உடைந்த சாவிகளும் பொருத்தமில்லாப் பூட்டகளும்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் திறவு கோல்கள் எங்கே
இருக்கின்றன?சாவிகளைப் பல பேர் வைத்துள்ளனர். அதில் தம்மால் மட்டுமே முடியும் என்கின்றவாறு உடைந்த சாவிகளையும் சிலர் காண்பிக்கின்றனர்.

பொருத்தமில்லாப் பூட்டினை வைத்தபடி சாவிச் சொந்தக்காரர்களை கையாளும் சிங்களதேசம், தனது வழமையான பாணியில் வித்தை காட்ட முடியாத கையறு நிலைக்குள் தள்ளப்படுகிறது.இந்தியச் சாவிதான், தீர்விற்கான திறவுகோல் என்று ஒரு சாரார் திடமாக நம்புகின்றனர்.

ஆனாலும் இந்தியச் சாவி, தனது பூட்டைத் திறந்து விடாதவாறு மிக அவதானமாக சீனாவின் உதவியுடன் இறுகப் பற்றிப் பிடிக்கிறது சிங்களம்தேசம்.மேற்குலகமானது சமாதான ஒப்பந்தச் சாவி முறிந்து விட்டதால், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்மட்டியால் பூட்டைத் தாக்க ஆரம்பித்துள்ளதை ஐ.நா. நிபுணர் குழு விவகாரம் வெளிப்படுத்துகிறது.சீனாவின் கைகளில் சாவி இல்லை.

முதலீடுகளின் ஊடாக பூட்டைப் பயன்படுத்தும் காரியத்தை மட்டுமே அது முன்னெடுக்கிறது. அம்பாந்தோட்டையிலிருந்து யாழ். நகர வீதி வரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் பேரினவாதப் பூட்டின் வலுவை அதிகரிக்கச் செய்கிறது சீனா.ஏற்கெனவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலும் பாதுகாப்புச் சபையிலும்
சிங்களப் பூட்டை உடைக்க மேற்குலகம் மேற்கொண்ட உயர் வலுவிசைத் தாக்குதல்களை இந்தியா, சீனா, ரஷ்யா என்பன கூட்டிணைந்து முறியடித்தன.

சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி நகர்த்தப்பட்ட உள்நாட்டுத் தாக்குதல்களும்
ஆசிய வல்லரசுப் பலங்களின் துணையோடு தோற்கடிக்கப்பட்டன.
சாவி உரிமையாளர்களின் துணையும் பூட்டின் இருப்பினை ஆதரிப்போரின்
பக்க பலமும் ஒன்றிணைந்து அழிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம், மறுபடியும் நிமிர்ந்தெழுவதற்கு முன்பாக பூட்டினை தம் வசமாக்க வேண்டுமென்கிற முனைப்போடு இவ்வல்லரசாளர்கள் செயற்படுவதை அவதானிக்கலாம்.

ஆனாலும் தீர்விற்கான திறவுகோலை கைவசம் வைத்திருக்கõத சீனா போன்ற நாட்டினையே சிங்களதேசம் விரும்புமென்பது வெளிப்படையானது. ஆசியப் பிராந்தியத்திலும் இலங்கையிலும் குறிப்பாக முத்துமாலை போன்ற வியூகம் அமைக்கப்படும் இந்த சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் வகிபாகத்தை புறக்கணித்து, 80 களின் கனவுகளில் யதார்த்தத்தை புரிந்து கொள்ள எத்தனிப்பது தவறான பார்வையாகும்.

அமெரிக்காவின் கடற்படை ஆதிக்கம், திருமலைக் கடற்பரப்பில் புகுந்து விடும் என்பதற்காக ஈழப் போராளிகளை அரவணைத்த இந்திய வல்லாதிக்கமானது இப்போது சீன ஆமை இலங்கைக்குள் நுழைந்ததால் மேற்குலகோடு இணைந்து செயற்பட முற்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் இராணுவ உயர் மட்டத்தினரோடு உறவாடும் அமெரிக்க நகர்வுகளால் இந்தியக் கொள்கை வகுப்பõளர்கள் மத்தியிலும் குழப்ப நிலை உருவாகுவதை அவதானிக்க முடிகிறது.

அதனை எதிர்கொள்வதற்கு ரஷ்யாவுடன் ஒரு சமாந்தரமான நகர்வினை இந்தியா கையாள்வதை குறிப்பிடலாம்.ரஷ்யப் பிரதமர் புட்டினின் அண்மைய டில்லி விஜயம், இரு கோட்டு தந்திரோபாயப் பாதையின் தாற்பரியத்தை சுட்டிக் காட்டுகின்றதென ஊகிக்கலாம்.

இலங்கைக்கு சீனா போல், இந்தியாவைப் பொறுத்தவரை நிபந்தனை விதிக்காத நண்பனாக ரஷ்யா திகழுமென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ரஷ்ய தேசமும் பேரினவாதப் பூட்டிற்கு பலம் சேர்க்கும் நாடுதான் என்பதில் சந்தேகமில்லை. புவிசார் அரசியலின் போக்கு இவ்வாறு இருக்கையில், இந்தியாவின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகு முறைகள் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை சிங்களதேசம் நிராகரித்தால் இந்திய மேற்குலகின் உதவியோடு பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமையினை முன்வைப்போமென்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியிருந்தார்.

ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கமானது அசுர பலம் கொண்டு நிமிர்ந்தெழும்
நிலையில் சமஷ்டி போன்ற அதிகப்படியான கோரிக்கைகளை முன் வைப்பது பொருத்தப்பõடான விடயமல்ல என்கிற வகையில் இந்திய முன்னாள் கொள்கை வகுப்பாளர்களின் பார்வை அமைகிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் வெளிப்படாத நிகழ்ச்சி நிரலின்படி மாகாண சபையும் 13 ஆவது திருத்தச் சட்டமுமே இந்தியா மற்றும் மேற்குலகின் நிலைப்பாடாக இருக்கிறது.இவை தவிர சமஷ்டி என்கிற சொல்லாடலை சிங்கள தேசம் நிராகரித்து விட்ட செய்தியையும் அரச ஊடகங்களின் வாயிலாக கூட்டமைப்பின் தலைவர் அறிந்திருப்பார்.

ஆகவே சமஷ்டித் தீர்வினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள சிங்களம் உறுதியாக மறுப்பதால் வெளியக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதுதான் கூட்டமைப்புக்கு இருக்கும் ஒரே தெரிவாக அமையும்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவும் 50 களிலிருந்து முன் வைத்த சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்ட பின்னரே 1976 இல் சுதந்திர இறைமையுள்ள தமிழ் ஈழ தனி அரசுக் கோரிக்கையை முன் வைத்தார்.

எத்தனையோ இழப்புகளின் மத்தியிலும் முள்ளிவாய்க்கால் வரை சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தனது இறைமையுள்ள தனியரசுக் கொள்கையை எவருடனும் சமரசம் செய்யவில்லை என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

குறைந்த பட்சக் கோரிக்கையாக, அனைத்துலகம் விரும்பியவாறு நாடு பிளவடையாமல் இருப்பதற்கு இரண்டு தேசியங்கள் தத்தமக்கேயுரித்தான முழுமையான இறைமையை சம அந்தஸ்தோடு பேணக் கூடிய வகையில் ஒரு தீர்வு முறைமையை முன் மொழியலாம்.

தமிழ்த் தேசிய இறைமையினை சரணாகதியாக்காத, இரண்டு அரசுகளின் கூட்டு என்பதுதான் அதியுச்ச கோரிக்கையாக தமிழர் தரப்பால் முன் வைக்க முடியும்.

சர்வதேசமும் இந்தியாவும் அச்சப்படும், அல்லது பயங்கரவாதக் கோரிக்கை என்பது தவறாகச் சொல்லப்படும் நாடு பிளவுபடுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். ஆனால், எவருக்குமே இந்தக் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகள் குறித்து அக்கறை கிடையாது.

சிங்கள இறைமை கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள் என்பதுதான் இந்தியா மற்றும் மேற்குலகின் நிலைப்பாடாக இருக்கிறது.

இந்த வல்லரசுகள் மூவரும் ஆளை ஆள் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதாலும் தமது பிராந்திய நலனை மற்றவர் அபகரித்து விடுவார் என்கிற அச்சம் காரணமாகவும் கழுத்தில் இரும்பு மாலை போட்டு இறுக்கிப் பிடித்தால் ஆசியாவின் ஏக தலைவாக தன்னால் வர முடியுமென்று கருதுவதாலும் சரியென்று தெரிபவற்றையும் பிழை என்று சொல்ல வேண்டிய சுயநல
அரசியல் சகதிக்குள் இவர்கள் நிற்க விரும்புகின்றார்கள்.

அதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும் வட மாகாண சபைத்
தேர்தலை நடாத்தவே அரசாங்கம் முனைவது போல் தெரிகின்றது.
அத்தோடு நாடாளுமன்றம் பெரும்பான்மையூடாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையை இல்லாதொழிக்கும் அரசியலமைப்பு மாற்றங்களை, நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கப் போவதாக அறிவிக்கின்றது.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை அதன் தமிழ்த் தேசிய அரசியலை வட மாகாண சபைக்குள் முடக்கி மீண்டெழ முடியாதவாறு புதைத்து விடவே சிங்கள தேசமும் இந்தியாவும் திட்டமிடுகின்றன.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி வழங்கல் தொடர்பான பிரச்சினைகளோடு காலம் கரைந்துவிடும்.
2008 இல் உருவான கிழக்கு மாகாண சபை, தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

மாகாண சபைகளுக்குள் இருந்தவாறு சமஷ்டிக்காகப் போராடுவது கடினமான, பொருத்தப்பாடான விவகாரமல்ல என்பதை தமிழர் தரப்பு உணரும்போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் வைத்த தீர்வுக் கோட்பாடுகள் வலுவிழந்து போகும். பூட்டைத் திறக்காமலே தீர்வும் திணிக்கப்படும்.

-இதயச்சந்திரன்

Comments