எம் இருப்பை உயிர்ப்பிக்குமா இத்தேர்தல்?

இலங்கையின் 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்துள்ளன. இவ்வருடம் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, 336 பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளும் 301 சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த 7620 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக, வடகிழக்கில் 31 ஆசனங்களுக்காக 1867 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இவர்களது பாராளுமன்ற நுழைவு தொடர்பில் தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள் பலவாக இருப்பினும் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்ற முடியும் என்பது தொடர்ந்தும் கேள்விக்குறிகளாகவே உள்ளன.

வழமை போன்றே வாக்குறுதிகள் தமிழ் மக்களை நோக்கி வீசப்டுகின்றன. 2002 ம் ஆண்டு முதல் சமாதானப் புறாவாகப் பறந்த ரணில் "தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வழிசெய்வோம்" என கூறி இம் முறையும் தமது வாக்கு வங்கியை நிரப்ப முயல்கின்றார். மகிந்தவால் உருவாக்கப்பட்ட, திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்கியதாகக் கூறப்பட்ட புத்தியீவிகள் குழு, தீர்வுத் திட்டடத்தினைத் தாயாரிப்பதாகக் கூறி, பல ஆண்டுகாலமாக, சர்வதேசத்தினை முட்டாள்களாக்கியது.

காரணங்கள் ஏதுமின்றி இக் குழுவைக் கலைத்து விட்டு, இத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதனூடாக, 17வது அரசியல் யாப்புத் திருத்தச்சட்டத்தினைப் பற்றியும் சனாதிபதி ஆட்சி முறைமை மாற்றம் பற்றியும் கூறுகின்றனர். முள்ளி வாய்க்காலில் கடந்த வருடம் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கையில் அரச அதிபர் தேர்தலை தமிழ்மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்கின்றனர் எம்மக்கள். இத்தனை கோடி ரூபாய்களை தமது அரசியலுக்காகச் செலவிடும் சிங்கள அரசு எம்மக்களின் சொத்துகளையும் பாரம்பரியங்களையும் அழித்துச் சின்னாபின்னமாக்கி ஏதிலிகளாக முகாங்களுக்குள் முடக்கியது. தமிழர் மீதான ஸ்ரீலங்காவின் நடவடிக்ககைகள் குறித்து பல மட்டங்களிலும் வினாக்கள் எழுப்பபடுகின்றன. இவர்களுக்கு மனிதாபிமான நிவாரண நடவடிக்கையினை செய்ததா? பெரும்பான்மையான மக்களை மீளக் குடியேற்றியுள்ளோம் எனச் சர்வதேசத்திற்கு பறைசாற்றும் இந்தச் சிங்கள அரசு உண்மையிலேயே செய்திருப்தும், செய்து கொண்டிருப்பதும் தான் என்ன?

இறுதிப்போரில் காயமடைந்தும் கைகால்களை மற்றும் உடலுறுப்புக்களையும் இழந்த சிங்கள இராணுவத்தினரின் மறுவாழ்வுக்காக பல கோடி ரூபாய் செலவில் மறுவாழ்வுத் திட்டங்கள் பலவற்றறை ஸ்ரீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது. இவற்றிற்காகச் செலவிடப்படவுள்ள பணத்தின் பெரும் பகுதி வன்னி மக்களது மீள்குடியேற்றத்திற்கு சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொண்டது என்பதுதான் மிகப் பெரிய உண்மையாகும்.

மனிதாபிமான யுத்தம், மக்களை மீட்கும் யுத்தம் எனச் சிங்கள அரசு கூறிவந்தாலும், பாரிய மனிதப் பேரவலமும், மனித உரிமை மீறலுமே நடைபெற்றுள்ளன. இதனை இந்தச் சிங்கள அரசு பொறுப்பேற்றே ஆக வேண்டும். அத்துடன் யுத்த பிரதேசங்களுக்கு வெளியேயும் பலவந்தமான அதிகார பிரயோகமும், அதிகரித்த அளவு மனித உரிமை மீறல்களும் மிக மோசமாக இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, பல்வேறு பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் தகவல் அடிப்படையில், ஏராளமான பொதுமக்கள், இராணுவம் மற்றம் துணை இராணுவக்குழுக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன், அவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க உயர் மட்டங்கள், பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சட்ட சேவை ஆணைக்குழு போன்ற சுயாதீனக்குழுக்களை நியமிக்க தவறியுள்ளன எனவும் பல சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுது சில விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள அரசு நிகழ்சி நிரலொன்றைக் காட்டி சர்வதேசத்தினை ஏமாற்றுகின்றது. உதாரணமாக, கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களை விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதி அரசர் திலகரட்னவின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. எனினும் அது ‘காணாமால் போனவர்கள் காவற்துறையில் தம்மை முறையாக பதிவு செய்து கொள்வில்லை' என கடந்த வருடம் நவம்பர் மாதம் கூறிவிட்டு அது காணாமல் போய்விட்டது.

