“தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது லட்சியங்களை மாற்றிக்கொள்பவன் எதனையும் அடைவதில்லை” – முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன்
சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடுகின்றது. யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடனான நேர்காணல்.
யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜன் தொடர்பாக சிறு குறிப்பு:
திரு சி. வரதராஜன் அவர்கள் மிகச் சிறந்த தேசப்பற்றாளர் அவர் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியிருந்தார். பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்திருந்தார்.
தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், 1997 – 1998 ஆம் காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார்.
நாலாவது ஈழப்போர் காலத்தில் 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற அவரின் கொள்கைப்பற்று தற்போது அவரை யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளது.அவர் எமக்கு அளித்த நேர்காணல் வருமாறு:
கேள்வி: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளராகிய உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சனைகள் இரண்டையும் முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இது தொடர்பில் உங்களின் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளன?
பதில்: ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகள் எமது விடுதலைப் போராட்டம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. மனிதாபிமானப் பிரச்சனைகள் என்பது இவ் விடுதலைப் பேராட்டத்தின் விளைவாகத் தோன்றியதாகும். மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளத் தீர்த்துவிடமுடியாது.
ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதன்மூலம் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கமுடியும். இதுதான் உண்மை. ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் காலம் வரை தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒத்திவைக்க முடியாதவாறு அது இன்று பூதாகரமாக வளர்ந்துவிட்டது.
எனவே நாம் இன்று இவ்விரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற பலமான மூன்று தூண்களே ஈழத் தமிழினத்தைத் தாங்கி நிற்கின்றன. இத் தூண்கள் தகர்க்கப்படுமாயின் இத் தீவில் எமது இனம் முற்றாகவே அழிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.
உதாரணமாக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அண்மைக் காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர் என்றும் அதனை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அடிக்கடி கூறிவருகின்றார்.
ஆனால் இது உண்மையல்ல. இறுதியாக எடுக்கப்பட்ட 2001ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி கொழும்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான 22,51,274 பேரில் 17,24,459 பேர் சிங்களவர்களாகும். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 76.6 சதவீதமாகும். இம் மாவட்டத்தில் தமிழர்களின் மொத்தத் தொகை 2,72.660 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12.1 சதவீதமாகும்.
இவ்வாறு உண்மையில்லாத ஒன்றை அடிக்கடி கூறுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவர் கூறும் செய்தி என்னவென்றால், யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படப் போகின்றார்கள் நீங்கள் அதனை எதிர்க்காதீர்கள் என்பதேயாகும். இதனை முறியடிக்க வேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் சொல்லளவில் மட்டுமன்றி செயலளவிலும் உறுதியாக இருக்கவேண்டும்.
ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற கோட்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதன் மூலமே எமது அரசியற் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணமுடியும். அதைவிடுத்து இவையெல்லாம் வெறும் கோசங்கள், கனவுகள், யதார்த்தமற்றவை என்றெல்லாம் கூறி இவற்றைக் கைவிடுதல் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்குச் சமம். பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற வினாவும் எழுந்துள்ளது.
1970கள் வரை இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியடைந்த பின்னர் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அவற்றை அடையமுற்பட்டு அதுவும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற சந்தேகம் எழுவது இயற்கையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்திய 30 வருட அகிம்சைப் போராட்டம் தமிழ் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர – சர்வதேசமயப்படுத்தப்படத் தவறிவிட்டது.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போல ஒரு வட்டத்திற்குள் நாங்கள் இருந்து கொண்டோம். ஆனால் கடந்த 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழ் அரசியற் பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு சென்று அதனை நியாயப்படுத்தி உள்ளது. எனவே இந்த இடத்திலிருந்து கொண்டு ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற அரசியல் ஊடாக தீர்வுகாணமுற்படுவது சாத்தியமானது. ஆனால் இதனை மேற்கொள்வதற்கு விட்டுக்கொடுப்புக்கள், மற்றும் சமரசங்களுக்குச் செல்லாத ஒரு பலமான – உறுதியான அரசியற் தலைமை – ஓர் அரசியல் இயக்கம் இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.
