மாம்பழமா? தோடம்பழமா? என்ற பெயர்கள் முக்கியமல்ல – வரதராஜன்

மாம்பழமா? தோடம்பழமா? என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் தொிவித்துள்ளார்.

லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய அவர், கட்சிகளின் பெயர்களில் உள்ள மயக்கத்தால், மக்கள் குழப்பம் அடையாது, அவற்றின் கொள்கைகளைக் கண்டறிந்து, தமிழ்த் தேசியத்திற்காய் வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஒருவருக்கு மாம்பழத்தில் விருப்பம் இருந்தால், அந்த மாம்பழத்திற்கு தோடம்பழம் எனப்பெயரிட்டால், அவர் பின்னர் தோடம்பழமே விருப்பம் எனக் கூற வேண்டுமே ஒழிய, உள்ளீட்டைக் (கொள்கைகளைக்) கவனிக்காது, வெறுமனே கட்சிகளின் பெயருக்கு வாக்களிக்கூடாது எனக் கூறினார்.

2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்தக் கொள்கையிலும், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கையிலும் இருந்து அதன் தலைமை மாறியதால், அதே போன்றதொரு மற்றொரு கூட்டமைப்பை, அதாவது “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை: உருவாக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது கூட்டமைப்பு கட்சி அரசியலை முன்னெடுக்கவில்லை எனவும், சைக்கிள் சின்னத்தைப் பாவித்த போதிலும், தாம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி அல்ல என்றும், அவ்வாறு கட்சி அரசியலை முன்னெடுத்தால், அரசியல் சாராத தன்னை அவர்கள் முதன்மை வேட்பாளராக நியமிக்காது, கஜேந்திரகுமாரையே நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் வரதராஜன் தொிவித்தார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாத வரதராஜன், இந்தியப் படைகள் காலத்திலும், அதன் பின்னர் சிறீலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பின் போதும் பல தடவைகள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்ததுடன், 2008ஆம் ஆண்டு கொழும்பில் வெள்ளைச் சிற்றூந்தில் கடத்தில் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் வழங்கிய செவ்வி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே அழுத்தவும்...







Comments