முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இலங்கையின் இரகசிய தடுப்பு முகாம்கள்: வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் வேண்டுதல்

NESOHRமுள்ளிவாய்க்கால் நிகழ்வைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரு வருடகாலமாகப் போகின்றது. ஒட்டு மொத்தமாக எவ்வளவு முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி இலங்கை அரசின் அறிக்கைகளைத் தவிர வேறு எவ்விதமான தகவல்களும் வெளிவரவில்லை.

தடுத்து வைக்கப்பட்டிருப்போரை சந்திப்பதற்கு ஐசிஆர்சி அனுமதிக்கப்பட்ட காலத்தில் ஐசிஆர்சி வெளியிட்ட அறிக்கையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருபோரில் 6700 பேரை தாம் நேர்கண்டதாக குறிப்பட்டிருந்தார்கள். http://www.icrc.org/Web/Eng/siteeng0.nsf/html/sri-lanka-update-090609. ஆகையால் இவர்கள் பெயர்கள் ஐசிஆர்சியிடம் உள்ளது என்று அனுமானிக்கலாம்.

இம்முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குடும்பத் தொடர்பை பேணுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மனித உரிமைக் கண்காணிப்பகம் அண்மையில் அவ்வகையாகத் தடுத்து வைக்கப்பட்டிலுப்போரைப் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதேநேரத்தில், 2000க்கும் மேற்பட்டோர் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறி இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இரகசிய தடை முகாம்களில் எதுவித வெளியுலக தொடர்புமற்று உள்ளனர். தற்சமயம் இவர்கள் ஐசிஆர்சியின் காணாமல் போனோர் பட்டியலிலேயே உள்ளனர். இவர்கள் காணாமல் போனோராக கணிக்கப்படுவதற்கு அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறியதையும், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டதையும் உறுதிப்படுத்தாமல் இருப்பதே காரணமாகும்.

சாட்சிகள் மூலம் இதை உறுதிப்படுத்தாவிட்டால், அவர்கள் முள்ளிவாய்க்கால் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள் என்று தட்டிக் கழிப்பது சுலபமாகிவிடும். அவர்களின் நிலைமை ஆபத்தானது. இதிலும் முக்கியமாக பெண்களின் நிலைமையை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது.

இவர்கள் நிலை பற்றி மிக மோசமான பல செய்திகள் கசிந்து வெளி வந்துகொண்டிருக்கின்றது. குடும்பத் தொடர்பற்று இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகளைப் பற்றிய தரவுகளை சேகரித்து அதுபற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடுவது அவர்களின் பாதுகாப்பை ஓரளவேனும் உறுதிப்படுத்தும் என்பதால் இத்தரவுகளை சேகரிக்கும் முயற்சியை வடகிழக்கு மனித உரிமைச்செயலகம் ஆரம்பித்துள்ளது.

உங்கள் உறவுகள், அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இவ்வகையாகக் காணாமற் போயிருந்தால் அவர்கள் பற்றிய கீழ்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை கீழ்க்குறிப்பிடப்பட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்தில் உள்ளவர்கள் நேரடியாக மின்னஞ்சல் செய்ய அஞ்சின், அவ்விபரங்களை வெளிநாடுகளிலுள்ள உங்கள் உறவுகள் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம். அத்துடன் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் உங்களுக்குத் தெரிந்த, தாயகத்தின்வாழும் மின்னஞ்சல் வசதியற்ற உறவுகளிடமிருந்தும் விபரங்களைப் பெற்று எமக்கு அனுப்பிவைக்கலாம். விபரம் தருபவர்களின் பெயர், விபரங்கள் வெளியிடப்படமாட்டா.

வேண்டப்படும் விபரங்கள்:

காணாமல் போனவரின் முழுப் பெயர்:

பிறந்த திகதி:

இலங்கை இராணுவம் கைது செய்ததை அல்லது இராணுவத்திடம் சரணடைந்ததை யாரும் கண்டார்களா?

மின்னஞ்சல் மூலம் விபரம் தருபவர் பெயர்:
காணாமல் போனவருக்கு உறவுமுறை:

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: nesohrsrilanka@gmail.com

வடகிழக்கு மனித உரிமைச் செயலகம் பற்றி www.nesohr.org

வடகிழக்கு மனித உரிமைச் செயலகம் 2004ம் ஆண்டு சமாதான நடவடிக்கையின் ஒரு அங்கமாக இலங்கை இராணுவத்தால் 2008 ல் கொல்லப்பட்ட அருட்திரு கருணரட்னம் அடிகளாரின் தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனவரி 2009 வரை வன்னியில் இயங்கி பின் அங்கு செயலிழந்தது. மெனிக்பாம் முகாம்களிலிருந்தும் இதற்கு முன்பேயும் வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

Comments