இவ்வாறான ஒரு உறுதியான அரசியற் தலைமையின்கீழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என நம்புகின்றோம். இடம்பெயர் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதலும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் எம்முன்னுள்ள முக்கிய பிரச்சனைகளாகும். சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழ் மக்களினதும் ஒத்துழைப்புடன் இதனை மேற்கொள்ளமுடியும் என நாம் நம்புகின்றோம்.
கேள்வி : தமிழ் தேசியக் கூட்மைப்பின் கொள்கைகளில் இருந்து நீங்கள் எந்த வகையில் வேறுபட்டு நிற்கின்றீர்கள்?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்றது. கேட்டு எதனையும் பெறமுடியாது – தருவதை வாங்கிக்கொண்டு திருப்திப்படுவோம் என்ற நிலைக்கு கூட்டமைப்பு வந்துவிட்டது.
தமிழ் மக்களின் மனதில் ஓர் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி தமிழ் இனத்தை ஒரு தோல்வியடைந்த சமூகமாகக் காட்டி கிடைக்கின்றதை மட்டும் கொண்டு வாழப் பழகிக்கொள் என்ற நிலைக்கு எம்மக்களைக் கொண்டு செல்லமுற்படுகின்றது.ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த என்ன செய்வது? என்ற வேதனையில் இருந்த மக்களை ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு எடுத்தமுடிவு தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் அனாதையாக்கியது.
நாட்டின் ஜனாதிபதி யார் என்பதைத் தமிழ் மக்கள் தான் தீர்மானிக்கப் போகின்றார்கள் என்று உசுப்பேத்தி இறுதியில் தமிழ் மக்கள் இரண்டு முறை வாக்களித்திருந்தால் கூட ஜனாதிபதியைத் தெரிந்தெடுத்திருக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.
அரசியல்ரீதியாகவும் தமிழ் மக்கள் பலமற்றவர்கள் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது எனத் தமிழ்க் காங்கிரஸ் எடுத்த முடிவையொற்றி கூட்டமைப்பும் பகிஸ்கரிப்பது என்ற முடிவை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் வெல்ல வைத்திருக்க மாட்டார்கள்.
அப்போது தமிழ் மக்களின் வாக்குப்பலம் முக்கியத்துவம் வாய்ந்தாகப் பேசப்பட்டிருக்கும். கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தவறான முடிவினை மேற்கொண்டு தமிழ் மக்களைதோல்வி மனப்பான்மைக்குள் வீழ்த்தி, இனிமேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது -இந்தியா சொல்வதைக் கேட்போம் என்ற நிலைக்குத் தமிழ் மக்களைக் கொண்டு வந்து விட்டு விட்டது. தற்போது கூட்டமைப்பு 30 வருடங்களுக்கும் முன்னால் உள்ள காலப்பகுதிக்கு எமது அரசியல் இலக்குகளைக் கொண்டு செல்ல முற்படுகின்றது.
ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். எமது கருத்தின்படி நாம் தோற்றுப்போன சமூகமல்ல. மாறிவரும் சர்வதேச ஒழுங்குகளுக்கேற்ப பாராளுமன்ற அரசியலின் ஊடாக எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கேள்வி : இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாயகத்து அரசியல் பயணம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியம் தொடர்பில் உங்களின் கருத்துக்கள் என்ன?
பதில்: 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய கருத்து ‘புலம்பெயர் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
” எமது மக்களின் அரசியற் பிரச்சனையைத் தீர்ப்பதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் எம்மால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற அரசியலிற்குள் தற்போது நாம் புகுந்து அதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு மட்டுமன்றி மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும்கூட தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையே காரணம்.
