சிறீலங்காவின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது, புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது.
சிறீலங்காவில் 350 ஆடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள். 2008 ஆம் ஆண்டு நான்காயிரம் கோடி ரூபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இந்த அடைவினை எட்ட முடியாது என கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய ஆய்வினையும் எதிர்வு கூறலையும் உள்ளடக்கியுள்ள அந்த கட்டுரையானது இந்த பின்னடைவுக்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் வரி சலுகையினை நிறுத்தியுள்ளமை, அமெரிக்காவில் புலம்பெயர் மக்கள் நடத்தும் இலங்கை ஆடை கொள்வனவு செய்வதனை புறக்கணிக்கும் போராட்டம், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
சிறீலங்கா அரசு எப்படித்தான் சில விடயங்களை மூடி மறைத்தாலும், அல்லது சாதகமாக விவாதித்தாலும் உண்மை என்னவெனில் சிறீலங்கா ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சியினை சந்திக்கின்றது என்பதனை மாற்றவோ, மறுக்கவோ முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய சந்தைகளையும் அமெரிக்க சந்தைகளையும் இழந்து கொண்டிருக்கின்றது. இந்த இழப்புக்களுக்கு காரணமாக இன்னொரு முக்கிய காரணி இருக்கின்றது. அதாவது சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்ற உலகளாவிய பிரச்சாரமும் குற்றச்சாட்டும் இதற்கு உதாரணமாகும்.
ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சிறீலங்கா ஆடைகளின் ஏற்றுமதியில் 50 விழுக்காடு நுகர்வினை உள்வாங்குகின்றன. இந்த 50 விழுக்காடு ஏற்றுமதிக்கான சந்தைகளை உடனடியாக வேறு இடங்களில் பெற்றுக்கொள்ள முடியாது. ஆசியாவில் அரசாங்கம் பெற முடியும் என நம்புவது, பிரச்சாரம் செய்வது போலியானது எனவும் அந்த கட்டுரை தெரிவிக்கின்றது.
Comments