அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள் குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம்

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 1994ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்னரும் சிதறிப்போனதை அவதானித்த மாமனிதர் சிவராம் அவர்களது ஆதங்கமும், சிந்தனாவோட்டமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதியப்படாத கட்சியை கூட்டுருவாக்க வழி கோலியது. மாமனிதரது இந்த முயற்சிக்கு தற்பொழுது சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் தென் தமிழீழ ஊடகர்கள் சிலரின் பங்களிப்பும் இருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றிய புத்திஜீவிகளுக்கே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழத்தின் அதியுயர் விருதாகிய “மாமனிதர்” விருதினை வழங்கி கெளரவித்து வந்திருக்கின்றார். அந்த வகையில் மாமனிதர் சிவராம் அவர்கள் தமிழீழத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க மட்டுமன்றி அரசியல், படைத்துறை, ஊடகத்துறை என அவர் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய பணியை விடுதலைப் புலிகளின் மதிப்பளிப்பு உணர்த்தி நிற்கின்றது. தமிழீழத்திற்கு வெளியே சிங்கள தேசத்தின் களத்தில் எமது அரசியல் தளத்தை வைத்திருக்கவும், பன்னாட்டு சமூகத்திற்கு தமிழ் மக்களின் வேணவாவை எடுத்துரைக்கவும் விடுதலைப் புலிகளின் ஆசியுடன் மாமனிதர் சிவராம் வகுத்த வியூகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு மிதவாத – ஆயுதப் பிரிவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது நான்கு பிரிவுகளாக உடைந்து நிற்கின்றது.

இவற்றில் மகிந்த ஆதரவுக் போக்கை எடுத்துள்ள சிவநாதன் கிசோர;, கனகரத்தினம், செல்வி தங்கேஸ்வரி போன்றவர்களையும், இடதுசாரி விடுதலை முன்னணி என்ற புதிய பெயர் பெற்றுள்ள கலாநிதி விக்கிரமபாகு தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்துள்ள ரெலோ அமைப்பின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்ற தரப்புக்களைவிட மற்றைய இரண்டு தரப்புக்கள் இடையே நேரடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை ஆராய்வதைவிட, இதன் பின்னணி என்ன என ஆராய்வது தமிழ் மக்களைக் குழப்பும் விடயத்திற்கு சிலவேளை விடை கொடுக்கலாம்.

ஊடக ஆய்வுகளும், மன ஊடறுப்புக்களும்

ஒரு முக்கிய காலகட்டத்தில், அதுவும் தமிழ் மக்கள் தமது படைத்துறைப் பலத்தை முற்றாக இழந்து, அரசியல் தலைமையைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பகரமான நிலை மிகவும் கவலைக்குரியதே. அதுவும் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு, வழி நடத்தப்பட்ட ஒரு அமைப்பின் அரசியல் தளம் உடைந்து நிற்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இது புலம்பெயர்ந்த மக்களை மிகவும் மன ஆதங்கத்திற்கு உள்ளாக்கி இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்திற்கு மாமனிதருடன் இணைந்து பணியாற்றிய சில ஊடகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இதன் வெளிப்பாடே தமிழ் மக்களின் தலைமையினாலும், தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை பெயர் சொல்லி விமர்சிக்கும் அளவிற்கு அவர்களது ஆய்வுப் பத்திகள் விரிந்து நிற்கின்றன. இவ்வாறான ஆய்வுகள் தமிழ் மக்களின் மனங்களை ஊடறுத்துக் கூறுபோடும் நிலைக்குக் கொண்டு செல்லப்போகின்றது அல்லது கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்ற விபரீதத்தை இந்த ஆய்வுப் பத்திகள் மூலம் உணர முடிகின்றது.

அண்மைய ஆய்வுகளும், அதன் உள்ளடக்கங்களும்

தமிழ்த் தேசிய விடுதலைக்காக உழைக்கும் புலம்பெயர்ந்துள்ள ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினால் ஏற்படப்போகும் சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது.

2. தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்.

3. தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது.

1. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படப்போகின்றது

இது உண்மைதான். ஆனால் இது பற்றி முன்வைக்கப்படும் ஆய்வுப் பத்திகளில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி மறு தரப்பு நியாயங்களை மறுதலிப்பதும், மறுதலிக்க வைப்பதும், அல்லது ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து உரிய தரப்பை, அதன் தலைமையைக் கண்டிக்க மறுப்பதும் இந்த ஆய்வுகளின் நேர்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்து, இந்தியாவின் வகிபாகத்தை இல்லாதொழிக்க சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் முயற்சிக்கு “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” துணை போவதாகக் குற்றம் சுமத்தும் ஆய்வாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, இந்தியாவின் கைப்பொம்மைகளாக மாறுவது பற்றி எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

நேரடி எதிரியைவிட கூட இருந்து குழி பறிப்பதே மிகப்பெரும் துரோகமாகும். முள்ளிவாய்க்கால் வரை மட்டுமன்றி அதன் பின்னரும் இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு இழைத்துவரும் துரோகத்தனங்கள் பற்றி இந்த ஆய்வுகள் அலசவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனப்போராடிய தமிழ் மக்களின் தலைமையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பிய இந்தியா, அதே கொள்கையுடன் தற்பொழுதும் இருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஆதரிக்க முற்படுகின்றது என்பது பற்றி இந்த பத்தி ஆய்வுகள் கேள்வி எழுப்ப மறுக்கின்றன.

இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து செல்வதால், சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புவதாக வாதம் முன்வைத்தால், சீன ஆதிக்கம் இப்பொழுது தீடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதையும், சீன ஆதிக்கம் மட்டுமன்றி அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட விடுதலைப் புலிகளை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை என்ற சதாராண கேள்வி எழுவதை தடுக்க முடியாதே?

தமிழர்கள் பாரிய இனவழிப்பை எதிர்நோக்கியிருந்தபோது, விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்த இந்தியத் தலைமைகள் (ஒரு சில சந்திப்புக்கள் பலமுனைப் பிரயத்தனத்தின் பின்னர் நடைபெற்றது), இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதை யாரும் இதுவரை விளக்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிலாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம், ஏன் அதனைச் செய்யவில்லை? வடக்கு கிழக்கு இணைப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா தமிழர் தாயகத்திற்கு எதனைச் செய்யப்போகின்றது.

இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (இரா.சம்பந்தன் மாவை சேனாதிராஜாஇ சுரேஸ் பிரேமச்சந்திரன்) இணங்கியிருந்தால் அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தம்மை தெரிவு செய்த தமிழ் மக்களிற்கும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கும் அது பற்றி ஏன் தெளிவுபடுத்தவில்லை என்பது பற்றி எந்தவொரு ஆய்வுப் பத்தியும் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

முள்ளிவாய்க்கால் இரத்தநெடி மாற முன்னர் இந்தியாவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள சில சட்டவாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் பிரதியை கஜேந்திரகுமார் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு.சம்பந்தன் அவர்கள் வழங்காததன் காரணம் என்ன எனவும் அதன் தலைப்பு தமிழர்களின் வேணவாவையும் உள்ளட சரத்துக்களோ அதனை மறுதலிக்கும் மாற்றுப்போக்கையும் கொண்டுள்ள மர்மம் பற்றி நாம் ஏன் கேள்வி எழுப்ப மறந்தோம்.

தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் அணி அதனை எப்படிப் பெறப்போகின்றது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் மூத்த ஊடகவியலாளர்கள் அதே கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக்கூறும் மறு தரரப்பிடமும் அதே கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோதுகூட அங்குள்ள தமிழ் மக்களை உள்ளடக்கிய முக்கிய மிகப்பெரும் அமைப்புக்களைச் சந்திக்காது தனக்கு நெருங்கியவர்களுடன் நடத்திவிட்டுச் சென்ற சந்திப்புக்கள் அவர் மீது ஏற்படுத்திய சந்தேகத்திற்கு இப்பொழுது விடைபகிர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவை முற்றாக நிராகரிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் அதற்காக முற்றாக அடிபணிந்து நின்றுவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தமிழ் மக்களின் படைத்துறைப் பலம் இழக்கப்பட்டாலும் இந்தியாவிற்கு அடிபணிந்து செல்லும் எந்தவொரு நிர்க்கதி நிலையும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை. அப்படி இந்தியா ஈழத்தமிழ் மக்களிற்கு உதவ முன்வந்தால் அது மகிழ்ச்சியே. ஆனால் அதனை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறீலங்கா மீது தடைகளை இட்டு போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்திவரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியா இது பற்றிக்கூட வாய் திறக்கவில்லையே