புலம்பெயர் தமிழர்கள் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஜனநாயகமுறையில் பாராளுமன்ற அரசியலுக்குட்பட்டவகையில் தாயகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழ் மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரசியல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பாக ஓர்; உறுதியான தீர்வினைப் பெறக்கூடியதாக இருக்கும்.
கேள்வி : நீங்கள் யாழ் குடாநாட்டில் பிரதம வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள், உங்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களும், தேசியத்திற்கு ஆதரவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?
பதில்: இவ்விடத்தில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவேண்டிய நிலை உள்ளது. நான் ஒரு அரசியல்வாதியல்ல. அரசியல் எனது தொழிலும் அல்ல. நான் ஒரு பொருளியல் ஆசிரியன்.
இதுவரைகாலமும் ஒரு அரசியல் நடவடிக்கையாளனாக மட்டுமே இருந்தவந்த நான், தற்போது நேரடி அரசியலில் ஈடுபடமுன்வந்ததற்குக் காரணம், தமிழர்களின் அரசியற் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமேயாகும். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 30 வருடங்களிற்கும் முன்னுள்ள நிலைக்கும் அப்பால் கொணடு செல்ல முற்படுகின்றது.
“தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியங்களை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்;லை” என்பது எனது நம்பிக்கை. தமிழர்களின் இலட்சியங்களை கூட்டமைப்பு வெறும் கோஷங்களாகவே இன்று பார்க்கின்றது. சலுகைகள் எல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளாக மாறக்கூடிய ஒரு அபாயம் இன்று நிலவுகின்றது.
இந்நிலைமையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறையாகவே எனது நேரடி அரசியற் பிரவேசத்தைப் பார்க்கின்றேன்.நான் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியுள்ளேன்.
பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்தேன். தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் சிறையிலிருந்தேன்.
1997 – 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் இருந்தேன். 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானேன். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசித்ததற்குக் கிடைத்த வெகுமதிகளாகவே நான் இவற்றைக் கருதுகின்றேன்.
எமது அணியில் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் நேரடி அரசியலுக்குப் புதுமுகமான என்னை முதன்மை வேட்பாளராகத் தெரிவு செய்தமை தேசியத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் என்னுடைய மாணவர்கள்.
நாங்கள் தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்கள் – நேசிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளர்கள்.அவர்களில் ஒருவர் தான் தோற்றாலும் பரவாயில்லை. சேர் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற தனது மனவிருப்பத்தை தனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் யாழ் மக்களின் ஒட்டுமொத்தமான கருத்தும் ஆகும். எனவே எமது வெற்றியை நாளைய சரித்திரம் கூறும்.
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நான்கு பிரிவுகளாக பிளவடைந்துள்ளது. இந்த நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?
பதில்: ஆரம்ப கட்டத்தில் இப் பிளவுகள் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியமை மக்கள் மனதில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஏனைய பிளவுகள் தனி மனிதர்களின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரசின் வெளியேற்றம் ஒரு கட்சியின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது.
ஊடகங்களின் உதவியுடன் எம்மீது பல அவதூறுகளை கூட்டமைப்பு மேற்கொண்டது – மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தற்போது காங்கிரசின் வெளியேற்றத்தின் நியாயத்தன்மையை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனடிப்படையில் அவர்கள் ஒர் தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
கேள்வி : தற்போதைய பொதுத்தேர்தலில் உங்களின் கட்சி யாழ்மாவட்டத்திலும், திருமலையிலும் மட்டுமே போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் போட்டியிடவில்லை, அதற்கு சிறப்பு காரணங்கள் ஏதும் உண்டா?
பதில்: எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு தலைமை வகிப்பவர்கள் மூன்றுபேர். அவர்களில் ஒருவர் திருகோணமலையில் போட்டியிடுகின்றார்.
ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். இந்த மூவரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்களேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான பாதைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இங்கு சில தனி மனிதர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் களமிறங்கியுள்ளோம் எனக் கருதவேண்டாம். உண்மையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே நாம் இவ்விரு மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளோம்.
