மகிந்தவுக்கும், தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்

போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து இலங்கையை காப்பாற்றும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவரும் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நன்றிக்கடன் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைக்க்கு எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் முதல் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த போர்க்குற்றம் வரை சிறிலங்கா அரசு மேற்கொண்ட மிகவும் பாரதூரமான குற்றங்களுக்கு ஐ.நா. சபை எந்த உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய மூத்த அதிகாரிகள் பலர் வெளிப்படையான கண்டனங்களையும் நடவடிக்கைகளுக்கான முஸ்தீபுகளையும் மேற்கொண்டடிருந்தபோதும் அவற்றை அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட கருத்தாக அறிவித்து செல்லாக்காசாக்கும் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை விவகாரத்தில் தனது பொறுப்பையும் தொடர்ச்சியாக தட்டிக்கழித்து வருகின்றமை சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினரும் அறிந்த விடயம்.

பான் கீ மூனினது இந்த காரியங்களின் பின்னணியில், இந்தியாவும் இலங்கையும் கொண்ட பல குடும்ப மற்றும் நட்பு உறவுகளே காரணம். பான் கீ மூனினது மருமகன் சித்தார்த் சட்டர்ஜி, 1987 ல் இலங்கை சென்ற இந்திய படைகளின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவர் ஆவார். அக்காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றிய சித்தார்த் சட்டர்ஜி பின்னர் ஓய்வுபெற்று தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை படைகளின் பிரதானி விஜய் நம்பியாரின் சகோதரரும் இந்திய இராணுவத்தின் முன்னாள் பிரதானியுமான சதீஷ் நம்பியார் வன்னியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை பொதுமக்களை காப்பாற்றுவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இவர் தனது சகோதரரின் ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை இராணுவத்துக்கு ஆலோசனை வழங்கினாரே தவிர பொதுமக்களை காப்பாற்றுவதற்கு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தவேண்டிய தனது பொறுப்பிலிருந்து தவறிவிட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தன.(விஜய் நம்பியார் சமாதான காலத்தின்போது இந்தியாவின் சிறப்பு தூதுவராக இலங்கைக்கு சென்று உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கக்கூடாது என்று இலங்கைக்கு ஆலோசனை வழங்கி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆகவே, இறுதிப்போரில் தனது படைகளை நேரடியாக வன்னிக்கு அனுப்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் ஐ.நா. மட்டத்தில் கூர்மையடையும்போது, அது போரின் பின்னணியின் தான் நடத்திய நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவிடும் அச்சத்தில், நம்பியார் சகோதரர்கள் மற்றும் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி ஆகியோரின் செல்வாக்கை பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை முறியடித்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு கடந்த தடவை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிடுவதற்கு இலங்கை தரப்பில் ஜெயந்த தனபாலவை நிறுத்திய இலங்கையின் அரச அதிபர் மகிந்த, பின்னர், பான் கீ மூனின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயந்த தனபாலவின் நியமனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.

அன்றுமுதல், மகிந்தவுக்கு நன்றிக்கடன் உடையவராக செயற்பட்டுவரும் பான் கீ மூன், இன்றுவரை மகிந்த தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்பதிலும் வேறு தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் அவற்றை அனுமதிப்பதில்லை என்பதிலும் விடாப்பிடியாக நிற்கிறார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments