எனது அரசியல் நோக்கம் மற்றும் கொள்கைகள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் முதன்மை வேட்பாளர் திரு சி.வரதராஜன்

எதிர்வரும் மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் கட்சிகளில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளர் திரு சி.வரதராஜன் அவர்கள் தனது கொள்கை விளக்க அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். அதனை இங்கு தருகிறோம்.

தன்னை உயர்த்துவதற்கு அரசியலைப் பயன்படுத்துபவன் அரசியல்வாதி.

மக்களை உயர்த்துவதற்கு அரசியலைப் பயன்படுத்துபவன் அரசியல்ஞானி.

நான் அரசியல்வாதியல்ல.

எமது அரசியல் இலக்கு

தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை.

எமது பொருளாதார இலக்கு

எமது வளங்கள் எம்மவர்களால் கையாளப்படல் வேண்டும்.

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

என்னைப்பற்றி

1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளேன்.

tnதாய் மண்ணில் சுயமாகத் தொழில் புரியவேண்டும் என்ற கொள்கைக்காக விரிவுரையாளர் பதவியிலிருந்து விலகி கடந்த 27 வருடங்களாக தனியார் கல்வி நிறுவன ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

1988ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் சிறையிலிருந்தேன். தமிழ்த் தேசியத்தை நேசித்ததன் காரணமாக 1997 – 1998 காலப்பகுதியில் சிறை சென்றேன்.

2008ம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானேன்.

இவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் புகலிடம் கோரிச் செல்லாமல் – இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் எனது குடும்பத்தோடு தாயகத்தில் தொடர்ந்து வாழ்கின்றேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால்

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் தேசியத்தின் மீது நான் கொண்டிருக்கும் பற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் யாரிடமும் விலை போகாமல் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற எமது முன்னணியின் கொள்கை வழி நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனநாயக வழிமுறைகளில் போராடுவேன்.

கட்சி பேதங்களைக் கடந்து எமது முன்னணியின் கொள்கையினை ஏற்றுக்கொள்கின்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பாடுபடுவேன்.

அரசியல் பிரச்சனைகள்

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் தேசியத்தின் மீது நான் கொண்டிருக்கும் பற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் யாரிடமும் விலை போகாமல் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற எமது முன்னணியின் கொள்கை வழி நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனநாயக வழிமுறைகளில் போராடுவேன்.

கட்சி பேதங்களைக் கடந்து எமது முன்னணியின் கொள்கையினை ஏற்றுக்கொள்கின்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பாடுபடுவேன்.

இடம்பெயர்ந்தோர் பிரச்சனைகள்

நீண்டகாலமாக இடம் பெயர்ந்து அல்லலுற்று வரும் எமது மக்களைக் குடியமர்த்துவதற்கு என்னாலியன்ற முயற்சிகளை மேற்கொள்வேன்.

இவர்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பி, வளமான வாழ்கைக்குத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்

இவர்களின் வேதனைகளை நானும் அனுபவித்தவன். என்னோடு கடத்தப்பட்ட என்னுடைய மைத்துனர் (எனது மனைவியின் தம்பி) இன்று வரை எங்கிருக்கின்றார் என்று தெரியாது. இதன் வலிகளை நான் உணர்ந்தவன். இவர்களின் விடுதலை தொடர்பாக எனது சக்திக்குட்பட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதே எனது முதலாவது தலையாய பணியாக அமையும்.

கல்வி

மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாகவிருக்கும் காரணிகளை இனங்கண்டு அவற்றைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுப்பேன்.

கடந்த காலங்களில் வளஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ள மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திமீது அதிகளவு கவனம் செலுத்தப்படும்.

பாடசாலைகளுக்கான வளஒதுக்கீட்டில் சமத்துவம் பேணப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வளங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தனித்து அரசாங்கத்தில் மட்டும் தங்கியிராமல் சமூகத்திலிருந்து – குறிப்பாக புலம் பெயர்ந்த எம்மவர்களிடமிருந்து பெறப்படும் உதவிகள்மூலம் இது சாத்தியமாகும்.