கேள்வி : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களில் சிலர் வெற்றி பெற்ற பின்னர் உங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படும் திட்டங்கள் உண்டா?
பதில்: நிச்சயமாக. எமது நீண்டகால செயற்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கூட்டமைப்பின் தவறான தலைமைகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும்போது தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்றவர்களோடு ஒருங்கிணைந்து செயற்படுவதில் எதுவித தடைகளும் இல்லை. இதுவே எமது விருப்பமும்கூட.
கேள்வி : திருமலையில் உங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் முன்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை சிலர் முன்வைப்பது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?பதில்: திருமலை நகரசபைத் தலைவர் திரு.கௌரி முகுந்தன் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பாகவே இச் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
உள்ளுராட்சி சபைகள் தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும். எனவே இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்றோரை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.
இதனை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. இது ஒருபுறமிருக்க, கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் (இவர் தற்போது கூட்டமைப்பின் வேட்பாளரும் கூட) வட பகுதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதை அடிப்படையாகக் கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டமுடியுமா?
கேள்வி : யார் வெற்றி பெற்றாலும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா அவர்களுடன் பேசியே தீரவேண்டும் என்பது தற்போது கட்டாயமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியாவுடன் உங்களின் அனுகுமுறைகள் எவ்வாறு அமையப் போகின்றது?
பதில்: இந்தியத் தரப்போடு பேசவேண்டும் என்பதில் எமக்குக் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – தோற்றுப் போய்விட்டோம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் சராணாகதி அடையமாட்டோம். எமக்கு என்ன தேவை என்பது தொடர்பாக இந்தியாவோடு பேசுவோம்.
மாறாக இந்தியாவின் மனதை நோகடிக்கக்கூடாது – இந்தியா எமக்குத் தர விரும்புவதையே நாம் அவர்களிடம் கேட்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் நாம் இல்லை.
கேள்வி : தமிழ் மக்களிடம் உங்கள் கட்சிக்கு உள்ள ஆதரவுகள் எவ்வாறு உள்ளன?பதில்: பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் எம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.
எம்முடன் கலந்துரையாடுகின்ற மக்கள் எம்மிடம் விடுக்கின்ற ஓரேயொரு வேண்டுகோள் என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட – தற்போது மேற்கொண்டுவருகின்ற நயவஞ்சகமான நடவடிக்கைகளை மக்கள் முன் வெளிப்படுத்துங்கள் என்பதேயாகும்.
கேள்வி : யாழ் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாள 324 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அங்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிகள் எவ்வாறு இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
பதில்: 16 அரசியற் கட்சிகளும் ஏறத்தாழ 11 சுயேச்சைக் குழுக்களும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவற்றில் பல அரசியற் கட்சிகள் – சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றின் பெயர்கள், அவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவற்றின் சின்னங்கள் என்பன எதுவுமே மக்களுக்குத் தெரியாது.
5 அரசியற் கட்சிகள் பற்றிய விபரங்களை மட்டுமே மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவாஜிலிங்கத்தின் தலைமையில் போட்டியிடும் இடதுசாரி முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஈ.பி.டி.பி), ஐக்கிய தேசியக் கட்சி என்பனவே அவையாகும். இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட இரண்டு கட்சிகளும் சிங்களக் கட்சிகள் என்றவகையில் மக்களின் ஆதரவைப் பெருமளவிற்கு இழந்தவையாகவே உள்ளன.
குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தனிப்பட்ட நபர்களுக்காக சில வாக்குகளைப் பெறமுடியும். அடுத்து சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் 3205 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.எனவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் (தமிழக் காங்கிரஸ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான நேரடிப் போட்டியாகவே யாழ் தேர்தல் களம் அமைந்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.
இப் போட்டியில் நாம் முன்னிலை பெற்று வருகின்றோhம் என்பதே மக்களின் கருத்தாகும். நாம் மக்களுக்குள் இறங்கிக் கடுமையாக வேலை செய்தால் – எமது முன்னணியின் கொள்கைகளை மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினால் மாபெரும் வெற்றியை நாம் அடையமுடியும் என மக்கள் கருதுகின்றனர்.
