இலங்கைத் தமிழ் மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இந்தியா உதவுமா?

இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவுகட்டவும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா உதவிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் உருவாக்கும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுவருகின்றன.

எனவே தமிழ் மக்களை மீண்டும் ஒரு மாøயக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களின் இருப்பை முற்றாக அழிவுக்கு உள்ளாக்க சில சக்திகள் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றன என்பது தெளிவானது. இந்த நிலையில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத்தருமா என்ற கேள்விக்கான சாத்தியங்களை ஆராய்வது இங்கு பொருத்தமானது.

1980 களில் ஈழத்மிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக விடுதலை இயக்கங்கள் ஆயுதங்களை துõக்கிய போது அமெரிக்கõவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக அமெரிக்காவை இலங்கையில் காலுõன்ற விடாது தடுப்பதற்காக இந்தியா ஈழவிடுதலைப் போரளிகளை தனது நலன்களுக்காக பயன்படுத்தியிருந்தது. எல்லா இயக்கங்களும் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்த போதும் அந்த தந்திரவலையில் இருந்து தப்பியது விடுதலைப்புலிகள் மட்டும் தான்.

இலங்கை அரசு மீதான தனது அழுத்தங்களுக்கு இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய இயக்கங்களை பயன்படுத்திய இந்தியா பின்னர் "அமைதிப்படை" என்ற பெயரில் இலங்கையில் கால்பதித்த பின்னர் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அந்த இயக்கங்களை அழித்துவிடவே முயன்றிருந்தது.

ஆனால் அப்போதும் விடுதலைப்புலிகள் மட்டுமே தப்பிக்கொண்டனர். சில நுõறு விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்காக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்ட போதும், அவர்களால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதாவது இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து தனது நகர்வை மேற்கொள்ளவோ அல்லது தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத்தரவோ இந்தியா முயன்றது கிடையாது.

1990 களில் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோதும் அதனை ஒரு இராணுவத் தோல்வியாக ஏற்றுக்கொள்ளாது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அரசியல் தோல்வியாக சித்திரித்து இந்தியா சென்றிருந்தது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது அந்த இரு நாடுகளின் கருத்துகளை அதிகம் உள்வாங்கியதொன்று. அங்கு தமிழ் மக்களின் கருத்துகள் அவர்களின் விருப்பப்படி உள்வாங்கப்படவில்லை. எனவே அந்த இரு நாடுகளும் மேற்கொண்ட உடன்படிக்கையை இந்தியா நிறைவற்ற முடியவில்லை என்றால் அது இந்திய இலங்கை அரசுகளை சார்ந்தது.

இந்தியப்படையின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான வழிகளை அடைத்துவிடுவதை முதன்மையாக கொண்டதே தவிர அதற்கு அனுகூலமானதல்ல. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவை இணைந்துகொள்ளுமாறு தமிழ் சமூகம் கேட்டுக்கொண்ட போதும் இந்தியா அதற்கு மறுத்துவிட்டது. சமாதானப் பேச்சுகளை மேற்கொள்வதற்கு இடத்தை கூட வழங்க அது மறுத்துவிட்டது.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு மேற்கொண்டபோது இலங்கை அரசுடன் இந்தியா இணைந்துகொண்டது. நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடுகளை கிழித்தெறிந்து மேற்குலகத்தை இலங்கையை விட்டு வெளியேறச் செய்யப்பட்டது. போர் உக்கிரமடைந்தது, பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கிக் கொண்டனர். பெருமளவான மக்கள் கொல்லப்படுவார்கள் என உலக நாடுகள் எச்சரித்தன, இரத்த ஆறு ஓடப்போகின்றது என ஐக்கிய நாடுகள் எச்சரித்தது, மக்களை மீட்பதற்கு அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை தலைமையகம் தயாரானது.

ஆனால் அவை எல்லாவற்றையும் முறியடித்து போரை நடத்தி முடிக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்கியது. அங்கு நடந்த கொடுமையான போரில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிட முன்னாள் பேச்சõளர் கோடன் வைஸ் தெரிவித்தார்.

இலங்கையில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மேற்குலகமும், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன.

