இனப் பகையை வளர்த்துச் செல்லும் சிங்கள தேசத்தை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இப்போதும் தமிழீழம் உள்ளது!
எம்மால் முடியுமா? என்ற கேள்வியைப் பரிசீலிப்பதற்கு முன்பாகவே எம்மில் சிலர் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிடுகின்றார்கள். முடியுமா? என்ற சந்தேகத்திற்கு, பலவீனமான பலரின் பதில்களும் அதுவாகத்தான் இருக்கும். அந்தப் பலவீனமான நினைவுகளும் முடிவுகளும்தான் உலகில் தமிழர்களுக்கென்ற ஒர நாடுகூட இல்லாத அவலத்தைத் தோற்றுவித்தள்ளது.
விடுதலைப் புலிகள் உருவாகும் வரை சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும், படுகொலைகளையும், அவமானப்படுத்தல்களையும், அபகரிப்புக்களையும் எதிர்த்து நிற்கத் துணிவில்லாமல் ஓடி ஒழிந்த தமிழினத்தின் மீதான இறுதித் தாக்குதலாக 1983 அமைந்தது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் அணி திரள்தல்களும், எதிர்த் தாக்குதல்களும், அதனால் பெற்ற வெற்றிகளும் ஈழத் தமிழாகளுக்கு எம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. அந்த நம்பிக்கை தமிழீழம் என்ற புதிய தேசத்தின் கட்டுமானத்தை நோக்கி விரைவாக நகர்ந்தது.
புதிய உலக ஒழுங்கு என்ற தலைவிதிக்குள் எமது விடுதலைக்கான வேள்வியும் சிக்கிக் கொண்டது. 21 நாடுகளின் ஆயுத, ஆலோசனை பலத்துடன் தமிழீழ விடுதலைக் களம் சிதைக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் இரக்கமில்லாமல் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட அவர்களுக்காகப் பேசுவதற்கும் யாரும் இல்லாத நிலையில், புலம்பெயர் தமிழர்கள் அவர்களுக்கான பேசும் சக்தியாகவும், அவர்களை மீட்கும் பலமாகவும் அணிதிரண்டு வரும் நிலையில், எம்மால் முடியாது என்ற கருத்துருவாக்கமும் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முடியாது என்ற முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கருத்துருவாக்த்தினூடாக சிங்கள தேசத்திடம் ஈழத் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கும் திட்டத்துடன் சில சக்திகளும், இந்திய வல்லரசிடம் ஈழத் தமிழாகளை மீண்டும் சிறைப்படுத்தும் திட்டத்துடன் சில சக்திகளும் முயற்சிப்பது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த முடியாது என்ற நம்பிக்கைச் சிதைவிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதும் மீட்டெடுப்பதும் தற்போது அவசியமும், அவசரமுமான பணியாக உள்ளது.
முடியாது என்ற கருத்துருவாக்கத்தை சிங்கள தேசம் சார்ந்து எடுப்பவர்கள் பக்கம் நமது பார்வையைத் திருப்பினால், அவர்கள் அனைவருமே அந்தக் கருத்துருவாக்கத்தின் மூலம் சிங்கள தேசத்திடமிருந்து தமக்கானவற்றைப் பெறும் நோக்கத்தை மட்டுமே கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். முடியாது என்ற மனச் சிதைவை ஈழத் தமிழர்களிடம் ஏற்படுத்தி, அதைத் தமக்கான வளப்படுத்தல்களக்காகப் பயன்படுத்தும் சதியினைக் கொண்டது. டக்ளஸ், கருணா, பிள்ளையான், கிஷோர், தங்கேஸ்வரி என்ற நீண்ட பட்டியலுடன் இவர்கள் களத்தில் நிற்கின்றார்கள்.
முடியாது என்ற அடுத்த கருத்துச் சிதைவாளர்களை எடுத்துக்கொண்டால், சிங்கள அடிவருடிகள் சிங்களத்துடன் இணைந்து மேற்கொள்ளும் சதியினைப் போலவே, இந்திய தாசர்களான இவர்களும் முள்ளிவாய்க்காலில் தோற்றுப்போன தமிழினத்தை இந்தியாவிடம் விலைபேசி விற்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்த இரண்டாவது தரப்பினர் முன்னையவர்களை விடவும் ஆபத்தானவர்கள். சிங்கள தேசத்திடம் தோற்றுப்போனவர்கள் மீண்டும் சுதாகரித்துக்கொண்டு எழுவதற்கான எதிர்கால சந்தர்ப்பங்களைக் கொண்டுள்ளனர்.
