திருமலையில் தமிழ்க் காங்கிரஸ் எதனைச் சாதிக்க முற்படுகிறது?

இன்னமும் கால் பங்கு நிலம், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மட்டுமே திருமலை வாழ் தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ளது. இரா.சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்கிற போட்டி அரசியலால் இருப்பதையும் கெடுத்து விடும் நிலை ஏற்படப் போகிறது.

அவ்வாறு அவர் வீழ்த்தப்பட்டாலும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அவருக்குண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் நிகழ்த்தும் அதிகார மோதலால் திருமலையின் தமிழ்த் தேசிய அடையாளமும் இனப் பிரதிநிதித்துவமும் நிச்சயம் இல்லாதொழிக்கப்படும். ஏற்கனவே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் திருமலை மண் கூறு போடப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது.

மடத்தடிச் சந்திக்கும் பெரிய கடைக்கும் இடைப்பட்ட நகரப் பகுதியில்தான் தமிழ் மக்கள் இன்று செறிந்து வாழ்கின்றார்கள். வேற்றுக் கிரகவாசிகள் போன்றதொரு வாழ்வினையே அம் மக்கள் அனுபவிக்கின்றார்கள். இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், மூதூர் கிழக்கு பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டது.அநுராதபுர மாவட்டத்திற்கு கடலை இணைக்கும் நிலத் தொடர்பு இல்லாத படியால் திருமலையின் ஒரு பகுதியை காவு கொண்டு அகண்ட அநுராதபுர இராஜதானியை அமைக்கத் தீட்டப்படும் சதியை பலரும் இன்னமும் உணர்ந்து கொள்ளவில்லை. இனி மணலாறும் ஒரு மாவட்டமாகும். அதற்கான திட்டங்கள் மிக நேர்த்தியான முறையில் வகுக்கப்படுகின்றன.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 14,090 வாக்குகளும் அ.இ. தமிழ் காங்கிரஸிற்கு 3,748 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஒரு நபர் கூட அன்று தெரிவு செய்யப்படவில்லை. 2001ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தும் ஒருவரே நாடாளுமன்றத்திற்குச் சென்றார். 68,955 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களை 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பெற்றுக் கொண்டது.

அதேவேளை இம் மாவட்டத்தில் சிதறிப் போயுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை வருகிற தேர்தலில் பயன்படுத்தப்படுமா என்கிற கேள்வியும் எழுகிறது. வடக்கு கிழக்கிலுள்ள இடம் பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமை குறித்து நீதிமன்றில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார் பாக்கியசோதி சரவணமுத்து. இந்நிலையில் இரா.சம்பந்தன் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கிற வகையில் காய்களை நகர்த்தும் எதிரணியினரும் தீவிர தமிழ் தேசியவாதிகளும் தாம் தோற்கடிக்கப்படக் கூடாது என்கிற உணர்வோடு நிற்கும் திருமலை வாழ் தமிழ் மக்களின் மன உறுதியை கருத்தில் கொள்ளவில்லை.

அதேவேளை யுத்தத்திலும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறாயினும் பெற்று விட வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இவை தவிர வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் பலமிக்க தமிழ்த் தேசிய சக்திகள் உருவாகக் கூடாதென்கிற திட்டத்தில் பல சுயேச்சைக் குழுக்களும் அரச ஆதரவு தமிழ்க் குழுக்களை தனித்தனியாக களமிறக்கியுள்ளது. காசு கொடுத்து, சுயேச்சைக் குழுக்களை அரசு போட்டியிட வைக்கிறதென யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ். நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினர் பல ஏக்கர் நிலப் பரப்பில் அங்கு ஒரு கடற்படைத் தளமொன்றினை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். யாழ்., திருமலையில் கூட்டமைப்பின் தலைமைகள் அகற்றப்பட வேண்டுமென தமது புதிய தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஊடாக வலியுறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் குறித்து கவலை கொள்ளவில்லை போல் தெரிகிறது.

புவிசார் அரசியலின் அடிப்படைகள் பற்றியும் அதன் அம்சங்கள், வெளிப்பாடுகள், நடைமுறைகள், அது தொடர்பான விளக்கங்களை ஆழமாகப் புரிந்துள்ள கஜேந்திரகுமார் பேரினவாதச் சக்திகள் எதனைச் சாதிக்க முற்படுகிறார்கள் என்பது பற்றி உணர்ந்து கொள்ளவில்லையா? ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல், இற்றைவரை இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே தமிழ்த் தேசிய சக்திகளைத் தம்வசம் ஈர்ப்பது தொடர்பான பனிப்போர் ஒன்று நிகழ்ந்து வருவதைப் பார்க்கலாம். பிராந்திய கேந்திர முக்கியத்துவத்தில் இந்தியாவின் காத்திரமான பங்கினை விடுதலைப் புலிகளும் மறுக்கவில்லை. புலிசார் அரசியலோடு பிராந்திய அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதை புறந்தள்ளி விட முடியாது.

நோர்வே ஊடாக மேற்குலகம் தலையிடும் வரை ஈழ விடுதலைப் போராட்டமானது இந்தியா, இலங்கையைச் சுற்றியே நகர்ந்து வந்தது. அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கான பின் தளமாக இந்தியாவின் அனுசரணையோடு அங்கு நிலை கொண்ட விடுதலைப் புலிகள் 87ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின் பிரேமதாசாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவோடு இந்தியப் படைகளுடன் போரிட்டனர். அன்றிலிருந்து ரணில், பிரபா ஒப்பந்தம் வரையான காலப் பகுதியில் தான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்புகள் விரிந்து படை பலமும் அதிகரித்தது. பிராந்திய அரசியல் ஆளுமைக்குள் இருந்து வெளியேறி புவிசார் அரசியலில் தேசிய விடுதலைப் போராட்டம் காலடி வைத்த பொழுது இந்திய சமுத்திரப் பிராந்திய அரசியல், ஆசிய பிராந்திய வல்லரசுகளின் ஆடுகளமாக மாறத் தொடங்கியது.