கடந்த அதிபர் தேர்தலின் போது மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு அமைப்பினால் வழங்கப்படும் இருபத்து ஐயாயிரம் ரூபாய் உதவித் தொகை மட்டுமே இதுவரையும் கிடைக்கப்பெற்று வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த பிரச்சாரங்களில் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம் என ஆளும் கட்சியினருக்கு தெரிவிக்கும் அரச அதிபர், கடந்த தேர்தலின் போது ஏன் இப்படியான பொய்யான வாக்குறுதியை தமக்கு வழங்கினார் என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவை ஒரு புறமிருக்க,அகதி முகாங்களிலுள்ள மக்களுக்கு கடந்த இரு மாதங்களாக சீராக உணவுக்கான நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அன்றாட உணவுக்காக தினமும் அல்லாடுகின்றனர். கைக்குழந்தைகளைச் சுமக்கும் தாய்மார் துன்பம் சொல்லின் பொருள் கடந்தது. தெருவோரங்களில் குழந்தைகளின் பால்மாவுக்காக கையேந்தும் இத்தாய்மார், கண்முன்னே பசியுற்றுக் கதறும் சிசுக்களின் அவலத்தைப் பொறுக்கமுடியாது, தம்மை விற்க முயல்கின்ற பரிதாபம் இந்த நூற்றாண்டில் நாம் சந்திக்கின்ற மிகப் பெரிய கொடுமை.

எம்மையும் எமது பொருளாதாரத்தினையும் சிதைத்து ஏன் இப்படியான தலைவிதியை இந்த சிங்கள அரசு எமக்கு ஏற்படுத்தியது? இன்னும் எத்தனையோ அனாதைக் குழந்தைகள், தாம் பாடசாலைக்குச் செல்ல வேண்டும் கல்வி கற்க வேண்டும் எனும் ஆர்வ மிகுதியினால், கொப்பி பென்சிலிற்காக, வீதிகளில் கையேந்தி அலைவதாகவும் மற்றுமொரு வேதனை மிகுந்த தகவல் தெரிவிக்கின்றது.

பாராமரிப்பார் அற்ற முதியோர் தெருவோரங்களில் உணவின்றி உடல் நொருங்கிக் கிடக்கின்ற அவலங்களும் வெளிவருகின்றன. இவர்கள் குறித்த அக்கறை கொண்ட உணர்வாளர்களுக்கு, இக்கட்டுரையூடாக இவ் அவலத்தினை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்தநிலையில், ஏப்பில் 8ம் திகதி நடைபெற இருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு என்ன விடிவைத் தந்துவிடப்போகின்றது?

இப்போது தேர்தலுக்காக வழங்கப்படுகின்ற அற்ப சலுகைகளும் பின்னர் இல்லாமல் போகலாம். கவனிக்கப்படும் பலர் காணாமல் போகலாம். இனஅழிப்பு, நிலப்பறிப்பு புது வடிவங்களில் தொடரலாம். எமது அடையாளங்களும் வரலாறுகளும் திட்டமிட்டு அழிக்கப்படலாம்! ஏன் தொடங்கியே விட்டதே! தமிழர் தாயகப்பகுதிகளில் போட்டியிடும் 1867 தமிழ் பேசும் வேட்பாளர்களில் 31 நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே தெரிவாகப்போகின்றனர்.

இவர்கள் மகிந்த அரசு தொடரப்போகின்ற தமிழர் மீதான அடக்குமுறைகளைத் தடுத்தது நிறுத்தக் கூடியவர்களா? அள்ளி வீசுகின்ற வாக்குறுதிகளில் சிலவற்றையேனும் நிறைவேற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்களா? முள்ளிவாய்காலின் கோரக் கதறல்களை இவர்களில் எத்தனை பேர் பிரதிபலித்திருக்கின்றனர்? வன்னி குதறப்பட்டபோது, இவர்கள் குரல்கள் எங்கே போயிருந்தன? அந்தக் கொடும் கோகத்தைச் சுமக்கத்தெரிந்திராத இவர்களால், ஒஸ்லோ என்றும் ஒரு நாட்டுக்குள் இரு தேசம் என்றும் எப்படி பேச முடியும்?

தேர்தலுக்கு முன்னரே எம்மக்களுக்காக துணிகரமாக களத்தில் நின்று குரல் எழுப்பியவர்களை புறந்தள்ளிவிட்டு, விரோதிகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் முதுகெலும்பற்ற இவர்களால் எவ்வாறு தேர்தலின் பின்னர் தாயக உணர்வுடன் செயற்பட முடியும்? எம்மை மக்களை கொன்று குவித்த புதுடில்லியினதும், மகிந்தவினதும் நிகழ்ச்சி நிரலிலேயே நிச்சயமாக இனியும் செயற்படப் போகின்றனர் என்பது எம்மக்களுக்குத் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.

வாக்குகளுக்காக வேட்பாளர்களும், அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளும் இந்த உண்மைகளை மறுக்கலாம். ஆனால் வரண்டு போன நாக்குடன், துளி தண்ணீருக்காக வானம் பார்க்கின்ற எம் மக்களும், அந்த மக்களை ஏக்கத்தோடு நோக்கும் ஈர இதயங்களைக் கொண்டவர்ளும் உண்மையை அறிந்தே இருக்கின்றார்கள்.

2010 பாராளுமன்றத் தேர்தல் எவ்வகையிலும் தமிழர்களை ஏமாற்றப்போவதில்லை. ஏனெனில் இத் தேர்தல் தொடர்பாக எந்த எதிர்பார்ப்பும் எம் மக்களிடம் இல்லை. எம் இருப்பை உயிர்ப்பிக்க இது போன்ற தேர்தல்களால் ஒருபோதும் முடியாது.

உயிர்க்கும் காலம் ஒன்று வரும்.

அவ்வேளை சலசலக்கும் சருகுகளை உரமாக்கியபடி, புதிய தளிர்கள் முளை கொள்ளும்.

- சங்கதிக்காக மாதுகன்

Comments