சிங்களத்தைக் கட்டப்படுத்த தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தியாவின் கைங்கரியத்திற்கு விடுதலைப் புலிகள் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அந்த நிலை மீண்டும் தோன்ற நாம் அனுமதிக்கலாமா? அதனால் எமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்த இந்தியா மறைமுகமாகச் செயற்பட்டது என சிங்கள அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதும் அதற்கு இந்தியத் தரப்பு வெளியிட்ட மறுப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் அனைவரும் செய்தியாகப் படித்திருக்கின்றோம். இந்தியாவின் மறைமுக நடவடிக்கையில் முக்கியமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரத்து களமிறங்கியதைக் குறிப்பிடலாம். அப்பயென்றால் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி த.தே.கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இயங்கியது என்பதை நாம் ஏன் உணரவில்லை.

த.தே.கூட்டமைப்பின் தலைமையிலுள்ள மூவரது ஏதேச்சதிகாரப்போக்கை மாற்றியமைக்கும் மறைமுக பன்முக முயற்சிகள் தோல்வி கண்டதே காங்கிரசின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது எனக்கூறப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றியதும் கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பகத்தன்மையைப் பாரிய கேள்விக்கு இட்டுச்சென்றது. காங்கிரசின் வெளியேற்றத்திற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கண்டனம் வெளியிடும் நாம் கூட்டமைப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக்குரல் கொடுக்கவோ அல்லது இணைந்து இணைத்துச் செயற்படுங்கள் என சம்பந்தன் ஐயாவுக்கு அறிவுரை சொல்லவோ முற்படவில்லை.

யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் மட்டும் போட்டியிடுவதால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தாயக - தேசிய எல்லை இந்த இரண்டு மாவட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? எனக் கேள்வி எழுப்பும் நாம் மறு புறத்தில் அம்பாறையில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தலைமையிலான (வடக்கு கிழக்கு தேர்தல் பொறுப்பு) இடதுசாரி விடுதலை முன்னணி மீதும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் உடைக்கப்படுகின்றது என விமர்சனக் கண்டனம் முன்வைப்பதன் ஊடாக எதனைச் சாதிக்க முற்படுகின்றோம்.

திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தன் தோற்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தேசிய பட்டியல் இடம் கிடைத்தால் (2004இல் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன) அதனை சம்பந்தனே பற்றிக்கொள்வார் என்பது உண்மையே. ஆனால் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும்போதே அடிக்கடி வன்னிக்கு அழைத்து ஊசி அடிக்க வேண்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவர்கள் மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தன்னிச்சைப்படி அல்லது இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க ஆடுவதைத் தடுக்க இவ்வாறானதொரு செயற்பாட்டைத்தவிர வேறு வழியில்லை என்பதையும் வாதமாக முன் வைக்கலாம் அல்லவா?

வன்னி மட்டக்களப்பு அம்பாறை தொகுதிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிடாது தவிர்த்ததற்கு முக்கிய காரணி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. அதனையே இப்பொழுது பிரதேச வாதமாகக் கிளப்பி நாம் ஆய்வுப் பத்திகளை எழுதுவதால் புண்பட்டுள்ள தென்தமிழீழ மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களைத் தோற்றுவிக்கும். “பிரதேசவாதம் பேசும் பிள்ளையானையும் கஜேந்திரனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக உருவாக்கி அறிக்கை வெளியிடும் ஊடகங்கள்இ தாம் மறைமுகமாகப் பிரதேச வாதத்தை தூண்டுகின்றோம் என்பதை ஏன் உணரவில்லை. ஆக கருணா பிள்ளையானுக்கும் இந்த ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஒருசில இணைய ஊடகங்களின் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக.

மறு தரப்பு மீது கண்மூடித்தனமாக மண்வாரித் தூவுவது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்றோம்? எனக்கூறும் இந்த ஊடகங்களின் நிலைப்பாடு பற்றி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் அல்லவா?

திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால் த.தே.கூட்டமைப்பும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான நிலையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஆழமான பிழவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் அதற்கு நாம் துணைபோக முடியாது என்பதையும் தமிழ் மக்களை வழிநடத்த முற்படும் ஆய்வாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்களில் ஆய்வுகளை எழுதி நேரத்தை வீணாக்கி மக்களைக் குழப்பும் நாம் தமிழ் மக்களின் பிளவுபட இருந்த தலைமைகளை ஒன்றிணைக்க எம்மால் முடிந்ததை ஏதாவது செய்தோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். சரி… தவிர்க்க முடியாமல் பிளவு ஏற்பட்டு விட்டது இது பற்றி எழுதிக் குழப்புவதை விட்டுவிட்டு இந்தத் தலைமைகளை ஒருங்கிணைக்க இப்போதாவது ஏதாவது செய்தோமா?

த.தே.கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பிரநிதித்துவம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அது பற்றி உரியவர்களிடம் எடுத்துக்கூறி மறைமுக ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதே சிறந்த ஊடகருக்கு எடுத்துக்காட்டு.

த.தே.கூட்டமைப்பின் உருவாக்கம் மட்டுமன்றி வேறு எத்தனையோ முக்கிய மறைமுகப் பணிகளை மாமனிதர் சிவராம் அவர்கள் மேற்கொண்ட போதிலும் அவர் அதனை சதாரண மக்களிற்கு தெரிவித்து விமர்சனங்களை முன்வைக்க முற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில் அரசியல் வார்த்தை ஜாலங்களைப் புரிந்துகொள்ள முடியாத சாதாரண மக்கள் பிரதேசவாதம் என்ற சந்தர்ப்பவாதத்திற்குள் கட்டுப்பட்டு அவர்களின் விடுதலை உணர்வு சிதறடிக்கப்படும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பிரதிநிதித்துவம் எவ்வளது முக்கியமோ அதனைவிட மக்களின் மனங்களும் விடுதலை உணர்வும் அதிமுக்கியம். அவற்றில் தளர்ச்சியோ பாதிப்போ ஏற்பட நாம் துணைபோகக்கூடாது.

2.தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போகும்

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தைத் தவிர வேறு எந்தவொரு காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட திட்டமிட்ட சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை என்பதே உண்மை. 1963ஆம் ஆண்டு திருகோணமலையில் 36 வீதமாக இருந்த தமிழ் மக்கள் 2007ஆம் ஆண்டில் 28.6 வீதமாக வீழ்ச்சியடைந்தனர். இதேபோன்ற நிலை வன்னியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் காணப்படுகின்றது.

போர் நிறுத்தம் என்ற கயிற்றினால் விடுதலைப் புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தபோது ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் திருகோணமலை நகரத்தில் நிறுவப்பட்ட பெளத்த கோவிலையும் மட்டக்களப்பில் வீதிகளுக்கு சிங்களப் பெயர் இடுவதையும் ஏன் வன்னியில் முளைத்த பெளத்த கோவில்களையும் நாடாளுமன்றில் நான்காவது பெரும் பலத்துடன் இருந்த த.தே.கூட்டமைப்பினால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.

இதனால் திருகோணமலையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது சரியென்பது எனது வாதமல்ல. சம்பந்தன் பதவிக்கு வராதுபோனால் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என முன்வைக்கப்படும் ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதே எனது கேள்வி? அப்படியென்றால் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு.சம்பந்தன் அவர்கள் நீண்ட காலம் இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் விகிதார வீழ்ச்சியும் சிங்களக் குடியேற்றமும் முஸ்லீம் மக்களின் பெருக்கமும் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது நியாயம் அல்லவா?
ஆக மொத்தத்தில் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் தலைமையாக இப்பொழுது செயற்படக் கூடியவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே சிங்கள தேசத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பற்றி பன்னாட்டு சமூகத்திற்காவது எடுத்துக்கூறி தமிழ் மக்களிற்கான ஆதரவைத் திரட்ட வழி வகுக்குமே தவிர விமர்சனங்களை முன்வைத்து தலைமைகளைப் பிரிப்பதால் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது.

