சீமானுக்கு எதிரான கருத்தியல் சமர்

கருத்துப் பரவல் ஆரோக்கியமானது. அது அடிப்படையான சில விவரங்களை எல்லோருக்கும் சொல்ல பெரிதும் பயன்படுகிறது. ஒரு வினைக்கு எதிர்வினை என்பது இரு பக்கத்திலும் இருக்கும் உண்மைகளை எடுத்தியம்ப துணைபுரிகிறது. அந்த அடிப்படையில் நடிகர் செயராம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வருவதைப்போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு மீண்டும் அது கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் அது நாகரீகம் என்ற வார்த்தையைப் படைத்தளித்த கட்டுரையாளர், தமிழ்த் தேசியவாதிகளின் துரோகம் என்கிற அநாகரீக வார்த்தையை எப்படி கையாண்டார் என்பது நமக்கு விளங்கவில்லை. இரண்டு செய்திகள் அடிப்படையானது. ஒன்று, திரைப்படத்தின் காட்சிகளிலே ஒரு இனத்தை மற்றொரு இனம் கேலிப்பொருளாக கையாள்வது. மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களை கேலி பேசுவதும், தமிழ்த் திரைப்படங்களிலே மலையாளிகளை கேலி பேசுவதும் ஏற்புடையதல்ல என்றாலும்கூட அது திரைப்படங்களின் நகைச்சுவைக்காக ஏற்படுத்தப்பட்ட காட்சி பிம்பங்களாக இருக்கின்றன.

ஆனால் இது சரியா? என்றால் நிச்சயமாக கிடையாது. ஒரு இனத்தின் பண்பாட்டை கேலி செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் அது திரைப்படத்தின் காட்சியாக இருப்பதால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் திரைப்படம் என்பது ஒரு சாதாரண பொழுதுபோக்கு ஊடகம் என்கிற தன்மையிலே அது அமைந்துவிடுகிறது. ஆனால் ஒரு மனிதர், நேர்கானலில் ஒரு இனத்தை தவறாக வர்ணிப்பது என்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. திரைப்படக் காட்சிகளில் நீங்கள் மலையாளிகளை கேவலப்படுத்துகிறீர்களே, அப்படியிருக்க செயராம் சொன்னது என்ன தவறு என்ற கேள்வி அடிப்படையிலேயே சரியானதா என்பதை கட்டுரையாளரே மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் நாம் வேறு ஏதாகிலும் ஒரு வார்த்தையைச் சொல்ல, அதுவே அநாகரீகமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் நமக்கு வந்துவிடுகிறது. தமிழ்த் தேசியவாதிகளுக்கு நாகரீகமே தெரியாது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அவர் வார்த்தையிலிருந்து தோன்றும் வீச்சு அவருக்குள் புதைந்திருக்கும் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறது.

="text-align: justify;">அவர் இத்தோடு நிறுத்தியிருக்கலாம். காரணம் அவர் எந்த முகாமிலிருந்து எழுதுகிறார் என்பது அவரின் வார்த்தைகள் அவருக்கான அடையாளங்களிலிருந்து அவரே அம்பலப்பட்டு போகிறார். அவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிர்களம் அமைப்பவர் என்று. தமிழ்த் தேசியத்தின் எதிர்களத்தில் நின்று தலித்துகளைப் பற்றி அவர் பேசுவது நமக்கு வேடிக்கையாகவும், விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

எமது இனம் யாரால் இந்த தலித் அடையாளத்தைப் பெற்றது என்கின்ற வரலாற்றை மீண்டும் நாம் எடுத்துப் பார்த்தோமென்றால் நாம் நமக்குள் வரும் கோபம் நாகரீகத்தை மீறியதாக மாறிவிடும். காரணம் எந்த ஒரு எதிர்வினைக்கும் அந்த சூழலே காரணமாக அமைந்துவிடுகிறது. வீட்டிற்குள் ஒரு தேள் வருகிறதென்றால் அந்த தேளை நாம் கையால் அடித்துக் கொள்ள முனையமாட்டோம். மாறாக அதற்கென்று ஒரு குச்சியைத் தேடுவோம். ஆனால் ஒரு கொசு கடிக்கும்போது இயல்பாக நாம் அதை கைகளால் தட்டி கொன்றுவிடுகிறோம். ஆக எதைக் கொண்டு பேசுவது என்பதை அந்த சூழல் தான் முடிவு செய்கிறது.