ஆனால் இந்தியா இது தொடர்பில் பேசுவது கிடையாது. கடற்கரை மணலினுள் புதைந்துபோன தமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதியை தேடி ஈழத்தமிழ் மக்கள் பல ஆயிரம் மைல்களை கடந்து அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகருக்கு சென்றுள்ளனர். ஏன் நீதியை தேடி தமிழ் சமூகம் பல ஆயிரம் மைல்களை கடந்து சென்றுள்ளது என நாம் ஆராய்ந்தால் இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். தற்போதைய நடவடிக்கைகளை கூட நாம் அவதானித்தால் ஒன்றை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

அதாவது தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என மேற்குலகம் கோரிக்கைகளை விடுத்து வருகின்றது. அதேசமயம், மறுவளமாக அவர்கள் இலங்கை அரசு மீது அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து வருகையில், பிரித்தானியாவும், ஜேர்மனியும் இலங்கைக்கான உதவிகளை முற்றாக நிறுத்தியுள்ளன. அதே சமயம் இலங்கைக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதுடன், மனித உரிமை மீறல்கள் மற்றும், போர்க் குற்றங்கள் மீதான விசாரணைகளை அமெரிக்கா முதன்மைப்படுத்தி வருகின்றது.

இலங்கை அரசின் மீதான அழுத்தங்களின் ஊடாகவே அரசியல் தீர்வு தொடர்பாக சில நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என மேற்குலகம் நம்புகின்றது. இந்தியாவும் அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றது ஆனால், இலங்கை அரசு மீது அது அழுத்தங்களை மேற்கொள்வதில்லை, மாறாக உதவிகளையே அது வழங்கி வருகின்றது. எனினும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்தியா தற்போது அதிக ஈடுபாடு காட்டுவதன் அர்த்தம் என்ன? விடை தெளிவானது. ஈழத்தமிழ் மக்களுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான உறவுகளை முறியடிப்பதுதான் அதன் நோக்கம்.

இந்த உறவுகளை முறியடிக்கும் வரை இந்தியா ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அதிகம் பேசும், பல நாடகங்களை அரங்கேற்றும், ஆனால் ஈழத்தமிழ் மக்கள் மேற்குலகத்துடன் கொண்டுள்ள உறவுகள் முறிவடையும் போது ஈழத்தமிழ் மக்களும் தமது அடையாளங்களை இழந்துபோவார்கள். அதன் பின்னர் அவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு தாயகம் என்று ஒரு பிரதேசத்தை இந்தியா விட்டுவைத்திருக்கப்போவதில்லை. அதனைத் தான் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றில் தொடர்ச்சியாக அரசியல் பத்திகளை எழுதிவரும் இந்திய ஆய்வாளர் ஒருவர் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும் போது தெரிவித்திருந்தார்.

அதாவது போர் நிறைவடைந்துவிட்டது. எனவே, தமிழ் மக்களும், சிங்கள மக்களும் இலங்கை முழுவதும் கலந்து சேர்ந்து வாழும் சூழ்நிலைகளை ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்ததை நாம் இங்கு முக்கியமாக கருதவேண்டும். எனவே கடந்த 27 வருடங்களாக இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு கற்றுத்தந்த அனுபவங்களை மறந்து நாம் மீண்டும் இந்தியாவை நம்புவது என்பது, தற்கொலைக்கு ஒப்பானது.

ஏனெனில் கடந்த 27 வருடங்களில் ஈழத்தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த நகர்வையும் இந்தியா மேற்கொள்ளவில்லை, குறிப்பாக இலங்கையின் உயர் நீதிமன்றம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை பிரித்தபோதும் இந்தியா எந்த அழுத்தங்களையும் மேற்கொள்ளத் துணியவில்லை.

எனவே ஒரு அழுத்தமான சூழலில் வாழ்ந்துவரும் வடக்கு , கிழக்கு மக்களை மீண்டும் இந்தியா என்ற மாயைவலைக்குள் தள்ளுவதன் மூலம், அவர்களின் அரசியல் உரிமைகளை முற்றாக குழிதோண்டிப் புதைப் பதை பகுத்தறிவுள்ள தமிழ் சமூகம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை.


- வேல்ஸிலிருந்து அருஷ்

Comments

very correct assumption.you remember the Indian politician don,t think of their country or their people only their pocket( money).If you don't mind I will suggest my opinion about your post that If you reduce your post size it will make more interest to read and more people can read.But a deep and accurate reporting.