3.தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி பாதிக்கப்படப்போகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினால் தமிழர் தாயகத்தின் அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தின் அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்பு உயர்கல்வி போன்றன பாதிக்கப்படப்போவதாக முன்வைக்கப்படும் விமர்சங்களில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அடிப்படையில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒரு பிரதேசத்திற்கான ஆறு கோடிகள் இல்லாமல் போகும் என நாம் கவலைப்படுகின்றோம்.

தமிழர்களின் தன்மானத்திற்காக உயிர் கொடுத்துப் போராடிய எம்மினம் அதிலும் வீரவீச்சுடன் போராடிய பல அரிய போராளிகளைத்தந்த தென் தமிழீழத்திற்கான அபிவிருத்தி தடைப்படும் என நாம் பேச முற்படுவது அந்தப் போராளிகளின் தியாயங்களை அவமதிப்பது போன்ற செயற்பாடாகும். தமிழர்கள் தற்பொழுதுள்ள நிலையில் சில அணுசரிப்புக்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொண்டு சிங்களத்தின் உதவியைப் பெற வேண்டும் என முன்வைக்கப்படும் வாதம் எவ்வளது தூரம் சரியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதால் அபிவிருத்தி நடவடிக்கைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என எழுந்தமானமாகக் கூறுவதன் ஊடக மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் போன்றவர்கள் கூட்டமைப்பின் பிளவினால் ஆசனங்களைப் பெறுவதையும் மறைமுகமாக ஆமோதிக்கும் நாம் தென் தமிழீழத்தில் இழக்கப்படும் பிரதிநிதித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் அருகதையை இழந்து நிற்கின்றோம்.

கருணாவும் பிள்ளையானும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் துணைப்படைக் குழுக்களை இயக்கி அவர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியபோது த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் எமது மண்ணில் மேற்கொள்ள முடியாமல் போனது. குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில்கூட கலந்துகொள்ளவோ தமது தொகுதிக்கு வந்து போகவோ முடியாமல் போனது. அப்போது உரத்துக் குரல் கொடுத்து கண்டனங்களை வெளியிட்டு அபிவிருத்திப் பணிகளுக்கு ஏதுநிலைகளை ஏற்படுத்தாத நாம், இப்போது என்ன நோக்கின் அடிப்படையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என எண்ணிப்பார்க்க வேண்டும்.

வன்னியில் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்களைச் சென்று பார்வையிடவோ, உதவி செய்யவோ த.தே.கூட்டமைப்பினால் முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்பொழுது மகிந்த அணியில் இருக்கும் கனகரத்தினம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவோஈ பன்னாட்டு அரசுகளுக்கும், சமூகத்திற்கும் எம்மை ஊடகர்கள் என வெளிப்படுத்தி, அந்த மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கவோ நாம் முற்பட்டோமா?

இவற்றை விடுத்து அறைக்குள் இருந்து எழுதும் ஆய்வுப் பத்திகள்? தமிழ் மக்களின் ஒற்றுமையை அம்பலத்தில் ஆடவிடும் என்ற பொறுப்புணர்வு எமக்கிருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பாகும். நாம் வெளியிடும் எந்தப் பத்தியாய்வும் தமிழ் மக்களையோ, தமிழ் மக்களின் தலைமையையோ பிளவுபடுத்தாது, அதே நேரத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி துரோகம் இழைப்பவர்களை, அதுவும் இந்த முக்கிய காலகட்டத்தில் அவ்வாறானவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற மிகப்பெரும் தலைமை மெளனமாக இருக்கும் இந்தக் காலப்பகுதியில், தமிழ் மக்களின் மனங்களைக் குழப்பும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்க முடியாது.

இத்துடன் எமது ஆய்வு, அறிக்கை, மற்றும் ஊடகம் ஊடான சிதறடிப்புச் செய்திகளை நிறுத்திவிட்டு, தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துப் போராடக்கூடியவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கும் பணியைச் செய்வதன் ஊடாக, புலம்பெயர்ந்துள்ள நாம் அடுத்த பொதுத் தேர்தலில் (2004இல் விடுதலைப் புலிகள் போன்று) காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதுடன், பிளவுபட்டுள்ள அணிகளை தேர்தலின் பின் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதே தமிழ் மக்களின் நம்பிக்கை.

தாயகன்
thaayahan@gmail.com

Comments