செயராம் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாமே என்று அறிவுரை சொல்கிறார்கள். நல்ல அறிவுரைதான். செயராம் வீட்டிலிருந்த பரிசு பொருட்களெல்லாம் உடைபட்டுவிட்டதே! அதெல்லாம் திரும்ப வருமா என்று கேட்கிறார்கள். வராதுதான். அதைப்போன்று தான், செயராம் கூறிய வார்த்தையும் காற்றோடு கலந்து விட்டது. அதுவும் திரும்பப் பெற முடியாது. அவர் ஆயிரம் முறை திரும்பத் திரும்ப மன்னிப்பு கோரினாலும் வள்ளுவன் சொன்னதைப் போல, ஆறாதே நாவினாற் சுட்ட வடு. ஆனால் செயராமுக்குக் கொடுத்த பரிசுப் பொருட்களை மறுவடிவு செய்து அவர் அலங்காரமாக வைத்துக் கொள்ள முடியும்.

தலித்துகளுக்கு வக்காலத்து வாங்க களத்திற்கு வந்திருக்கும் இனிய தோழர், இந்த தலித் மக்களுக்கான விடுதலை போராட்டங்களில் எந்த இடங்களில் பங்கெடுத்தார் என்பதையும் சொல்லியிருந்தால் நீ பங்கெடுக்கவில்லை, நாங்கள் பங்கெடுத்திருக்கிறோம் என்று கூற வசதியாக இருந்திருக்கும். கல்விக் கொள்கை, வேலைவாய்ப்பு, கல்லூரி கொள்ளை, விலைவாசி உயர்வு, சாதிய மோதல் குறித்தெல்லாம் ஒரு பகுப்பாய்வு செய்திருக்கின்றார். இப்படிப்பட்ட பகுப்பாய்வு சிந்தனையாளர்கள் சமீபகாலங்களில்தான் புற்றீசல் போல் புறப்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போதுதான் பெரியார் மிகக் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியம் கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. காரணம் என்ன? தமிழ்த் தேசியத்திற்கு எதிரான களம் மிக சிறப்பாக தொண்டாற்ற புறப்பட்டிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. எதிர்வினையில் தான் தமிழ்த் தேசியம் மேலும் வளர்ச்சி அடையும் என்பதால் இப்படிப்பட்ட தமிழ்த்தேசிய எதிரிகளை நாம் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். இருவருக்குமான கருத்துக்களை இடையூறு இல்லாமல் பரிமாறிக் கொள்வதற்கு அல்லது நமக்கான கருத்துக்களின் நியாயத்தை எடுத்துரைப்பதற்கு பல அறிவியல் தளங்கள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அந்த முறையிலே இந்த இணையத்தளமும் நமக்கு வாய்ப்புகளைத் தந்திருக்கிறது.

வர்க்கப் பார்வை என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் தோழர் களத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தமிழினம் என்பதற்கு அப்பாற்பட்டு சர்வதேசிய அரசியலை முன்னெடுப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்துத்துவ அரசியலை அவர் எதிர்ப்பதாக, அதற்காக விஷ்வ ஷிந்த் பரிஷத், பாரதீய ஜனதா போன்ற வகுப்புவாத கட்சிகளை தோலுரிக்கிறோம் என்ற பார்வையில் இவரும் அம்பலப்பட்டுப் போகிறார். ‘இந்துத்துவத்திற்கும் தேசிய இன விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?' என்ற கேள்வியை முன்வைக்கிறார். இதே கேள்வியைத்தான் நாமும் கேட்கின்றோம். தமிழ்த் தேசியத்திற்கும் தங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று. காரணம் இந்துத்துவாவின் அகண்ட பாரதக் கனவு தான் உங்களுக்குள்ளும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் போட்டிருக்கும் துண்டுகளிலும், கொடிகளிலும் வண்ணங்கள் மாறுபடலாமே தவிர, எண்ணங்கள் அல்ல. கொள்கையிலும் பெரும் மாறுதல் ஒன்றும் கிடையாது.

அப்படியிருக்க, நீங்கள் தமிழ்த் தேசியத்தை புரிந்து கொள்ளப் போவதும் கிடையாது. தமிழ்த் தேசிய அரசியலை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் கிடையாது. காரணம் உங்களுக்குள் அகண்ட பாரதத்தின் அற்புதக் கனவு ஒவ்வொரு நாளும் கிளுகிளுப்பு ஊட்டிக் கொண்டிருக்கிறது. ஆகவே அதிலிருந்து உங்களால் வெளிவர முடியாது. ஒட்டுமொத்தமாய் எல்லோரும் சீமானை விரல்நீட்டி கருத்தியல் சமர் புரிவதற்குக் காரணம்தான் என்ன? அடிப்படையில் ஒரே ஒரு காரணம் இருக்கிறது. அது, சீமான் மற்றவர்களைப் போல திராவிட அரசியல் செய்யாமல், இல்லாவிட்டால் தமது அமைப்புக்கு திராவிட என்று அடையாளத்தை ஏற்படுத்தாமல் ‘நாம் தமிழர்' என்று தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதுதான். இது இவர்களுக்கு ஒருவித சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திராவிட அரசியலை எதிர்கொள்வதென்பது மிக எளிதான ஒரு செய்தியாக இவர்களுக்குள் இருக்கும். முல்லைப் பெரியாறு என்றால் கேரள மாநிலம் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டை இவர்கள் ஆதரிப்பார்கள். காவிரிப் பிரச்சனை என்றால் கர்நாடகம் எடுக்கும் அரசியல் தத்துவம் தான் இவர்களின் தாரக மந்திரம். பாலாறுப் பிரச்சனை என்றால் ஆந்திராவின் அரசியல் முழக்கமே இவர்களின் கொள்கை முழக்கம். ஆக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தாம் இந்திய தேசியத்தின் அடையாளம் என்று தம்மைக் குறித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

