சம்பந்தர் மாவை சுரேஸ் மூவரையும் புறக்கணிப்போம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக்கூட்டமைப்பானது பிரான்சிலுள்ள 64 சங்கங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பெரிய கட்டமைப்பாகும்

அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால் மே 19க்குப் பின் கூட்டமைப்பின் முகமாகவும் தீர்மானம் எடுப்பவர்களாகவும் மாறியுள்ள சம்பந்தர், மாவை, சுரேஸ் (SMS அணி) ஆகியோருக்கு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் தீர்வு தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்பவற்றை அங்கீகரிப்பதில்தான் அமையும் என்பதில் நம்பிக்கையோ விருப்பமோ உறுதியோ இல்லை என்பதற்கு அவர்களது அண்மைக்கால வாக்குமூலங்கள் உட்பட பல ஆதாரங்கள் உள்ளன. மே 19க்கு முன்னர் இலட்சியத்தில் உறுதியும் பலமான அரசியல் தலைமையும் தாயகத்தில் இருந்த வரை விடுதலைக்கான செயற்பாடுகள் எல்லா மட்டத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. மே 19க்குப் பின்னரான தற்போதைய நிலையில் இலட்சியத்தில் பற்றும் உறுதியும் நம்பிக்கையும் செயல்திறனும் இல்லாத மேற்கூறியவர்களிடம் தமிழ் மக்களின் தலைவிதியை கையளிப்பது ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலைப் பயணத்தை ஒட்டுமொத்தமாகப் பின்னடையச் செய்யும்.

எண்பதுகள் வரையிருந்த தனிநபர்களைக் கொண்ட சிறுகுழாம் ஒன்றே தமிழ் மக்களின் பங்குபற்றலின்றி கருத்தறிதலின்றி முடிவெடுத்து வழி நடத்திய அதே பாணியை SMS அணியினர் மீண்டும் தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்கின்றார்கள். புலத்தில் மக்களே முன்னின்று நடத்தும் போராட்டங்களாகவும், மக்களே முன்னின்று நகர்த்திச் செல்லும் சனநாயக அரசியல் நிறுவனங்களை புத்துருவாக்கம் செய்து பரந்துபட்ட மக்களின் போராட்டமாகவும் விடுதலை இலட்சியத்தை வெளியுலகுக்கு உன்னதமான மானிட விடுதலைப் போராட்டமாக வெற்றிகரமாக வெளிக் கொண்டு வரும் நேரத்தில், சிறு குழுவாத முடிவுகள் பேரவலத்தைச் சந்தித்த மக்களுக்கு நிரந்தர விடிவைத் தேடித் தரா. மே 19க்குப் பின் SMS என்கின்ற மூவரணியே மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அடிப்படையான சனநாயகப் பண்பின்றி முடிவுகளை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளிருப்பவர்களாலும், வெளியேறியவர்களாலும் பரவலாக முன்வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்; எங்களிடம் நிறையவே உண்டு.

தமிழ் மக்களின் தேசியம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணயம் போன்றனவற்றை அதன் முழுமையான அர்த்தத்தில் கையாளாமல் அதனை வெறும் வார்த்தை ஜாலங்களாகப் பாவித்து ஒரு நீர்த்துப் போன திட்டத்தை தோற்றுப் போன மனநிலையோடு தங்களது சக நாடாளுமன்ற உறுப்பினர்களேடு கூட கலந்தாலோசிக்காமல் தாமே இரகசியமாக வரைந்து அதனை வெவ்வேறு அதிகார மையங்களுக்கு எடுத்துச் சென்று இது தான் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று SMS அணியினர் பேரம் பேச முயன்றார்கள். இந்த விடயம் வெளிவந்த பின்பு தான் SMS என்கின்ற மூவரணி தொடர்பான வெறுப்பு சக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக காத்திரமாக வெளிப்படுத்தப்பட்டது. இதன் பின்னரே அந்த நகலின் பிரதிகள் சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்படாமல் வாசித்து மட்டும் காட்டப்பட்டது. தாயக மக்களினதும், சக பாராளுமன்ற உறுப்பினர்களதும், புலம்பெயர் மக்களதும் பங்குபற்றுதலின்றி பின்கதவால் கையளிக்கப்பட இருந்த SMS அணியின் தீர்வுத் திட்ட நகலை இப்போதாவது தமிழ் மக்களது பார்வைக்கு இவர்களால் முன்வைக்க முடியுமா?

பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை குறுகிய காலத்தில் குறுகிய நிலப்பரப்பில் வைத்து மனித இன வரலாற்றில் மிகக் கறைபடிந்த படுகொலை அத்தியாயத்தை எழுதிய இரண்டு போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஸ, சரத் பொன்சேகா ஆகிய இருவரையுமே நீதியின் முன்னிறுத்தி தண்டிக்க வேண்டியது சர்வதேசத்தினதும் குறிப்பாக தமிழ் மக்களதும் தார்மீகக் கடமை. ஆனால் சிறீலங்கா சனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றமென்ற பெயரில் போர்க்குற்றவாளிகளில் ஒருவருக்கு - அதுவும் எமது மக்களுக்கு பேரவலத்தை ஏற்படுத்திய ஏழு மாதங்களுக்கு இடையில் - ஆதரவளிக்கும் முடிவை SMS அணியே எடுத்து சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திணித்தது.

புலம் பெயர் நாடுகளின் மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இத்தவறான முடிவைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தும் அது பொருட்படுத்தப் படவேயில்லை. எந்தவொரு வதைக்கப்பட்ட இனமும் வதைத்தவன் ஒருவனை வாக்களித்து அங்கீகரிப்பதில்லை, போர்க்குற்றவாளியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வாய்ப்பை தாங்களே இழப்பதுமில்லை. யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது? குறுகிய அரசியல் இலாபங்களை முன்வைத்து மக்களின் ஜீவாதாரமான உரிமையைப் பெற்றெடுக்க முடியாது. SMS அணியின் தவறான இந்த முடிவை உள்ளிருந்து எதிர்த்த பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் காப்பதற்காக உள்ளேயே இருந்தனர் என்பதை நாம் அறிவோம்.

2004 பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மிகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வேட்பாளர் நியமனத்தை அதே மாவட்டத்தில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளைப் பெற்று வென்ற தெரிவுக்குழு அங்கத்தவர்களான சுரேஸ், மாவை எப்படித் தீர்மானிக்க முடியும்? இலட்சியத்திலும் எமது மக்களின் நிரந்தரத் தீர்வு விடயத்திலும் பற்றுறுதியோடு செயற்படும் கஜேந்திரகுமார், பத்மினி, கஜேந்திரன் ஆகியோரால் தமது குறுகிய அரசியல் நலன்களுக்குப் பாதிப்பு என்ற வகையிலேயே இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

அதற்கு கஜேந்திரகுமார், பத்மினி, கஜேந்திரன் ஆகியோர் வெற்றுக் கோசம் எழுப்புபவர்களாகவும் வெளிநாடுகளில் நீண்ட காலம் தங்கியிருந்தவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகின்றனர். போர் உக்கிரமடைந்திருந்த 2008 இலிருந்து 2009 மே வரை தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நிலங்களில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களிலும் அரசியல், இராசதந்திர முன்னெடுப்புகளிலும் வெளிப்படையாக இவர்கள் கலந்து கொண்டபோது ளுஆளு அணியினர் தாயகத்திலும், வெளியிலும் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த காத்திரமான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதது மட்டுமன்றி, எல்லாம் அழிந்து முடியட்டும் தலைமையைக் கைப்பற்றுவோம் எனக் காத்திருந்தார்கள்.

கடந்த 2 வருடங்களாக தாயக மக்களுக்கு ஆதரவாக புலத்தில் பேரெழுச்சி ஏற்பட்டது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் மக்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மிகப் பெருவாரியாகக் கலந்து கொண்டு தாயகத்தில் எப்படியாவது போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவேண்டுமென இராப்பகலாக தம்மால் முடிந்த அத்தனை வழிகளிலும் முயன்றார்கள். குறிப்பாக பிரித்தானியாவில் 2009 ஏப்ரல் 11ஆம் திகதி இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்;ட மக்கள் இலண்டனின் பிரதான வீதிகளை நிறைத்தார்கள். இரண்டரை இலட்சம் மக்களே இருக்கக் கூடிய பிரித்தானியாவில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் திரண்டார்கள் என்பது பிரித்தானியாவில் வரலாறு.

அத்துடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் இரவு பகலாக மாதக்கணக்காக தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினார்கள் என்பதும் வரலாறு. பூமிப் பந்தில் தமிழின உணர்வாளர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் அவர்கள் துடித்தெழுந்து தங்கள் இரத்த உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு போராடினார்கள். தமிழ்;நாட்டுச் சகோதரர்கள் உட்பட பலர் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தம்மைத் தாமே தீமூட்டிக் கொண்டார்கள். இப்பேரெழுச்சியால் ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற பல மட்டங்களிலும் எங்களது போராட்டம் தொடர்பான மாற்றங்கள் நிகழ்ந்தேறின.

மே 19க்குப் பின்னர் புலத்தில் தமிழ் மக்கள், மக்கள் கட்டமைப்புக்களை சனநாயக வழியில் நிறுவி போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நகர்த்தத் தொடங்கினர். தாயக மக்கள் 1977இல் மேற்கொண்ட தீர்மானத்தைப் பலப்படுத்தும் வகையில் சனநாயக வழிமுறையில் சுதந்திர தமிழீழத்துக்கான தமது விருப்பை மிகப் பெருவாரியாக புலத்தில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இதன் தொடர்ச்சியாக உலகளாவிய தமிழ் மக்களின் கட்டமைப்பு பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு உள்ளேயே சென்று சர்வ கட்சியினரதும் தார்மீக ஆதரவை தமிழ் மக்களின் போராட்டத்தின் பால் திரட்டியிருக்கின்றார்கள். போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்று நவநீதம்பிள்ளை உட்பட உலகளாவிய பலம் மிக்க நாடுகள் பலவும், ஐ.நா சபையும், முக்கிய அமைப்புக்களும் குரலெழுப்பி வருகின்றன. இவை யாவும் புலத்திலுள்ள தமிழ் மக்களின் அயராத கடும் உழைப்பால்; எட்டப்பட்டவை. இவ்வாறாக தமிழ் மக்களின் நீண்ட விடுதலைப் போராட்டம் அதன் உள்நாட்டு, பிராந்திய எல்லைகளைத் தாண்டி சர்வதேச மயப்படுத்தப்பட்டதாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்வு, 2009 மே 19 இன் முன்பே நிகழ்ந்துவிட்டது. எண்ணற்ற தியாகங்களுடன் நடந்த எமது போராட்டம் உலக மட்டத்தில் எமது உரிமைகளுக்கான உரத்த குரலை ஒலிக்க விட்டுள்ளது.

எமது இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை உலகம் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளதும், ஊடகங்களையும் மனிதவுரிமை அமைப்புக்களையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளதும் சர்வதேசத்தில் எமக்கு இருக்கும் சாதகமான அம்சங்கள். அத்தோடு மகிந்த ராஜபக்ஷ மேற்கு நாடுகளின் பூகோள அரசியல் நலன்களுக்கு மாற்றுத் திசையில் தன்னை நிலைநிறுத்தியிருப்பதன் மூலம் அந்நாடுகளின் அதிருப்தியைச் சம்பாதித்து வைத்துள்ளார் என்பதும் எமக்கிருக்கும் சாதகமான இன்னொரு விடயம். இலங்கையில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று உலகம் கருதத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், அவற்றைச் சாதகமாக்கி எமது உரிமைப்போரை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதே எமது மக்களின் அரசியல் தலைமை செய்ய வேண்டிய பணி. அதற்குரிய புத்திசாதுரியம், இராஜதந்திரம், நேர்மை, துணிவு, உறுதி என்பவற்றைக் கொண்டதாக தமிழ்மக்களின் தலைமை அமைய வேண்டும்.

