிகளும் தோலிவியடைந்த நிலையில் வேறு வழியின்றி புலிகளுடன் சமரசம் செய்துகொண்டனர். புலிகளும் பெருந்தன்மையுடன் அவர்களை மன்னித்து கூட்டமைப்பு என்ற ஒன்றுக்குள் உள்வாங்கினர்

உரிமைப் போராட்டத்தை அழிக்க துணை புரிந்த இவர்களுக்குப் புலிகள் பாவ மன்னிப்புக் கொடுத்து மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தவர்களை மக்கள் மத்தியில் அழைத்துச் சென்று மக்களை சமாதானப்படுத்தி மக்களிடம் வாக்குகளை பெற்றுக் கொடுத்து பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர். இவர்கள் இனிமேலாவது தமிழ் மக்களின் உரிமைக்காக நேர்மையாக உழைப்பார்கள் என்று அப்போது புலிகள் நம்பினார்கள்.

ஆனால் பாராளுமன்றம் சென்ற பின்னர் இவர்கள் நேர்மையாகச் செயற்படவில்லை. தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அந்த அடிப்படையில் தாம் தீர்;வை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சர்வதேச நாடுகள் மட்டத்தில் பிரசாரம் செய்தனர். இந் நிலையில் விடுதலைப் புலிகள் ஒஸ்லோ என்பது தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளை கைவிட்டுள்ளது என்ற காரணத்தினால் அந்த அடிப்படையில் தீர்;வுக்கு இணங்க முடியாது என்றும் மாறாக சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தீர்;வு அமைய வேண்டும் எனவும் உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில் மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சுயநிர்ணய உரிமையை கைவிட தாங்கள் தயார் என்று கூற அதனை கைவிட முடியாது என புலிகள் உறுதியாக இருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளின் இந்த நிலைப்பாடு விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றாக அழிக்க விரும்பிய சிங்கள பேரினவாதத் தலைவர் மகிந்தராஐபக்சவுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவை முழுமையாகப் பெற்றுக் கொடுத்தது.

இதுவே வன்னி மீதான யுத்தத்தின் பொழுது மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட பொழுது மனிதாபிமான தலையீடு என்ற அடிப்டையில் கூட ஐ.நா தலையிடாமல் போனமைக்கு காரணமாக அமைந்தது.

தந்தை செல்வாவுக்குப் பின்னர் கடந்த 35 ஆண்டுகளில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாருமே சுயநிர்ணய உரிமைக்காக நேர்மையாக குரல் கொடுக்காமையினாலேயே நாம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம்.

கொள்கையில் உறுதியாக இருந்தால் நாம் உரிமைகளுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் பெற முடியும்.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையினை அச்சத்துடன் பார்க்கும் சிங்கள தேசமும், சிங்கள ஆதிக்கத்தினை அச்சத்துடன் பார்க்கும் தமிழ்த் தேசமும் ஒரு புள்ளியில் சந்தித்தாலே முரண்பாடுகளை களைய முடியும். அந்த நோக்கில் இலங்கைத் தீவின் இனச்சிக்கலை தணிப்பதற்கான வழிகளில் ஒன்றாக இருதேசங்கள் ஒரு நாடு என்கின்ற கோட்பாடு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினராகிய எம்மால் முன்வைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நாங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக குரல் கொடுத்து வந்தால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எமது உரிமைகளை அங்கீகரிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். எமது நிலைப்பாடுதான் தமிழ் மக்களுக்கு நிரந்த அரசியல் எதிர்காலத்தினை பெற்றுத்தரும்.

Comments