மாறாக, இந்திய தாசர்களின் முடியாது என்ற இந்த மனச்சிதைவுக்குள் தள்ளப்படுபவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்குச் சாத்தியமே உருவாகப் போவதில்லை. எழுபதுகளில் இவ்வாறான இந்திய தாசர்களால் சிறைபடுத்தப்பட்ட காரணத்தினாலேயே ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் செல்லப்பட்டு இத்தனை கோரமாக அழிக்கப்பட்டாhகள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் பின்னால் இந்தியாவே இருந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் கள முனைகளில் பயிற்சி பெற்று, பின்னர் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் ஒரு நண்பர் என்னிடம் இந்தியாவை எதிர்த்து, இந்தியாவை நிராகரித்து என்ன செய்துவிட முடியம்? என்று தன் மனச் சிதைவை வெளிப்படுத்தினார். இந்தியா என்ற பிரமாண்டத்தின் பிரமிப்பிலிருந்து இப்போதும் விடுபட முடியாமல் இருட்டுக்குள் பாதைகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கின்றார்கள். கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் நாங்கள் எப்படித் தோற்கடிக்கப்பட்டோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 30 வருட ஆயுதப் போராட்டத்தில் சிங்கள தேசத்தால் தமிழர் படையை வெல்ல முடிந்திருக்கவில்லை. மூன்று வருட கடும் போரில் இந்தியப் படைகளால் ஈழப் படைகளை வெல்ல முடிந்திருக்கவில்லை. இறுதிப் போரில் தமிழீழத்தை வெல்வதற்கு இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் என 21 நாடுகளின் இராணுவ பலம் தேவைப்பட்டது என்பதை நாம் தோற்றுப்போன நிலையிலும் நெஞ்சு நிமிர்த்திப் பெருமையுடன் உரத்துக் கூற முடியும்.
இப்போதும், இனப் பகையை வளர்த்துச் செல்லும் சிங்கள தேசத்தை எதிர்த்து மீண்டும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இப்போதும் தமிழீழம் உள்ளது. அது எம்மால் முடியும் என்பதை விடுதலைப் புலிகள் நிரூபித்தே உள்ளார்கள். உலக வரலாற்றில் யுத்தங்கள் எத்தனையோ பேரழிவுகளை நிகழ்த்தியுள்ளது. அந்த அழிவுகளிலிருந்து எத்தனையோ இனங்கள் மீண்டு எழுந்துள்ளன. தமிழீழமும் ஒரு பேரழிவைச் சந்தித்துள்ளது.
அதிலிருந்து நாம் மீண்டு எழுவோம். எதிரிகள் மிகக் கொடூரமானவர்களாக இருக்கும்போது வெள்ளைக் கொடியேந்துவதும் பயன்தரப் போவதில்லை. வேட்டை நாய்களுடன் புள்ளிமான்கள் சமரசம் செய்து வாழ முடியாது. தற்போது தமிழீழமும் வேட்டை நாய்களால் முற்றுகையிடப்பட்டு உள்ளது என்பது நடைபெற்றுவரும் நிகழ்வுகள் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. நாம் போராடாவிட்டாலும், வேட்டையாடப்படுவோம் என்ற நிலையிலேயே தமிழீழம் உள்ளது. போராடுவது மட்டுமே எமக்கான தெரிவாக உள்ளது.
எனவே, முடியாது என்ற முடிவோடு எம்மை நாம் நத்தைகளாக ஓட்டுக்குள் புதைத்துக்கொண்டாலும், எம்மை இரையாக்கத் துடிக்கும் கழுகுகளிடமிருந்து நாம் தப்பிவிட முடியாது. முடியும் என்று நம்பிய மனிதனால் வானத்தில் பறக்க முடிந்தது. முடியும் என்ற மனிதனால் நிலவில் கால் பதிக்க முடிந்தது. முடியும் என்ற காந்தியின் நம்பிக்கையே இந்தியாவை விடுவித்தது. முடியும் என்ற மன உறுதி நெல்சன் மாண்டேலாவை தென்னாபிரிக்க அதிபராக்கியது. நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கியது. எம்மால் முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழீழ மக்களை மீட்டெடுக்கும் வல்லமை கொண்டது. அது இந்திய வல்லாதிக்கப் பிடியிலிருந்தும், சிங்களத்தின் இனவாதப் பிடியிலிருந்தும் ஈழத் தமிழர்களை விடுவிக்கும்.
நன்றி்:ஈழநாடு
Comments