சீமானுக்கு அந்த அவசியம் கிடையாது. சீமான் தமிழ்நாட்டைத்தாண்டி அரசியல் செய்யவேண்டிய கட்டாயத்தில் இல்லை. சீமானுக்கு வேண்டியது தமிழ், தமிழினம், தமிழ்த் தேசியம். ஆக தமிழர் நலன் குறித்தே சீமானின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன. இதில் வியப்பதற்கோ, குறை சொல்வதற்கோ எதுவும் இல்லை. எந்த ஒரு தேசிய இனமாக இருந்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுப்பதென்பது இயற்கை. திராவிட அரசியலால் தொலைந்துபோன தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க சீமான் முனைப்பு காட்டுவது இவர்களுக்கு மூக்கின்மேல் வியர்க்க செய்கிறது. காரணம் 1967களுக்குப் பிறகு தோன்றிய எல்லாக் கட்சிகளும் தமக்கான அடையாளமாக திராவிடம் என்ற பெயர் சூட்டிக் கொள்ளும்போது, சீமான் மட்டும் தனித்து நாம் தமிழர் என்ற அடையாளத்தை பெற்றுக் கொள்வது தமிழர்களை ஒருங்கிணையச் செய்துவிடாதா என்கின்ற எண்ணம் இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது. தமிழ்த் தேசியவாதிகள் என்று இவர்கள் யாரையெல்லாம் குறிப்பிடுகிறார்கள்?

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பழ.நெடுமாறன், தோழர் தியாகு, தோழர் பெ.மணியரசன், அண்ணன் கொளத்தூர் மணி மற்றும் சீமான் போன்றவர்களைத்தானே. இவர்கள் எந்த காலத்திலாவது தமது தேசிய அடையாளத்தைக் காட்டி யாரிடமாவது பயனடைந்திருக்கிறார்களா என்பதை அவர் சுட்டிக்காட்ட தவறியிருக்கிறார். மாறாக பல்வேறு துயர்களுக்கும், சிறைக் கொடுமைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கான எண்ணம் மிகத் தெளிவாக இருக்கிறது. அது தமிழ்த் தேசியம். தமிழனுக்கென்று ஒரு அடையாளம். இதில் அவர்கள் பின்வாங்கவில்லை. இதில் கருத்துக்கூற அவர்கள் தயங்குவதும் இல்லை. தோழர் தியாகு ‘சமூக நீதி தமிழ் தேசம்' தை 2009 இதழிலே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒருசில நண்பர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொன்னாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வணக்கம் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோமே தவிர இந்திய இறையாண்மையை எதிர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்து கொள்கின்றனர். இவர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்திய இறையாண்மை என்பது தமிழ்த் தேசிய இறையாண்மையை மறுப்பது ஆகும். தமிழ்த் தேசியத்தின் அரசியல் சாரம் தமிழ்த் தேசிய இறையாண்மையை மீட்கப் போராடுவதே ஆகும். மேலும், இந்திய குடிமக்களாக இருப்பதாலேயே இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எதுவுமில்லை. ஒரு மாற்றுக் கருத்து என்ற அளவில்கூட இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறுக்கத் துணியாதவர்களை தமிழ்த் தேசியத்தில் மெய்யான அக்கறை கொண்டவர்கள் என்று நம்புவது கடினமாய் உள்ளது. நமது தமிழ்த் தேசியம் என்பது இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறுதலித்து, தமிழக இறையாண்மையையும் தமிழ் தாயகத்தையும் மீட்கப் போராடுவது ஆகும். தமிழகம் தொடர்பாகவும் சரி, தமிழீழம் தொடர்பாகவும் சரி, இந்திய மயக்கம் நமக்கில்லை.”