2011ம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் குடிசன மதிப்பீட்டிலிருந்து பெறப்படும் தகவல்கள்- தரவுகள் அடிப்படையில் எதிர்வரும்காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு யாழ்ப்பாண மற்றும்
வன்னி மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்களின் தொகையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என நம்பப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலம்வரை தற்போது நடைமுறையிலுள்ள அனுமதி முறையினை தொடர்ந்து பேணுவதறகு நடவடிக்கைகள் எடுப்பேன்.

பொருளாதார அபிவிருத்தி

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 3 சதவீதத்தை மட்டுமே வடமாகாணத்தின் உற்பத்தி வகிக்கின்றது.

வடமாகாணத்தில் ஓர் ஆளுக்குரிய மாதாந்த சராசரி வருமானம் 5348 ரூபா மட்டுமே.

இலங்கையின் ஓர் ஆளுக்குரிய மாதாந்த சராசரி வருமானம் 12315 ரூபாவாகும்.

மேல் மாகாணத்தில் ஓர் ஆளுக்குரிய மாதாந்த சராசரி வருமானம் 18550 ரூபாவாகும்.

இலங்கையின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும்போது வடமாகாணம் மிகவும் பின்தங்கியநிலையில் ( ஒன்பதாவது இடத்தில்) உள்ளது. இதற்கு முந்திய எட்டாவது இடத்தில் கிழக்கு மாகாணம் உள்ளது.

எனது இலக்கு

காலையில் எழும்போது பசியோடு எழலாம். ஆனால் எவரும் இரவில் தூங்கச் செல்லும்போது பசியோடு இருக்கக்கூடாது.

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாதநிலை வேண்டும்.

எமது வளங்கள் எம்மவர்களால் கையாளப்படல் வேண்டும்.

எனது எதிர்காலச் செயற்பாடுகள்

எமது பின்தங்கியநிலையை மாற்றி எமது பிரதேசத்தை முதலிடத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவேன் என உறுதியளிக்கின்றேன்.

அபிவிருத்தியின் நன்மைகளை மக்கள் உணரும்போதுதான் உண்மையான அபிவிருத்தி ஏற்படுகின்றது. எனவே அபிவிருத்தித் திட்டங்களில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவின் பயனையும் மக்களைச் சென்றடைய வைப்பேன்.

எமது மண்ணின் வளங்களை நாமே கையாளக்கூடிய வiலான முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற கட்டுப்பாடுகள், தடைகள் என்பவற்றை அகற்றுவதற்கு முயற்சிகள் எடுப்பேன். மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதில் காணப்படும் தடைகளை இனங்கண்டு அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்பேன்.

யாழ் மாவட்டத்தின் தனித்துவமான விவசாய உற்பத்திகளான மிளகாய், வெண்காயம், புகையிலை, மாம்பழம், திராட்சைப்பழம் என்பவற்றையும் பதப்படுத்தப்பட்ட கடலுணவுப் பொருட்களையும் மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியையும் எமது புலம் பெயர் தமிழர்களினால் நடாத்தப்படுகின்றவர்த்தக சங்கங்களின் உதவியுடன் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெறுமனே சேவைத்துறையின் ஊடாகமட்டும் வேலைவாய்ப்புக்களை உருவாக்காமல் பொருளுற்பத்தித் துறைகளில் அதிகளவுவேலைவாய்ப்புக்களை எமது இளைஞர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் அவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்குதல்.

எமது பிரதேசம் ஓர் நுகர்வு மையமாக மட்டும் அமையாமல்உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பேன்.பிரதேசங்கள் மற்றும் துறைகளுக்கிடையிலான சமநிலை வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துதல்.

புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனைகள், முதலீடுகள் என்பவற்றினூடாக எமது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும். இவை தொடர்பான ஆரம்ப கட்டவேலைகளை புலம்பெயர்ந்திருக்கின்ற எனது மாணவர்களினூடாக ஆரம்பித்து விட்டேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர்

பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் (அதுவும் முக்கியமான விவாதங்கள் நடைபெறும்) நாட்கள் மட்டும் கொழும்பிற்குச் செல்வேன். ஏனைய நாட்களில் எங்களின் சொந்த மண்ணில் என் மக்களோடு இருப்பேன்.

எனது மக்களின் தேவைகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்வேன்.

