தேர்தல் காலமும் கையாலாகாத நிலையில் தமிழர்களும்…..

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. மாறிவரும் உலக அரங்கில் ஒவ்வொரு நாடும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தம்மால் முடியுமான முயற்சிகளை எடுத்துவருகின்றன.

ஆனால் அவர்கள் எல்லோரதும் முயற்சிகள்; விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்பதில் ஒரே புள்ளியில் சந்தித்தன. ஏனெனில் இலங்கையை பூரணமாக கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அங்கு ஒரு ஆட்சி நிலவவேண்டும் அவ்வாட்சியாளர் தமது நலன்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. விடுதலைப்புலிகளின் தனிநாட்டை அங்கீகரித்தால் இலங்கையின் வடகிழக்கு தவிர்ந்த பெரும்பகுதியை சீனாவிடம் இழக்கவேண்டி வரும் என்ற நப்பாசையால் அவை விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமது ஆளுகையை இலங்கையில் ஏற்படுத்த முனைந்தன.

பேரினவாதத்தின் சாணக்கியம்

ஆனால் விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர் அவை எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை மாறாக மகிந்த அரசு தொடர்ந்தும் சீனாவுடனே தனது உறவுகளை வளர்த்து கொண்டது. இதனால் கலக்கமடைந்த இந்தியா தான் பெரிதும் உதவிகளை புரிந்து இலங்கையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்க விரும்பியது. இதற்கு உதாரணமாக பாரிய முள்ளிவாய்க்கால் மனிதபடுகொலை விவகாரம் ஜ.நா சபைக்கு கொண்டுவரப்பட்டபோது இந்தியா இலங்கைகைக்கு சார்பாக இருந்தமையை குறிப்பிடலாம். மாறாக மகிந்த அரசு இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதாக காட்டிக்கொண்டே தனக்கு தேவையான நகர்வை மேற்கொள்வதால் இந்தியா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

இந்தியாவின் இரட்டை தந்திரம்

இந்நிலையில் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக மகிந்த அரசிற்கு ஒருவழியில் தனது முழுமையான ஆதரவை வழங்கிகொண்டு மறுபுறத்தில் மகிந்த அரசை அச்சுறுத்தும் பாணியிலான அல்லது தங்களுடன் நல்லுறவை பேணாத சமயத்தில் சிக்கல் ஏற்படுத்தப்படும் என்று கூறும் பாணியிலான செயற்பாடுகள் அமைகின்றன. எவ்வாறெனில் முன்னர் இலங்கையை அச்சுறுத்த தமிழ் இயக்கங்களை வளர்த்தமையை போன்று தற்போது தமிழர்களின் பிரதிநிதிகளை தமது கட்டுபாட்டில் வைத்திருந்து அவர்கள் மூலம் தனக்கு தேவையான சமயத்தில் அச்சுறுத்தும்; செயற்பாடுகள் முனைப்பாக ஆரம்பிக்கப்படுகின்றன.

முன்னர் பிள்ளையானை இந்தியா இவ்வாறு நடத்தமுயன்றபோது மகிந்த அரசு அதனை இலகுவாக வெற்றிகொள்ள முடிந்தமையை கூறலாம். தற்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பை இவ்வாறு தனது கைக்குள் எடுப்பதில் பெருவெற்றியடைந்துள்ளது. ஏனெனில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் நிழலில் உருவாக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்று கூறத்தக்கவாறு இருந்தபோது எவ்வளவோ கடினமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்திய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கமுடியாமல் போனமையும் பின்னர் முள்ளிவாய்க்கால் சமருக்கு சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எந்த உறவும் இல்லை என பகிரங்கமாக அறவித்தமை அச்செய்தி சண்டே ரைம்ஸில் வந்தமையும் முள்ளிவாய்க்கால் சமருக்கு பின்னர் இதுவரை இலங்கையில் சீனப்பிரசன்னம் பற்றி கதைக்காதவர் பின்னர் நடந்த பாராளுமன்ற அமர்வில் இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி காரசாரமாக விவாதித்திருந்தமையும் குறிப்பிடலாம்.

அதன் பின்னர் கூட்டமைப்பினர் அடிக்கடி இந்தியாவில் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். மேலும் தமிழீழப்பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டிராத தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகத்தை அமைப்பதில் ஆர்வத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமது கட்டுபாட்டில் இருக்கத்தக்க ஒரு அணியை மகிந்தவுக்கு சவாலாக வைத்துக் கொண்டு தனது காரியங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் குறிக்கோளாக இருந்துவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மகிந்தவுக்கு தனது நிபுணர்கள் குழு போன்றவற்றை வழங்கி தனது மறைமுக ஆதரவை வழங்கிய இந்தியாஇ அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சரத் பொன்சேகா பக்கம் திருப்பி மகிந்தவுக்கு சவால் விட்டதோடு சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை இதன் மூலம் எடுத்தது.

தற்போது இந்தியா மகிந்தவுடன் நல்லுறவை பேண பரிதாபத்திற்குரிய கூட்டமைப்பு இனி எதுவும் பெறவேண்டுமாயின் மகிந்தவின் காலில் விழவேண்டிய நிலையுள்ளது. கூட்டமைப்பின் தொடக்க காலத்தில் இரு தேசிய இனம் என்ற கொள்கையை முன்வைத்து கிளம்பியவர்கள் அவ்வாறே சம்பந்தனை தேர்தலில் நிறுத்தியோ அல்லது பேரினவாதிகள் இருவருக்கும் வாக்களிக்காமல் விட்டோ தமிழ் மக்களின் பிரச்சினையை யார் வந்தாலும் முன்னகர்த்தியிருக்க வேண்டியவர்கள் துரதிர்ஷ்ட வசமாக பேரினவாதிகள் ஒருவரிற்கு வாக்களித்து தமிழ் மக்களை மேலும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டுள்ளனர்.

