தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசிய படையுடன் இணைந்து சுதந்திர தமிழீழத்தை நிறுவினால் ஒழிய, ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.இந்தியாவின் தேர்தல் அமைப்புக்கும் அல்லது நடைமுறைக்கும், இலங்கையின் தேர்தல் அமைப்புக்கும் நடைமுறைக்கும் பெரும் இடைவெளி ஏதும் இல்லை. ஒவ்வொருமுறை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திரைப்பட நடிகர்கள், மட்டைப் பந்து வீரர்கள் என, தங்களுடைய முகத்தை மக்களிடம் காட்டி தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்கு சேகரிப்பது என்பது ஒரு நடைமுறையாக மாறிவிட்டது.
-தமிழீழ தேசியத் தலைவர்-
இந்த கொடியநோய் இலங்கையிலும் பரவி இருப்பதின் எடுத்துக்காட்டாக, மட்டைப்பந்து வீரர் ஜெயசூர்யா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு தமது முகங்களை வாக்காளர்களிடம் காட்ட துவங்கியிருக்கிறார்கள். இலங்கை அதிபர் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த அரசியல் கட்சிகள் பல, இப்போது தனித்தனியே, எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறது. இலங்கையின் தேர்தல் முடிவுகள் என்னவாகும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏதும் உண்டாக்கவில்லை.
காரணம் இத்தேர்தலில் வெற்றி தோல்வி தமிழீழ மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு எந்த விதத்திலும் உதவி செய்யப்போவதில்லை! என்கிற அடிப்படையான உண்மை அரசியல் பார்வையாளர்களுக்கும் மற்றும் அங்கே தேர்தல் களத்தில் எப்படியாவது பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக களமாடிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். இப்போது நடைபெறும் தேர்தலும்கூட சிங்கள தேசியத்தை முன்வைத்தே நடைபெற இருக்கிறது. சிங்கள தேசியம் பிளவுப்பட கூடாது. தமிழ் தேசிய மக்கள் சிங்கள தேசிய மக்களின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தான், தமது வாழ்வை நகர்த்த வேண்டும் என, சொல்லாமல் சொல்லும் தேர்தல்தான் இலங்கையிலே நடைபெற்றது. இப்போது நடைபெற இருக்கிறது.
நடைபெற இருக்கும் இத்தேர்தல் சிங்கள தேசியத்தையும், அதன் தேவைகளையும் முன்நிறுத்தியே நடைபெற இருக்கிறது. ஒருவேளை இத்தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று, மகிந்தாவின் கட்சி ஆட்சி அமைக்குமானால் இது தமிழர்களுக்கு பேரிடரை உண்டாக்கக் கூடியதாக அமையுமே தவிர, நிச்சயமாக எந்தவிதத்திலும் இது தமிழர்களின் நல்வாழ்வுக்கான நிலைபாடாக இருக்க வாய்ப்பில்லை. இன்றைய நிலையில் உலக நாடுகளின் போக்கு இலங்கைக்கு எதிரான கட்டமைப்பில் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளை உருவாக்குவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருக்கும் அதே நேரத்தில், சீனா, ரஷியா, ஈரான் போன்ற நாடுகள் இலங்கையின் நெருங்கிய நண்பர்களாக தன்னை காட்டிக் கொள்ள துவங்கியிருக்கின்றன.
இப்படிப்பட்ட அகப்புறத்தன்மை வாய்ந்த ஒரு நெருக்கடியான அரசியல் நகர்வில் தமிழீழ மக்கள் நம்பியிருக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கையாகவும், தங்களது ஒவ்வொரு அசைவையும் அது மக்கள் நலனுக்கான அசைவாகவும், மாற்றி அமைத்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால் அங்கே சூழலை உற்று நோக்கும் போது அது நமக்கு பெரும் அதிர்ச்சியையே தருகிறது.
இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுதும்பர தொகுதியின் அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க ஊடகவியலர்களை சந்திக்கும் போது கீழ்க்கண்ட தகவலை தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதத்திற்கெதிரான சமர் என்று இலங்கை அரசு நடத்தி முடித்த கொடுஞ்சமரில், சமர்தான் நிறைவடைந்ததே தவிர, அது 50 விழுக்காடுதான் முழுமையடைந்திருக்கிறது. இந்த சமருக்கான அடிப்படை காரணங்கள், தமிழர்களுக்கான சம உரிமை, மொழி தொடர்பான பிரச்சனை, கலாச்சாரம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தமிழீழ மக்கள் வாழும் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவை இதுவரை இந்த அரசால் நிறைவேற்றப்பட வில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, ஒரு வியப்புக்குரிய தகவலையும் சொல்லியிருக்கிறார். அதாவது, கடந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6 லட்சம் வாக்காளர்களில் 2 லட்சம் பேர் இந்த நாட்டிலிருந்து வெளியேறியதாகவும், மீதமுள்ள மக்களில் 2 லட்சம்பேர் மகிந்தாவுக்கு எதிராக வாக்களித்ததை அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இது தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தின் மீது கொண்டுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
சூழ்நிலை இப்படியிருக்க, நாம் தொலைவில் இருந்து கொண்டு தமிழீழ மக்களின் வாழ்வை அனுதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் தருணம் இதுவல்ல. ஆனால் இதைத்தான் பல்வேறு அரசியல் அமைப்புகளும், புலம்பெயர்வாழ் மக்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் அரசியல் அமைப்பில் இதுவரை காணாத அளவிற்கு புதிது புதிதாக அரசியல் கட்சிகள் தோன்றி கொண்டிருக்கின்றன. அவைகளின் முழக்கம் எல்லாம் தமிழீழ மக்களை அவர்களின் துயர்களிலிருந்து மீட்டெடுப்பது என்பதான அறிவிப்புகளை உள்ளடக்கியிருக்கிறது.