அதைவிடுத்து இவ்வளவு காலமும் நிகழ்ந்த போராட்டத்தின் மூலம் பெற்றது எதுவுமில்லை, நாம் தோற்றுப்போய் விட்டோம் என்ற தோல்வி மனப்பான்மையை வளர்ப்பதோடு தருவதைப் பெற்றுக்கொள்வோம் என்ற கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தும் உறுதியற்ற தலைமைகள் எமக்குத் தேவையில்லை. வேகமெடுத்து வரும் புலத்து மக்களின் தாயக மக்களுக்கான விடிவை நோக்கிய செயற்பாடுகளைப் பலமாகப் பார்க்காமல் SMS அணியினர் பலவீனமாக உதாசீனம் செய்வது தார்மீக ரீதியிலும் அரசியல் மற்றும் இராசதந்திர ரீதியிலும் மிகவும் பிழையான அணுகுமுறை.

புலத்தில் உள்ள மக்கள் வேறு யாருமல்லர். தாயகத்திலுள்ள எமது மக்களின் இரத்த உறவுகள் மட்டுமல்லாது அதில் பெரும்பான்மையானவர்கள் சிறீலங்காவின் இனவழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறியவர்கள். அவர்கள்; பௌதீக ரீதியாகத்தான் புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே தவிர அவர்கள் தம் மன வெளிகளில்; தாயக நிலங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். மே 19க்குப் பின்னரான நிலையில் தாயகத்து மக்களும் புலத்து மக்களும் பங்காளிகளாக ஒன்றிணைந்து, தாயக மக்களுக்கு நிரந்தர அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் நிலையான தீர்வுத் திட்டமொன்றை நோக்கிப் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நிலைமை இவ்வாறு இருக்க புலத்து மக்களின் நல்லெண்ணத்தையும் அவர்களது பலங்களையும் சேர்த்து அவர்களை தாயக மக்களின் விடுதைலைக்கான பங்காளிகளாகக் கருதாமல் SMS அணியினர் அவர்களைத் திட்டமிட்டு தவிர்ப்பதும் ஒதுக்குவதும் வெளிப்படையான விடயம்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, சிறீலங்கா அரசாங்கம் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையாகக் குறுக்கி அதிகாரப் பரவலாக்கமே போதுமானதாகக் கூறுவதும், பிராந்திய வல்லரசு இதனை தனது கொல்லைப் புறத்துப் பிரச்சனையாகச்; சித்தரித்து ஒரு குறைந்தபட்ச தீர்வையே கொடுத்து தமிழின அழிப்பை மூடிமறைத்து விடவும் முயற்சிக்கின்றன. ஆனால் புலத்து மக்கள் கட்டமைப்புக்களோ தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி, நீண்டகால இனவழிப்பை வெளிக்கொண்டு வந்து உடனடித் தேவைகளையும், நீண்டகால நியாயமான தீர்வையும் பெறுவதற்காக திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றன. புலத்து மக்களால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்படும் இந்த நேரத்தில், அந்த வியூகத்தைச் சரியாகப் பாவித்து நியாயமான தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர்த்தாமல், தம்மால் மட்டுமே தீர்வைப் பெற்றுவிட முடியுமென்று SMS அணியினர்; கருதுகின்றனர். அத்துடன் புலத்தில் பெருவாரியான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களுடனான சந்திப்பை தட்டிக் கழித்துத் தவிர்க்கின்றனர்.

