கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது. மலையக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்குப் பல அச்சுறுத்தல்களையும் அவர்களிடையே பிளவுகளையும் மேற்கொண்டு பேரினவாத கூட்டுக் குழுக்களை அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் பெரும்பான்மையின மக்களின் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை மலையகத்தில் அதிகரிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள், வேறு பரிமாணத்தில் வடகிழக்கில் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
வடக்கு, கிழக்கில் 31 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 1,867 பேர் மோதுகின்றனர். யாழ். மாவட்டத்தில் 12 குழுக்களும் மட்டக்களப்பில் 26 குழுக்களும் திருமலையில் 14 குழுக்களும் அம்பாறையில் 49 குழுக்களும், சுயேச்சையாக கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. வடக்கு, கிழக்கில் 1,000 பேரளவில் போட்டியிடுவதால் மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ்.
போர் முடிவடைந்ததால் நாட்டின் அபிவிருத்திக்கும் மீள்கட்டுமானப் பணிகளுக்கும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு நிருபமா ராவ் வருகை தந்ததாகக் கூறப்பட்டது.
ஆனாலும், இப்பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், பிரித்தெடுக்கப்பட்ட, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்து இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பினை விடுத்ததாக வந்த செய்தியே சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமில்லையென நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியொன்று இச்சந்திப்பினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 1987இல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் விதந்துரைக்கும் மாகாண சபைத் தீர்வினையும் 13ஆவது திருத்தச் சட்டம் கூறும் அதிகாரப் பரவலாக்கத்தினையும் (அதிகாரப் பகிர்வல்ல) தவிர, வேறெந்த தீர்வுத் திட்டங்களையும் இலங்கை அரசின் மீது தம்மால் திணிக்கவோ அல்லது வலியுறுத்தவோ முடியாதென்கிற விவகாரத்தை மறைமுகமாக கூற விழைகிறது இந்திய அரசு.
தனது இந்தியப் பயணத்தின்போது, காணி மற்றும் காவல்துறை அமைக்கும் அதிகாரங்களைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் ஒரு வேண்டுகோளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் முன்வைப்பாரெனக் கருதலாம். அத்தோடு, மாகாண சபை ஆட்சி முறைமையை வலுப்படுத்தும் அல்லது சீர் செய்யும் நகர்வுகளையே இந்தியா முன்னெடுக்குமென எதிர்பார்க்கலாம். ஆனாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக நடைமுறையிலுள்ள அரைகுறையான மாகாண சபை அதிகாரங்களை அழித்து விடும் நிலையும் ஏற்படலாம்.
அப்போது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை தாம் ஆதரிப்பதாகக் கூறிவரும் இந்தியாவும் மேற்குலகும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மேற்கொள்ளும் முடிவுகளை நிராகரிக்க முடியாததொரு கையறு நிலைக்குத் தள்ளப்படும். அதேவேளை, பிராந்திய அரசியலில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளை எதிர்கொள்ளும் இந்திய வல்லாதிக்கமானது, மாகாண சபைத் தீர்வினை அமுல்படுத்துமாறு வலியுறுத்துவதோடு தனது வகிபாகத்தை மட்டுப்படுத்திவிடுமென்பது யதார்த்தமாகும். ஆனாலும் இங்கு புரிதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழர் தாயக இறைமையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். அனைத்து இலங்கை மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வு என்பதன் உட்பொருள் பெரும்பான்மையின மக்களின் முழு இலங்கைக்குமான இறைமையை இங்கு வாழும் சிறுபான்மையான பூர்வீக தேசிய இனமானது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், 2002 டிசம்பரில் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட "ஒஸ்லோ பிரகடனம்' என்று தவறாக அழைக்கப்படும் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படலாமெனக் கூறுகிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமைய வேண்டும் என்பதுதான் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் இருதரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின் சாராம்சமாகும்.
ஆனாலும் மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் என்கிற பதத்தை பிரயோகிக்கவே அன்று சிங்களதேசம் விரும்பியது.