ஒவ்வொரு கட்சியும் இறையாண்மை கொண்ட தமிழீழ தனியரசு என்ற முழக்கங்களுடன்தான் பிறக்கின்றன. ஒவ்வொருவரும் தமிழீழ மக்களின் ஏகபோக பிரதிநிதிகளாக தம்மை அடையாளம் காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, எவ்வளவு கீழிறங்கி நடக்க வேண்டுமோ, அவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் தேசிய அரசியல் வாதிகளின் அடிப்படை நோக்கமாக அங்கே அவர்கள் தமிழீழ மக்களின் நல்வாழ்வு என்பதைவிட, தாங்கள் எப்படியாகிலும் மக்களவை உறுப்பினர்களாக மாறிவிட வேண்டும் என்கின்ற துடிப்பு அவர்களின் சொல்லிலும், செயலிலும் வடிந்து கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் முடிந்து போனதாக அறிவிக்கப்பட்ட தமிழீழ மக்களின் வாழ்வு, மீட்சி பெறுவதற்கு இவர்கள் உதவி செய்கிறேன் என்று சொல்வது நம்மை உள்ளபடியே உலுக்கி எடுக்கிறது. காரணம், மக்களவை உறுப்பினர்களாக தம்மை உருமாற்றிக் கொள்ள தொடர்ந்து பல்வேறு செயல்களை செய்து கொண்டிருக்கும் இந்த தமிழ் தேசிய அரசியல் பேசும் இவர்களை நம்பிதான் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் வாக்களித்தார்கள். ஆனால் வாக்களித்த மக்களின் வாழ்க்கையிலே இந்த மக்களவை உறுப்பினர்களின் பங்கு என்னதென்று கேட்டால், உள்ளபடியே அது சுழியமாகத்தான் இருக்கும்.
காரணம் ஆயிரக்கணக்கான மக்கள் கொடும் குண்டு வீச்சுகளால் இலங்கையின் சிங்கள பேரினவாத பேயாட்டத்தால் கொலை செய்யப்பட்டபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த அவை உறுப்பினர்கள், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்றுக் கூறிக்கொண்டு பல்வேறு நாடுகளில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் தமது உயிரையே பெரிதாக நினைக்கும் போது, எப்படி தம்மை நம்பியிருக்கும் மக்களை காப்பாற்றுவார்கள் என்கின்ற கேள்வி சாமானிய மக்களின் மனங்களிலும் எழக்கூடியதுதான்.
இப்பொழுது விடுதலைப்புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்டதாக கூறிக்கொண்டிருக்கும் இந்நிலையில், இவர்கள் மீண்டுமாய் இலங்கையிலே அதே தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்களே! இவர்கள் யார் அச்சுறுத்தலால் தமது சொந்த மக்களை விட்டு நிராதரவாக களத்திலே தவிக்க விட்டு, தாம் மட்டும் பாதுகாப்பாக வாழ பல்வேறு நாடுகளில் பதுங்கினார்களே! இவர்கள் எந்த அளவிற்கு இந்த மக்களை நேசித்தார்கள், இந்த மக்களின் நல்வாழ்விலே அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு பங்காற்றினார்கள் என்பதை கடந்த காலத்தில் இவர்களின் வாழ்வே இவர்களை அடையாளப்படுத்துகிறது.
இவர்கள் எத்துணை தூய்மையானவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதையெல்லாம் எடுத்து இயம்புகிறது. இப்பொழுது தமிழ் தேசியம் பேசி, அரசியல் களத்திற்கு வந்து வாக்கு கேட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான வேட்பாளர்கள் புலிகளால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியல் களத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் புலிகள் ஆயுதம் ஏந்தி மக்களோடு நின்று களத்தில் இருந்தபோது மக்களோடு சேர்ந்து மடிந்தபோது, இந்த மக்களவை உறுப்பினர்கள் மாயமாகி எங்கேயோ மறைந்து கொண்டார்கள். இப்போது மீண்டுமாய் வாக்குக் கேட்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என புரியவில்லை.
