தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் திருக்கோணமலை திருக்கடலூர் கடற்கரையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கடலூர் பத்தரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் இளைஞர்கள் சார்பில் இக்கூட்டம் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
இதில் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கௌரிமுகுந்தன், தங்கவேலாயுதம் காந்தரூபன், உமாகாந்தி ரவிகுமார், தில்லையம்பலம் கரிஸ்டன் மற்றும் கண்மணி அம்மா இரத்தினவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நகர சபையின் உறுப்பினரும் வேட்பாளருமான கண்மணி அம்மா ஆற்றிய உரையில், தமிழ் மக்கள் துன்பப்படும்போது இந்தியாவுக்கு சென்று ஒளித்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றார்கள். எமது பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அதில் வாக்கு கேட்கின்றார்கள். இது எந்த வகையில் நியாயமானது என கேள்வி எழுப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தழிழ் தேசியத் தலைமையினால் நிராகரிக்கப்ட்ட ஒஸ்லோ தீர்வுத் திட்டத்தை இன்று இந்தியாவின் உதவியுடன் முன்வைத்துள்ளார்கள். மக்கள் பிரச்சனைகளை கேட்காத, அவர்கள் கஸ்டப்படுகின்றபோது இங்கு வராதவர்கள் மக்கள் பிரதிநிதிகளா? 15 வருடங்களக்கு மேலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களது குடும்பங்களைக பாதுகாப்பாக இந்தியாவில் குடியமர்த்திவிட்டு இன்று தேர்தலுக்காக இங்கு முகாம் இட்டுள்ளனர் எனக் கூறினார்.
மக்களுடன் மக்களாக நின்று பணியாற்றும் இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தனது உரையில் கூறிய கண்மணி அம்மா, திருமலை மக்கள் தன்மானத் தமிழர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
TNPF Trinco meeting_20100324_Kanmani Amma
Comments