ஆகவே, ஒஸ்லோ உடன்பாட்டினை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதன் அடிப்படையிலா அல்லது அன்ரன் பாலசிங்கம் கூறியது போல் ஆராய்ந்து பார்ப்பதன் அடிப்படையிலா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஒஸ்லோ விவகாரத்தை கையிலெடுத்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் அமைச்சர் டலஸ் அழகப்
பெரும ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒஸ்லோ நகர்வினை இலங்கை ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
ஆனால், தனியரசுக் கோட்பாட்டை மட்டுமல்ல, ஒஸ்லோ கதைகளையும் சிங்களதேசம் விரும்பா தென்பதை கூட்டமைப்பின் தலைவர் இப்போது புரிந்து கொள்வார். அதேபோல் ஒருநாடு இருதேசம், கூட்டாட்சி போன்ற தமிழர் இறைமையை அடித்தளமாகக் கொண்ட கோட்பாடுகளையும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது. தமிழர் தரப்பின் கோட்பாட்டு ரீதியான அகநிலை முரண்பாடுகளுக்கும், தென்னாசியாவில் தமிழர் தாயக புவிவியல் அமைவிடத்தால் எழும் அனைத்துலக உறவுச் சிக்கல்களுக்கும் இடைவெளி மிகப் பெரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்படக்கூடிய குறைந்தபட்ச தீர்வுக் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறைமை என்பதனை சிங்களதேசம் பரீசிலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை நிலையாகும்.
இவை தவிர அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற சொல்லாடல்கள் தற்போது தீர்வு யோசனைகளில் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஜாலங்களாகக் காணப்படுகிறது. இதில் அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாட்டை நிராகரிக்காத கருத்தியலைக் கொண்ட நடைமுறை சார்ந்த அரசியல் படி நிலையாகும். ஆனால், சிங்களதேசம் முன்வைக்கும் அதிகாரப் பரவலாக்கலானது சிங்கள தேசத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு ஏனைய தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் வெறும் நிர்வாகப் பரவலாக்க நடைமுறையை சார்ந்ததாகும்.
இறைமையற்ற சுயநிர்ணய உரிமை, அதன் உள்ளார்ந்த இறுக்கமான பண்புகளை இழந்து வெறும் சொற் பிரயோகமாகவே கருதப்படும்.
ஆகவே, தாயகம், தேசியம் என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரிக்கும் முரண்நிலைச் சக்திகள் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது அதிசயமான விடயமல்ல. ஒஸ்லோ உடன்படிக்கையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட இறைமையுள்ள சமஷ்டி குறித்து தொடர்ந்து பேசுவதற்கும் சிங்களதேசம் மறுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தடைநீக்கியாக முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முறைமையினை அவ்வடிவமானது தமிழரின் இறைமையை உள்ளடக்கியதாக இருந்ததால் அதனையும் சிங்களதேசம் நிராகரித்தது.
ஆகவே, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதி முறைமையானது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவோ அல்லது தேசிய இனமொன்றின் பிரிக்க முடியாத பிறப்புரிமை சார்ந்த இறைமையுள்ள தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டென்பதை ஏற்றுக்கொள்ளவோ மாட்டாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த உத்தேசித்திருப்பதாக ஜனாதிபதி கூறி வருகிறார். அதற்கு இந்தியாவின் ஆதரவு உண்டென்று நம்பலாம். 1980களில் பல் போராட்ட இயக்கங்களைக் கையாண்டது போலவே இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை கையாள இந்தியா எண்ணுகிறது.
ஏற்கெனவே கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோட்பாட்டு ரீதியிலான உடைவுகள், பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு சாதகமான தளத்தினை உருவாக்கப் போகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்பதன் ஊடாக மாகாண சபை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றையே தீர்விற்கான தமது விருப்பத் தெரிவாக இந்தியா கொண்டுள்ளதென்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொள்வார்களா? இந்தியாவை விட்டால் வேறு கதியில்லையென்றால் அவர்கள் பரிந்துரைக்கும் அதிகாரமற்ற மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்வதைத் தவிர கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை. ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயந்தான் இனப்பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் தீர்வு.அதை மெருகூட்டி அழகுபடுத்தி தமிழர் மீது திணிக்கும் நகர்வினையே இந்தியா முன்னெடுக்கிறது. ஆகவே, கூட்டமைப்பு முன்வைக்கும் குறைந்தபட்ச சமஷ்டி கோரிக்கைகளை இந்திய இலங்கை தரப்புகள் ஏற்றுக்கொள்ள முன்வராது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதயச்சந்திரன்
நன்றி:வீரகேசரி
Comments