2004ம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற ஆசனங்களைப் போன்று இம்முறையும் பெறுவீர்களா என்று கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரிடம் கொழும்பு பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் இடம்பெற்ற பேட்டியொன்றில் கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் கூறிய பதில் அதைவிட சில ஆசனங்கள் குறைவாகவே பெறுவோம் என்பதாகும்.
அதற்கு அவர் கூறிய காரணம் கடந்த தேர்தலில் யுத்த நிறுத்தம் நிலவியது – மக்கள் சுந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அன்று யுத்தநிறுத்தம் இருந்தது.
இன்று யுத்தமே இல்லையல்லவா. இவ்வாறான சூழ்நிலையில் முன்னரிலும் கூடுதலான ஆனங்களையல்லவா பெறவேண்டும். எனவே எங்களைப் பற்றிய பயமே தாங்கள் குறைந்த ஆசனங்களையே பெறுவோம் என்று கூறியதற்குக் காரணமாகும்.
கேள்வி : யாழ்குடாநாட்டில் உள்ள பிரபல ஊடகங்களில் ஒன்றான உதயன் பத்திரிகையின் உரிமையாளர், தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும், வீரகேசரியின் ஊடகவியலாளர் ஐ.தே.கவிலும் போட்டியிடும் நிலையில் அங்கு ஒரு ஊடகப்பரப்புரை உங்களுக்கு எதிராக வலுப்பெறும் சாத்தியங்கள் உண்டா? அவ்வாறாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று அப் பத்திரிகைகள் சார்ந்த ஊடகவியலாளர்கள் போட்டியிடுவதனால் அப் பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து தடம்புரண்டு பக்கச் சார்புடன் செயற்படுவதாக மக்கள் உணர்கின்றனர்.
எமது செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும், சில அறிக்கைகளை – செய்திகளை மிகவும் காலம் தாழ்த்தி வெளியிடுவதுமான நடவடிக்கைகளில் பெரும்பாலான பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன.
நாம் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சியாகப் போட்டியிடுகின்றபோதிலும்கூட எம்மை ஒரு சுயேச்சைக் குழு என்றும், வரதர் அணி என்றும் கொச்சைப்படுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.
நாம் அன்றாடம் மக்களைச் சந்திப்பவர்களாக இருப்பதனால் செவி வழியாக எம்மைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன. குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் தினமும் மாணவர்களை வகுப்பறையில் நேரடியாகச் சந்திக்கின்றேன். இதன் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது.
கேள்வி : நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: பெரும்பாலான புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவுகளை தொடர்ந்து எமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது பழைய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமெங்கும் பரவியுள்ளனர்.
நான் தேர்தலில் போட்டியிடுவததை அறிந்தவுடன் தமது மகிழ்ச்சியையும் ஆதரவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பணபலம், ஊடகபலம் வாய்ந்த சக்திகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். மக்கள் பலத்தை மட்டும் நம்பியே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
இப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். இணையத் தளங்களினூடாக தங்கள் ஆதரவுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்படவேண்டும். தாயகத்திலுள்ள தங்களின் உறவுகளுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி எமக்குப் பின்னால் அணி திரளச் செய்யவேண்டும். பொருளாதாரரீதியான ஆதரவையும் நாம் நாடி நிற்கின்றோம்.
கேள்வி : வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை மற்றும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து இயங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் வேறுபட்டவை.
எனினும் இவ்விரண்டு பகுதி மக்களுக்கும் பொதுவான சில அரசியற் பிரச்சனைகளும் குறிப்பாகப் பொருளாதாரப் பிரச்சனைகளும் உள்ளன. இவற்றினடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதுவித தடைகளும் இல்லை.
மறைந்த மலையகத் தலைவர் திரு. தொண்டைமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.
நன்றி: ஈழம் இ நியூஸ்
Comments