இந்தியாவோ மேற்குலக நாடுகளோ, தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அணுகவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியம், சுயநிர்ணயம், தாயகம் எனக் கூறினாலும் அதன் பிறகு கூறப்படும் விடயங்கள் அதிகாரப்பகிர்வு சமஷ்டிக் கோட்பாடுகளை நோக்கிச் செல்வதாகவே காணப்படுகின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மற்றும் செல்லத்துரை சுப்பிரமணியம் கணேசு துரைராசா, பிரான்சிஸ் வின்சன் டீ போல், சட்டத்துறை மாணவர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கிழக்கிலங்கை பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி. கெனடி விஜயரெட்ணம், கந்தசாமி திருலோகமூர்த்தி, சந்தனம் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்…

இன்று தமிழ் மக்களைப் பொறுத்த வரை சமஷ்டி வேண்டியதில்லை. அதனை நோக்கி நாம் நகர்வோமாக இருந்தால் மீண்டும் முப்பத்தைந்து வருடங்கள் பின்னடைவை நாம் சந்திக்க வேண்டிவரும். தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம், சுயநிர்ணயம், தேசியக் கொள்கைகளை முன்வைத்து மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

சைக்கிள் சின்னத்தில் போட்டி

இதனை நிரூபிக்கும் பொறுப்பு எமக்கு உண்டு. இந்த வகையில் தான் நாம் இன்று தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். இந்தக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் ஒரு சிலர் தவிர்ந்த ஏனையவர்கள் பொது அமைப்புகள் மற்றும் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்களே. எனவே ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான கூட்டமைப்பு என்பது நான்காவது படிமுறை வளர்ச்சியாகும். தமிழீழப் போராட்டம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. தற்போது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாகியுள்ளது.

கட்சிப் பின்னணி இல்லாது கொள்கை வயப்பட்டவர்கள் இணைந்து இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றார்கள். இன்று எந்தவொரு நாடாக இருந்தாலும் தமது நலனை முன்னிறுத்தியே செயல்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவும் தமக்குத் தேவைப்படும் போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தமிழர் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

இந்தியாவாக இருந்தாலும் சரி, ஏனைய மேற்குலக நாடுகளாக இருந்தாலும் சரி எமது போராட்டத்தை தமது தேவைக்கேற்ப தமது கைகளில் எடுத்துக் கொண்டுள்ளன என்பதே உண்மை.

தமிழர் பிரச்சினையில் மேற்குலக நாடுகள்

தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் இந்தியாவோ ஏனைய மேற்குலக நாடுகளோ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அணுகவில்லை. பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும் இல்லை. இதனை எமது மக்கள் சரியாகப் புரிந்துள்ளார்கள்.

உலக நாடுகள் தமது நலன்களை முன்னிறுத்தி செயல்படும் போது, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தமிழர் பிரச்சினைகளை கையில் எடுப்பார்கள். இலங்கை அரசைப் பொறுத்த வரையில் பல தெரிவுகள் உண்டு. உலக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. இவை இலங்கை அரசுக்குப் பல நெகிழ்வுகளை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவும் மேற்குலக நாடுகளும் தமிழ் தேசியத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்தி செயல்படுகின்றார்கள் அல்லது காட்டிக் கொள்கின்றார்கள். நான் கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டவன் என்ற வகையில் இதனைக் கூறக் கூடியதாகவுள்ளது.

எம்மைப் பொறுத்தவரை எம்முடைய நலன்களிலும் அடிப்படை அரசியல் கோட்பாபடுகளிலும் உரிமைகள் என்ற விடயங்களில் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளுடன் பிரச்சினைப்படக் காரணமாக இருப்பது, நாம் இன்று எம்முடைய பலத்தை இழந்துள்ளோம் பலவீனப்பட்டுள்ளோம் அதனால் இந்தியா கூறுவதையோ அல்லது சர்வதேசம் கூறுவதையோதான் நாம் செய்ய வேண்டும் என்பதனாலேயே.

எமக்கு எவரும் எதிரிகளல்லர்

தமிழ் மக்களுடைய அடிப்படை விடயங்களில் இருந்து நாம் அசையக் கூடாது. நாம் யாரையும் எதிரிகளாக நினைக்க வேண்டிய தேவை இல்லை. நாம் அவர்களுடன் நட்புடன் இருக்கவே விரும்புகின்றோம். இதனை சர்வதேசம் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று இலங்கை அரசு, தமிழர்கள் என்ற தேசியம் இல்லையென்ற முடிவுடன் தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இதற்காகவே தமிழ் மக்களை படுகொலைகள் செய்து கொண்டும் இருக்கின்றது. இதற்கு நாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். நாம் என்றும் சர்வதேச நாடுகளின் அடிப்படைக் கொள்கைகளுடன் இணைந்து செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம் இருந்தும் உள்ளோம். உலக நாடுகள் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கத் தயாராக இல்லை. ஆனாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நன்கு விளங்கிக் கொண்டுள்ளன.

ஜனநாயக வழியில் கருத்துக்களை வெளிப்படுத்துமாறு தான் உலக நாடுகள் கூறுகின்றன. கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை, இறைமை என்பவற்றுக்காக ஆயுதம் எடுத்துப் போராடினார்கள். இதற்காக, இது விடுதலைப் புலிகளின் கொள்கையென்று கூற முடியாது. இது தமிழ் மக்களுடைய அபிலாஷை.

இன்று நாம் இதனைக் கைவிடுவோமாக இருந்தால், இந்தப் போராட்டத்தில் இறந்த ஒன்றரை லட்சம் மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். இன்று நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். வேறொருவர் கூறுவதைத்தான் செய்ய வேண்டும், கூற வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுமாக இருந்தால் இதற்கு ஒரு தலைமை வேண்டியதில்லை. எம்மை யாரும் தமது தேவைக்குப் பயன்படுத்திவிட்ட பின்னர் கருவேப்பிலை போன்று தூக்கி எறிய அனுமதிக்க முடியாது .அழிவுப் பாதைக்கு இன்று நாம் யாரையும் கொண்டு செல்லவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

புலம்பெயர் நாடுகளில் மக்கள் எழுச்சி

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எமது உறவுகள் மிகவும் உறுதியாகவுள்ளார்கள். தேசத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கின்றார்கள். என்றும் இல்லாத அளவுக்கு இன்று எழுச்சி கொண்டுள்ளார்கள். இந்நிலையில் நாம் எல்லாம் முடிந்து விட்டது என்றால், அது அவர்களின் எழூச்சியை மனோ ரீதியாக உடைப்பதைப் போன்று அமையும். இதற்கும் தலைமை தேவையில்லை. இன்று நாம் இந்தத் தேர்தலில் மீண்டும் அடிப்படை உரிமைகளுக்கான அங்கீகாரம் கேட்டே போட்டியிடுகின்றோம் எனத் தெரிவித்தார்.

Comments