தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் சக்தியாக த.தே.கூ நிலைக்க வேண்டும்?

அரசாங்கத்துக்கும், அதற்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலானதாக இருப்பது வெளிப்படை.

நடைபெறப் போகும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் அதன் மூலம் தமிழ்மக்களின் பேரம் பேசும் பலத்தைச் சிதைப்பதற்கும் திரைமறைவில் சதிமுயற்சிகள் நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் வேலைகளில் கடசிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் அவரது இந்த அறிக்கை புறந்தள்ளப்படக் கூடியதொன்றல்ல.

அரசாங்கத்துக்கும், அதற்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலானதாக இருப்பது வெளிப்படை. விடுதலைப் புலிகளை ஏக பி;ரதிநிதிகளாக முன்வைத்து கடந்த பொதுத்தேர்தலில் 22 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு- புலிகளின் தற்போதைய உறங்குநிலைக்குப் பின்னர் தமிழ்மக்களின் ஆதரவு நிலைக்காது என்றே அரசாங்கம் கருதிக் கொண்டிருந்தது.

அத்துடன் புலிகளின் பின்புலச்செயற்பாடுகளால்தான் கூட்டமைப்பால் வெற்றிபெற முடிந்தது என்றும் அரசதரப்பு குற்றம்சாட்டி வந்தது. ஆனால் இப்போது கூட்டமைப்புக்கு என்றொரு தமிழ்த் தேசியத் தளம் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

அது யாழ்.மாநகரசபைத் தேர்தல், வவுனியா நகரசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவின் மீது தமிழ்மக்கள் ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தாத போதும் அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு முக்கியமானதொரு கட்சியாக- எதிர்பார்ப்பு நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது.

அதனால் அரசதரப்புடன் இணைந்து கொள்ளுமாறு கூட கூட்டமைப்புக்கு அடிக்கடி அழைப்புகள் செல்கின்றன. அண்மையில் கூட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த அழைப்பை பகிரங்கமாகவே விடுத்திருந்தார். ஆனால் கூட்டமைப்பு தமக்கு இருக்கின்ற ஆதரவுத் தளத்தை கட்டியமைப்பதிலும்- அதை சரியான வழியில் பயன்படுத்துவதிலும் எந்தளவுக்கு உறுதியுடன் இருக்கிறது என்ற கேள்வி பலரிடமும் இருக்கவே செய்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் கூட்டமைப்புக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கப் போகிறது. இதற்குக் காரணம் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உள்முரண்பாடுகளேயாகும்.

  • நான்கு கட்சிகளினது கூட்டமைப்பு என்பதற்கும் அப்பால் சுயாதீனமான சில முக்கிய பிரமுகர்களின் ஒன்றிணைப்பாகவே கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றது. ஆனால் இன்று அது தமிழரசுக் கட்சி என்ற ஒரு கட்டமைப்பின் கீழ் உருவாக்கம் பெறும் நிலையில் இருந்தாலும் அதற்குள் குழப்பங்கள் அதிகம் இருக்கவே செய்கின்றன. இந்தக் குழப்பங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தவை தான். அவ்வப்போது இப்படியான குழப்பங்களுக்குப் புலிகள் தீர்வு கண்டு வந்தனர். ஆனால் இப்போது அவர்கள் இல்லாது போயுள்ள நிலையில் கூட்டமைப்புக்குள் முடிவுகளை எடுப்பதற்காக- சிலரைப் புறந்தள்ளி விடும் நிலை ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது.

இது சரியானதொரு முடிவாக இருக்குமா என்பதை அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் வாக்குகளுமே தீர்மானிக்கப் போகின்றன. கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் வகையில் மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் குறைந்தது மூன்று சுயேட்சைக் குழுக்களை போட்டியில் நிறுத்தி வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக விநோநோகராதலிங்கம் கூறியிருந்தார். அதுபோலவே யாழ்ப்பாணத்திலும் அப்படியான முயற்சிகள் நடக்கின்றன. ஆளும்கட்சியே இதன் பின்னணியில் இருப்பதான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.

அதேவேளை ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டு கட்சிகள் மட்டுமே கூட்டமைப்பின் வெற்றிக்கு குழி பறிப்பதாக நினைக்கக் கூடாது. கூட்டமைப்புக்குள்ளேயே அதன் பலம் சிதைவடையக் காரணமான சக்திகள் இருப்பதை எவராலும் நிராகரிக்க முடியாது. தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் என்று கூறி கூட்டமைப்பில் ஒரு பகுதியினரை வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.

  • இதற்கு சில ஊடகங்களின் துணையும் பெறப்படுகின்றன. முதலில் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அடுத்த கட்டமாக சிவநாதன் கிசோர் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. மேற்கூறப்பட்டவர்கள் தொடர்பான விமர்சனங்களுக்கு அப்பால் நின்று பார்த்தால், இவர்கள் அனைவரும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வராதவர்கள்.

  • இது மிகவும் முக்கியமான விடயம். இது போன்ற நிலை மேலும் பலருக்கு வரலாம். கூட்டமைப்பின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் கருத்துடன் ஒத்துக்போக விரும்பாதவர்களை எப்படியாவது வெளியேற்றி விடுவதில்- அல்லது கைகழுவி விடுவதில்; பல்வேறு சக்திகளும் முனைப்புடன் இயங்குவது தெளிவாகவே தெரிகிறது. கூட்டமைப்பை கைக்குள் போட்டுக் கொண்டு- அவர்களின் வழிகாட்டியாக இயங்குவதற்கு சில சக்திகள் விரும்புவதாகவே ஐயப்பட வேண்டியுள்ளது. இதன் விளைவாக கூட்டமைப்புக்குள் புதிய புதிய குழப்பங்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

  • அடுத்தடுத்து வரும் நாட்களில் இது முற்றி வெடிக்கப் போகிறது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பின் போது இந்த உள்வீட்டு யுத்தம் வெளியே தெரியவரும். கூட்டமைப்பை சிதைப்பதற்கு வெளியே இருந்து முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுவதெல்லாம் சரியானதே. ஆனால் வெளிநபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னர் கூட்டமைப்புக்குள்ளேயே- ஒற்றுமையைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோர் குறித்து கவனம் செலுத்தப்படுவதே பொருத்தமானது.

கூட்டமைப்பை எந்த வகையிலாவது சிதைத்துவிட வேண்டும் என்று கனவு காண்பவர்கள் ஏராளம்.

  • இந்தக் கட்டத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முடிவு கட்டும் வகையில் வலுவானதொரு அமைப்பான- தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் சக்தியாக நிலைத்திருக்க விரும்பினால், முதலில் உள்வீட்டுச் சிக்கலுக்குள் அடுத்தவரை நுழைய விடாமல் பாதுகாப்பதே புத்திசாலித்தனமானது.

முரணான கருத்துகளை கொண்டிருப்போரை ஒவ்வொருவராகப் பிடித்து வெளியே விட்டால் அது கூட்டமைப்பாக இருக்க முடியாது. அதுபோலவே மாற்றுக் கருத்துகள் இல்லாமல் ஒரு கூட்டமைப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம். அந்தளவுக்கு ஒருமித்த கருத்து இருக்குமேயானால்- நான்கு கட்சிகளும் எப்போதோ ஒன்றாகியிருக்கும்.

கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக வெளியே துரத்தி விடுவதிலேயே குறியாக இருந்தால் பலம் பெற்ற சக்தியாக ஒருபோதும் உருவாக முடியாது.

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில் பேரம் பேசுகின்ற சக்தியாக உருவெடுப்பதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளுமா என்பதை- உள்வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் அது கடைப்பிடிக்கவுள்ள அணுகுமுறையில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

கொழும்பிலிருந்து கபில்

Comments

Vasanthan said…
அண்ணை, உது எந்தக்காலம் எழுதின கட்டுரை. இப்பதான் கொண்டுவந்து போட்டிருக்கிறியள்.
Tamilsvoice said…
எதை எப்போது போடவேண்டுமோ அப்போதே போடப்பட்டிருக்கின்றது