நாங்கள் இணைந்து செயற்பட விரும்புகின்றோம், ஆனால் தலைமையில் மாற்றம் தேவை - சம்பந்தரின் அழைப்புக்கு கஜேந்திரகுமார் பதில்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) திரிகோணமலையில் நடைபெற்றது.

திரிகோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தலைமையில் மாலை 6.00 மணிக்கு திரிகோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன் செல்வராசா, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன், யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் கலாநிதி எட்வேர்ட் கெனடி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரிகோணமலை வேட்பாளர்களான த.காந்தரூபன், ஜோன்சன், கரிஸ்டன், திரவியராசா, கண்மணியம்மா இரத்தினவடிவேல் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இதுவரை காலமும் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திரிகோணமலை நகரசபை தலைவரும், முதன்மை வேட்பாளருமான ச.கௌரிமுகுந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், உப்புவெளி பிரதேசசபை தலைவர் த.காந்தரூபன், கலாநிதி எட்வேர்ட்ட கெனடி, ஜொன்சன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், கண்மணியம்மா, கரிஸ்டன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றினர்.

இந்தியாவின் பணிப்பிற்கு இணங்க தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கைவிட்ட காரணத்தினால், அந்தக் கூட்டமைப்பில் இருந்து விலக நேர்ந்ததை தனது உரையில் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைமைப் பொறுப்பிலுள்ள இரா.சம்பந்தன். மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அகற்றப்பட்டால், எதிர்காலத்தில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும் என்பது தமது நோக்கம் அல்ல எனவும், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பிரவேசம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலிவடிவம்









Comments