ஆக, நாம் இந்திய மயக்கமற்று இருக்கின்ற காரணத்தினால் தமிழ்த் தேசியம் என்கிற அடித்தளத்தில் மிகச்சரியாக பயணிக்கிறோம். மேலும் தோழர் கூறும்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக சமர் செய்தீர்களா? கோக் உறிஞ்சி எடுத்த தண்ணீருக்கு எதிராக போர் செய்தீர்களா? வேலையில்லா திண்டாட்டத்திற்கெதிராக என்ன செய்தீர்கள்? கேரள மக்கள் தமிழ்நாட்டில் ஏரளமான நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். அதற்கு ஆதரமில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வைத்திருக்கிறார். மிக நன்று.

ஒன்று தெரியுமா? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலே தமிழர்கள் எத்தனை விழுக்காடு வாழுகிறார்கள் என்று. அப்படி தமிழர்களாக வாழ்பவர்களும் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. காரணம் வர்க்கப் பார்வையில் எல்லோரும் சமமானவர்கள்தான். ஆனால் சொந்த மண்ணில் ஒரு தேசிய இனம் வேறொரு இனத்தின் வேலைக்காரனாக வாழ்வதென்பது எந்தவிதத்தில் நியாயம் என்று அவர் புரிய வைக்கவில்லை. நாம் தமிழர் இயக்கம் தோன்றி ஒரு ஆண்டுதான் கடந்திருக்கின்றது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நடத்தும் நமது தேசியவாதிகள் இதுவரை வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பன்னாட்டு நிறுவனத்தின் அத்துமீறல், இந்தியா முழுக்க பன்னாட்டு மயமாக்கிய கொடுமை இவைகளுக்கெதிராக எத்தனை முறை களம் அமைத்தார்கள்? எத்தனை முறை சிறை சென்றார்கள்? இதில் எத்தனை வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஏன் எடுத்துரைக்கவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

காரணம் நாங்கள் இவ்வாறு பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி இதையெல்லாம் தீர்த்து வைத்திருக்கின்றோமே, அப்போதெல்லாம் நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டீர்கள். இப்போது வந்திருக்கிறீர்களே, என்று கேள்வி கேட்பது நியாயமாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும், எதிர்மறை தன்மைகளையும் பதிவு செய்திருக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைத்தவிர்த்து செயராம் வீட்டின்மீது நடந்த தாக்குதல் ஏதோ மிகப்பெரிய தாக்குதலைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முனைப்பு காட்டுவது ஏனென்று நமக்கு விளங்கவில்லை. இதே போன்றுதான் சுப்பிரமணிய சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டைக்குப் பின்னால் மிகப்பெரிய கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பை தயார் செய்கிறார்களோ என்கிற சந்தேகம்கூட நமக்கு ஏற்படுகிறது.

ஒரு இனத்தை கேவலப்படுத்துவதுகூட ஒருவித பாசிசம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் இயக்கம் என்பது தொடக்க நிலையில் இருக்கிறது. இன்னும் அது பல்வேறு படிமங்களை தாண்டி பயணிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியலை தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. தேவையைப் பொறுத்தே அரசியல் தீர்மானிக்கப்படுவது இயற்கையானது. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியத்திற்கான தேவை குறித்து விவாதித்து, முடிவெடுத்து அதை அரசியல்படுத்த நாம் தமிழர் இயக்கத்திற்கு காலக்கெடு தேவை. தொடங்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாக செயராம் வீட்டின்மேல் கல்லெறிந்து விட்டதற்காக இப்படி கலவரப்படுவது காரணமில்லாமலா என்கிற சந்தேகம் தோன்றுவது இயற்கைதானே.

இறுதியாக தோழர் குறிப்பிட்டதைப்போல சோறும் நீரும் விற்பனைக்குரியவை அல்ல என்பது ஏற்புடைய வாழ்த்துக்குரிய வரிகள்தான். அதை மறுதலிக்கவோ, மறுத்துரைக்கவோ முடியாது. இந்த கேட்டை கோட்டைக்குள் விட்டது இந்திய தேசியத்தின் முதலாளிகளின் கைக்குட்டைகள்தான் என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு, ஏதோ தமிழர்கள்தான் இத்தீச்செயலை செய்ததைப்போல வர்ணிக்கிறார். முதலாளித்துவம் என்பது வர்க்க நலம் காப்பதல்ல. மாறாக தேசிய இனங்களை ஒடுக்குவது. தேசிய இனங்களை அழிக்க முனைப்பது. ஆக முதலாளிகளின் பண்பாட்டு முகமாக யார் முகம் தெரிகிறது என்பது அவர் வார்த்தைகளிலேயே தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

கண்மணி -editormanudanambikkai@yahoo.in

Comments