மேற்குலகின் நிலைப்பாடு

இலங்கை நாட்டை முழுமையாக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகம் பின்னர் பொன்சேகாவை ஆட்சியமர்த்தியாவது தமது செல்வாக்கை செலுத்த தன்னாலான முயற்சிகளை எடுத்தது. ஆனால் இவையெல்லாம் பொய்யாகிப்போன நிலையில் மகிந்தவை அசைக்க தற்போது தமிழர் பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவற்றை கையில் எடுத்துள்ளது. இவற்றின் மூலம் எப்படியாவது தமது இருப்பை உறுதிப்படுத்த முனைகின்றன. இதற்கு உதாரணமாக புலம்பெயர் தமிழர்களின் வட்டுகோட்டை தனிநாட்டு தீர்மானத்தின் மீதான தேர்தல் நாடுகடந்த அரசு ஆகியவற்றை மறைமுகமாக அனுசரிப்பதோடு இவற்றிற்கு எவ்விதமான இடையூறும் கொடுப்பதாக தெரியவில்லை. இறுதியாக லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் மேற்குலகின் முக்கிய பிரதிநிதிகள் பங்குபற்றியமையை குறிப்பிடலாம்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்

தமிழீழ மக்கள் மிகப்பெரிய பேரவலத்திற்கு உட்பட்டு ஒரு வருடம் கூட கழிந்திராத நிலையில் அவர்களுடைய வாழ்க்கை சுமூகமான நிலைக்கு வராத நிலையில் அவர்கள் மீது இத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதற்கெதிரான செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். மாறாக இவர்களும் ஊடகங்களும் இதனை கணக்கெடுத்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல்களம்

தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலில் ஜனாதிபதி தேர்தலை போன்று அல்லாது மக்கள் தாம் எப்படியும் வாக்களிக் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்hர்கள். ஏனெனில் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்காவிடின் எப்படியும் விரும்பத்தகாதவர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக வந்துவிடுவார்கள்.

தமிழ்மக்களின் தெரிவு

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தற்போது தாயகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப அரசியல் ரீதியாக தமிழ் மக்களை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்களுக்கு வலுவான விலைபோகாத பிரதிநிதிகள் ஒரணியில் தேவை. ஆனால் மகிந்த அரசு தமிழ் மக்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சிதறடிப்பதற்கு ஏராளம் சுயேட்சை குழுக்களை களம் இறக்கியுள்ளது. மறுபுறத்தில் இந்தியா தனக்கு கீழ் சேவை செய்யக்கூடிய தமிழ் மக்களின் பலமாக கூட்டமைப்பை நாடி நிற்கின்றது. இதில் பெரிதும் துரதிஷ்டம் என்னவென்றால் இந்நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சில ஊடகங்களும் கட்டுபட்டு நிற்பது தான்.

இப்பாரிய சிக்கலுக்குள் மாட்டியுள்ள தமிழ் மக்கள் முடிவெடுப்பது என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் தமது மரபுஇ தனிப்பட்ட பழக்கமஇ; பொதுவான கருத்து என்பவற்றை மீறி வாக்களிப்பது என்பது அரசியல் ஆர்வமுள்ளவர்களை தவிர்ந்த சாதாரண பொது மக்களுக்கு கடினமானதாகவே காணப்படும்.

விழிப்புணர்வு தேவை

எம்மவர்களில் விடயமறிந்த கற்றறிந்த பெரும்பான்மையானோர் அரசியல் விடயங்களை கதைப்பது விரும்பத்தகாத ஒன்றாகவே கருதுகின்றனர். ஆரம்ப காலத்தில் தமிழர்களுக்காக அரசியல் செய்தவர்களின் செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு காலமும் எங்களுக்கு விலைபோகாத தலைமை இருந்தபோது நாம் எங்களிடமிருந்த பொறுப்புக்களை தட்டிக்கழித்தவாறு தற்போதும் இருக்கமுடியாது. ஏனெனில் இக்காலப்பகுதியிலேயே மாபெரும் தியாகங்களுக்கு பின் பொறுப்பானது எல்லோர் தோள்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழரின் கடமை

புலம்பெயர் சமூகத்தின் கட்டமைப்புக்கள் தனிநாடு கோரி பயணிக்க தாயகத்தில் அரசியல் வேறு வழியில் பயணிப்பது பெர்ரும் ஆபத்தான விடயம் மட்டுமல்லாது தாயகத்தில் வலுவான கட்டமைப்புக்கள் இல்லாதவிடத்து புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்காலத்தில் வெறும் மாயத்தோற்ற நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.நாடுகடந்த அரசாங்கம் வட்டுகோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பவற்றின் மூலம் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர் சமூகம் தாயகத்திலுள்ள நிலைமையினை புரிந்து கொண்டு இங்குள்ள தமது உறவுகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை தமது அன்றாட தொடர்புகளினூடாக வழங்குவது இந்நிலையில் முக்கியமாகின்றது

Comments