மேலும், இதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய வேறொரு இலக்கம் உண்டு. அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுக்கள் மூன்று துண்டுகளாக உடைப்பட்டு கிடக்கின்றன. உடைப்பட்ட துண்டுகளில் இரண்டு, தாம் தீவிர தேசியவாதம் பேசியதால் எம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கியது என்ற விவாதத்தை முன்வைத்து தமக்கான உரிமையை பெற்றிட துடியாய் துடிக்கின்றன. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் ஒரு குழுவாகவும், கஜேந்திரன், பத்மினி போன்றோர் மற்றொரு குழுவாகவும் செயல்பட தொடங்கியிருக்கும்போது சொலமன்சிரில் தாம் தனி ஆவார்த்தனம் செய்து கொண்டிருக்கின்றார்.
மேலே கூறப்பட்டவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது கவலையெல்லாம் என்னதென்றால், சாதாரண மக்களவை உறுப்பினர் பதவிக்காகவே பிளவுபட்டு நிற்கும் இவர்கள், ஒன்றுபட்ட தமிழ் தேசியத்தை எவ்வாறு முன்னெடுப்பார்கள் என்பதுதான். இவர்களே பிளவுப்பட்டிருக்கும்போது ஒன்றுப்பட்ட தமிழீழத்தை படைத்தளிக்க இவர்களின் படைப்பாற்றல், செயலாற்றல் பெரும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது.
கடந்த தேர்தலில் விடுதலைப்புலிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலர், இன்று சிங்கள பேரினவாத அமைப்புகளின் அங்கம் வகிப்பதும், தனித்தனியே நின்று தமக்கான ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொள்வதுமான போக்கு, தமிழ் தேசியத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் தாயக தமிழர்களுக்கு மிகவும் சஞ்சலத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசியத்தை அமைப்பதற்கு இலங்கை பாராளுமன்ற அரசியல் சட்ட அமைப்பு நிச்சயமாக இடம் தராது, என்பது மக்களவை உறுப்பினர்களின் பந்தயத்திலிருக்கும் நபர்களுக்கு தெரியாதா என்றால் நிச்சயமாக தெரியும்.
அவர்கள் தனியரசு அமைப்பதற்கான நிலைப்பாட்டைவிட தான் மட்டும் மக்களவை உறுப்பினராகிவிட வேண்டும் என்கின்ற உறுதியோடுதான் இந்த தேர்தல் களத்திலே காட்சி தந்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது திட்டமெல்லாம் என்னதென்று இதுவரை இந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிவிக்கவில்லை. ஒருவேளை தமிழ் தேசியம், தமிழ்தேசிய குடியரசு இவர்களின் கொள்கையாக இருக்குமேயானால் இவர்கள் செய்ய வேண்டியது இலங்கை நாடாளுமன்றத்தை புறக்கணித்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அரசியல் நடத்துவதுதான் சரியானதாகவும், உண்மையான தமிழ் தேசிய அடையாளமாகவும் இருக்கும்.
காரணம், தமிழீழ குடியரசை இலட்சியமாக கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இதைத்தான் செய்தது. நாடாளுமன்ற புறக்கணிப்பை அவர்கள் நடைமுறைப்படுத்தி, தமக்கான தமிழீழ அரசை நிலைநாட்டினார்கள். ஆனால் இப்போது கட்டளையிட புலிகளின் கட்டமைப்பு மௌனமாக இருக்கின்ற காரணத்தால் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதைப்போல ஆளுக்கொரு ஆலோசனையும், குழுவுக்கொரு செயலுமாக தமிழ் தேசியம் அங்கே குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக சிதறிக் கிடக்கிறது.
மக்களை உறுப்பினர்களாக தங்களை தேர்வு செய்யுமாறு தமிழீழ மக்களிடம் வரும் இந்த வேட்பாளர்கள், ஒரே ஒரு செய்தியை மட்டும் எமது மக்களிடம் தெளிவாக்க வேண்டுமென விரும்புகிறோம். அது, தாம் பெறப்போகும் மக்களவை உறுப்பினர் வெற்றியானது, எப்படி எமது தமிழீழ விடுதலையை மீட்டெடுக்கும் என்பதுதான். இதை அவர்கள் தெளிவுப்படுத்தாதவரை இந்ததேர்தல் மீண்டும் ஒரு திருவிழாவாகவே நிறைவுபெறும். அதை மாற்றி அமைக்கவேண்டியது மக்களின் கடமை. காரணம் எந்நேரத்திலும் மக்கள் தோற்றதில்லை. தமிழீழ விடுதலை என்பது இத்தேர்தலால் எப்படி விடைகாணப் போகிறது என்பதை இனிதான் நாம் காணவேண்டும்.
தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசிய படையுடன் இணைந்து சுதந்திர தமிழீழத்தை நிறுவினால் ஒழிய, ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.
Comments