தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளம்பெண்களை சிறீலங்கா இராணுவம் அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றது. குறிப்பாக பெண் இராணுவத்தினர் அதிக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என பொது அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்புக்காவலில் உள்ள பெருமளவான பெண்கள் அண்மையில் செட்டிக்குளம் முகாம் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வேறு வலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்கள் இரு தொகுதி உடைகளையே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை பூசா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்போவதாக படையினர் மிரட்டி வருகின்றனர்.

இதனிடையே பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் மிகவும் குறுகிய அறைகளுக்குள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக நேரில் கண்டவர்கள் தமிழநெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அமைப்பில் இருந்தவர்களையே திருமணம் செய்துள்ளதால் பெண்களை தனிமைப்படுத்தி துன்புறுதல்களை மேற்கொண்டுவரும் சிறீலங்கா படையினர் நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் தகவல்களை பெற முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Comments