புலத்திலுள்ள சனநாயக மக்கள் கட்டமைப்புக்களோடு ஒரு பொது வேலைத் திட்டத்தை வரைந்து அவரவர் தளங்களில் நின்று வேலை செய்ய வேண்டுமென்று மக்கள் கட்டமைப்புக்களால் SMS அணியினரிடம் கோரிக்கை விடப்பட்டது. அதனை தட்டிக் கழித்து தங்களது நிகழ்ச்சி நிரலோடு ஒத்துழைக்கும் சிறுகுழுக்கள் மற்றும் தனிநபர்களோடு மட்டும் சந்திப்புக்களை மேற்கொண்டு தாங்கள் புலத்து மக்களின் கருத்துக்களையும் உள்வாங்குவதாக SMS அணியினர் நாடகமாடி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ளுஆளு அணியினரை புலத்தின் மக்கள் கட்டமைப்புக்களின் சார்பாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது. தாயகத்தில் பேரழிவைச் சந்தித்துள்ள எமது மக்களின் துயர்; துடைப்புப் பணிகளுக்கான ஒரு வலுவான கட்டமைப்பை தாயகத்திலே தமிழத் தேசியக் கூட்டமைப்பினரையே உருவாக்குமாறு கேட்கப்பட்டது.

அதற்கான நிதி மற்றும் புலமைசார் பங்களிப்புக்களை வழங்க புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள்; தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை ஒன்று சேர்ந்து எதிர் நோக்குவோமெனவும் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாம் தயாராக இருப்பதாகவும் அன்று கூறப்பட்டது. ஆனால் புலத்து கட்டமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட இவ்வாலோசனைகள் சக பாராளுமன்ற உறுப்பினர்களோடு கதைக்கப்படவும் இல்லை. இந்த ஆரோக்கியமான கோரிக்கை தொடர்பான எந்தப் பதிலும் சம்பந்தப்பட்ட மக்கள் கட்டமைப்பினருக்கு SMS அணியினர் வழங்கவுமில்லை.

பேரழிவைச் சந்தித்துள்ள தாயக மக்களின் துயரினைத் துடைப்பதற்கு தங்களுக்கு இருப்பதாகக் காட்டும் எந்தச் சக்திகளின் ஆதரவையும் பெற்றுக் கொடுக்கும்; காத்திரமான வழிமுறைகளை ளுஆளு அணியினர் செய்யவுமில்லை, அதனை ஏற்படுத்தித் தாருங்களென புலம் பெயர் மக்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு செயற்றிறனோடு பணியாற்றவுமில்லை. தமிழ் மக்களின் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களால் அந்த மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூடச் சொல்ல முடியவில்லை.

சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சரியாகக் கலந்து பேசாமல், தாயக மக்களின் கருத்தறியாமல், புலத்திலுள்ள மக்கள் கட்டமைப்புக்களோடு சேர்ந்தியங்காமல், அடிமட்ட மக்களோடு உறவு பேணாமல், பேரழிவைச் சந்தித்த மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளைச் செய்து கொடுக்காமல், தாயக மக்களின் உண்மையான விடுதலையை உளமார நேசிக்காமல், இலட்சியத்தில் உறுதியானவர்களை ஓரங்கட்டும் இந்தத் தலைமையை ஓரங்கட்டுவோம். மக்களையும் அவர்களது உண்மையான விடுதலையையும் உறுதியாக நேசிக்கும், வெளிப்படையாகச் செயற்படும், சேர்ந்தியங்கி முடிவெடுக்கும் தன்மைமையைக் கொண்டியங்கும், இலட்சியத்தில் பற்றுறுதியும் செயற்திறனும் கொண்ட, தோல்வி மனப்பான்மையற்றவர்களைத்; தெரிவு செய்து ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவோம். ஒற்றுமை என்ற பெயரில் மக்களையும் விடுதலையையும் பிரித்துச் சின்னாபின்னமாக்கும் இந்த SMS அணியினரைத் தோற்கடித்து பலமான ஒரு புதிய அணியைக் கட்டமைப்போம்.

-பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு-

Comments