தன்னிடம் மட்டுமே ஆயுத உதவிகளைப் பெற வேண்டுமென இந்தியா வற்புறுத்தினாலும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கிய படைக்கல பொருளாதார பங்களிப்பினை ஓர் எல்லைவரை அனுமதித்திருந்தது. மேற்குலகின் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட உலகளாவிய சேதாரங்கள், ஆசிய அரசியலில் சீனா, இந்தியாவின் வகிபாகத்தை நிலை நிறுத்தும் இவ் வேளையில் ஆயுதப் போராட்டமும் அழிக்கப்பட்டுள்ளது. புதிய உலகக் கோட்பாட்டுச் சமன்பாட்டில் ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொரு நிலை நோக்கி நகர்வதால் உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளும் நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது.

மறுபுறமாக உள் நுழைந்த சீனாவின் கால்கள், வீதிப் புனரமைப்பின் ஊடாக வடக்கு வரை விரிந்து செல்வதால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு வியூகம் பலவீனமடையும் நிலை நோக்கி நகர்கிறது.இங்குதான் இந்திய இலங்கை, இந்திய சீன, பிராந்திய அரசியல் பனிப் போர்கள் எத்தகைய புதிய வடிவங்களைப் பிரசவிக்கப் போகின்றதென்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.இந்திய இலங்கை மத்தியில் நிலவும் முரண்பாடுகளைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிராந்திய அரசியல் நிலைப்பாடும் சீனாவின் ஆதிக்க நகர்வுகளுமே பெரும் பங்கு வகிக்கிறதெனலாம். கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் யாவும் அரசிற்கு சார்பான நிலையில் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதன் ஊடாக பனிப்போரில் ஈடுபடும் மறுதரப்பான இந்தியாவின் வகி பாகத்தை இல்லாதொழிக்கலாமென்று பேரினவாதம் கணிப்பிடுகிறது. பிளவுபடுத்துதல், சிதைத்தல் என்பதற்கப்பால் தமிழ்த் தேசிய சக்திகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டுமென்கிற நீண்ட கால நிகழ்ச்சி நிரலொன்றும் சிங்களத்திடம் உண்டு.தமிழ்த் தேசியச் சக்திகளிடையே எழும் தீவிர மிதவாத கொள்கைப் பிரகடன மோதல்கள், பேரினவாதத்தின் இலக்கினை சாத்தியமாக்கி விடும் என்கிற யதார்த்தமும் உணரப்படல் வேண்டும். இந்தியாவின் ஊடாகவே ஆசிய அரசியலை நகர்த்த மேற்குலகம் முயற்சிக்கிறது என்ற உண்மையை புலம் பெயர் தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே தலைமையை அழித்தல் என்கிற கோட்பாடு இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலத்தையே அழித்து விடும். குடியேற்றங்களால் குதறப்பட்டு சேடமிழக்கும் திருமலை மண்ணும் முற்றாக அழிக்கப்பட்டு விடும். மேற்குலகம் மற்றும் இந்தியா போன்றவை, சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் இவ்வேளையில் பலமான தமிழ் தேசியத் தலைமையொன்று தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும். இப்போது ஏற்படுத்தப்படும் சிதைவுகள் இறுதியில் மீள முடியாத நிலையை நோக்கியே தமிழ் மக்களை இட்டுச் செல்லும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய ஆதரவும் அனுசரணையும் அரச சார்பு தமிழ்க் கட்சிகளை தாயக மண்ணில் காலூன்ற விடாமல் தடுத்தது.

ஆனால் அந்த தந்திரோபாயத்தை புரிந்து கொள்ளாமல் தீவிர தேசிய வாதம் பேசி தாயக வாசல்களை பேரினவாதத்திற்குத் துணை போகும் சக்திகளுக்குத் திறந்து விடப் போகிறோமாவென்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். சம்பந்தனின் இந்திய ஆதரவு நிலைப்பாடுதான் இம் முரண்பாடுகளுக்கு காரணியென்றால் இந்தியாவா அல்லது பேரினவாதமாவென்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். இவை தவிர கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்னி, மட்டக்களப்பு, அம்பாறையில் போட்டி இடவில்லை.

அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென்கிற நிலைப்பாட்டை மேற்கொள்வார்களா? அம் மக்களுக்கு இம் முன்னணி சொல்லும் செய்தி என்ன? அதேவேளை த.தே.வி.மு. வின் தேசியம், இறைமை என்பன யாழ். குடாவிலும், திருமலையிலும் முடக்கப்பட்டு விட்டதா என்கிற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. ஆகவே தேசியத்திற்கு அப்பால் இதனை ஒரு தலைமைத்துவப் போட்டியாகவே கருத இடமுண்டு. இரா.சம்பந்தனை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டால் தமிழ்த் தேசியத்தை சிதைத்து விட்டதாக பேரினவாதம் மகிழ்ச்சியடையும். மறுதலையாக சம்பந்தனின் தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டால் தேசியம் காப்பாற்றப்பட்டு விட்டதாக கஜேந்திரகுமார் மகிழ்ச்சி கொள்வார். இதைத்தான் நகைப்பிற்கிடமான முரண்பாடுகள் என்று சொல்வார்களோ புரியவில்லை.

இதயச்சந்திரன்

Comments