அரசியல் இராஜ தந்திரம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி

அரசியல் இராஜ தந்திரம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளதன் மூலம், தாயக மீட்புக்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும், கொள்கை பிறளும் தலைமையுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தேசிய நலன் சார்ந்தோர் இணைந்து கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் முரணாக இந்தியாவின் விருப்பிற்கு இணங்க தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்த கூட்டமைப்பின் தலைமை, அதனை இந்தியா உட்பட சில நாடுகளின் தூதரகங்களுக்கும் இரகசியமாக வழங்கியிருந்ததாகக் கூறிய கஜேந்திரன், அந்தத் தீர்வுத் திட்டத்தின் பிரதியை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒஸ்லோ உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது பற்றி கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே நேரடியாகக் கூறியிருந்த போதிலும், தேசியத் தலைமையின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது தேர்தல் வெற்றிக்கான பொய்ப்பரப்புரையுடன் களமிறங்கியிருப்பதாக இந்த செவ்வியில் அவர் கூறினார்.

தனது குடும்ப அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தன்மீதும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய அங்கத்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாயகத்தில் பத்திரிகைகளும், புலம்பெயர் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு இணையத்தளமும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

செல்வராஜா கஜேந்திரனின் செவ்வியை கீழுள்ள இணைப்பில் பெறலாம்.
www.tamilkathir.com


Comments