உங்கள் உணர்வையாவது பதிவு செய்யவேண்டாமா?

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்:எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்யவேண்டாமா?

மே 31 – ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த, ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக.

வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம். எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது.

நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது. ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு… எங்கே ஐயா?

மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்றுபாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன?சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு?

நம்புங்கள் நல்லூர்கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம்.

மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள் , சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது? சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா?

எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம். ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்?

ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.

- ஈழநாதம்

Comments