எனது தனிப்பட்ட – சொந்தத் தேவைகளுக்காக ஒரு போதும் வெளி நாடுகளுக்குச் செல்லமாட்டேன்.

ஒவ்வொரு தொகுதியிலும் எனது அலுவலகம் திறக்கப்படும். மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரடியாக எனக்குத் தெரியப்படுத்துவதற்கான வழிவகைகள் செய்து தரப்படும்.

அரசியல் எனக்குத் தொழிலல்ல. ஆசிரியராக இருப்பதே எனது தொழில். எனவே எனது சொந்த மண்ணில் ஆசிரியராகப் பணியாற்றி எனது வாழ்க்கைக்கான வருமானத்தை ஆசிரியத் தொழிலிருந்தே பெற்றுக் கொண்டிருப்பேன்.

இதுவரைகாலமும் ஆசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஏணியாய் இருந்தேன் – தொடர்ந்தும் இருப்பேன்.

இதுவரைகாலமும் ஆசிரியராகப் பணியாற்றி கல்விக் கடலைக் கடக்க மாணவர்களுக்குத் தோணியாக இருந்தேன் – தொடர்ந்தும் இருப்பேன்.

இதுவரைகாலமும் கல்விப் பணியில் மேற்கொண்ட சேவைகளைப் போல எதிர்வரும் காலங்களில் அரசியலில் எனது மக்களுக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருந்து பணியாற்றுவேன்.

எனது தனிப்பட்ட – குடும்ப வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு போதும் அரசியலைப் பயன்படுத்தமாட்டேன்.

எனது மக்களாகிய உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே அரசியலைப் பயன்படுத்துவேன்.

கடந்த காலங்களில் உங்களோடு வாழ்ந்தவன். இன்றும் உங்களோடுதான் வாழ்கின்றேன். எதிர்காலத்திலும் உங்களோடுதான் வாழ்வேன். வீழ்ந்தாலும் இம் மண்ணிலேதான் வீழ்வேன்.

பதவிக்கு வருவதற்காக வாக்குறுதிகள் தருவதும் பின்னர் அவற்றை நிறைவேற்றமுடியாமல் போனதற்கான காரணங்களைக்கூறி அடுத்த தேர்தலில் உங்கள்முன் வருவதற்கு நான் அரசியல்வாதியல்ல.

எனது ஆசிரியத் தொழிலில் நான் பலருக்கு ஓர் முன்மாதிரியாக இருந்துள்ளேன்.

எதிர்வருங்காலங்களில் அரசியலிலும் பலருக்கு ஒரு முன்மாதிரியாக நான் இருப்பேன்.

அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்தை – ஒழுக்கத்தை உருவாக்கி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஒரு வழிகாட்டியாக விளங்குவேன்.

எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக நான் நிறைவேற்றுவதாகக் கூறிய விடயங்களில் பெரும்பாலானவற்றை எனது பதவிக் காலமாகிய ஆறு வருடத்தின் முதல் நான்கு வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன். இல்லையெனில் நான்கு ஆண்டுகளின் முடிவில்எனதுபதவியிலிருந்து விலகிவிடுவேன்.

சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்வோமேயானால் காலப்போக்கில் அச் சலுகைகளே எமது உரிமைகளாக மாறிவிடும் அபாயம் உண்டு. எனவே சலுகைகளுக்கு விலைபோகாமல் , அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுப்போம்.

ஆசிரியரே ஆணையிடுங்கள்.
உங்கள் பின் அணி திரண்டு புதியதோர் உலகம் செய்வோம் என
அலைகடல்போல் ஆர்ப்பரிக்கும் மாணவ சமூகமே – இளைஞர் சமூகமே

உங்கள் ஆசிரியர் அழைக்கின்றேன் – ஆணையிடுகின்றேன்.

அரசியலில் புதிய சகாப்தம் படைக்க எழுச்சியுடன் எழுந்து வாருங்கள்- நீங்கள் நிமிர்ந்து வாருங்கள். அரசியலில் ஒழுக்கத்தைப் பேணி நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்வோம்.

சி.வரதராஜன் B.A (Hons)
(முதன்மை வேட்பாளர்)
(பிரபல பொருளியல் ஆசிரியர், முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்)

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

Comments