குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்....

பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை யின் மாநாட்டில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் பங்குகொண்டமை இலங்கை அர சாங்கத்தைச் சீற்றமுற வைத்துள்ளது. அது மாபெரும் குற்றம் என்றும் மில்லிபான்ட் தெரிவித்த கருத்துக்களை இலங்கை அரசு காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சரவையின் புதிய பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

மில்லிபான்டின் கருத் துக்கள் இலங்கையின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர் கண்டித்துள்ளார்.

தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அமைச்சர் பீரிஸ், பிரிட்டிஷ் அமைச்சர் மில்லிபான்ட் மீது குற் றப் பத்திரிகை நீட்டோலை ஒன்றையே வாசித்திருக்கிறார்.

அமைச்சர் மில்லிபான்ட் உலகத் தமிழர் பேரவைக் கூட்டத்தில் பங்குபற்றியது முதலாவது குற்றம் என்று தொடங்கி, அவர் மீதான குற்றப் பத்திரிகையை வெளிப் படுத்தி உள்ளார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

உலகத் தமிழர் பேரவை என்பது இலங்கையைக் கூறு போடவும், இந்த நாட்டை அழிக்கவும் செயற்படும் இயக் கம் என்று சுட்டிக்காட்டி அதன் மாநாட்டில் மில்லிபான்ட் பங்கு பற்றியமை இலங்கையின் இறையாண்மைக்கு எதி ரானது என்றும் பீரிஸ் மிகக் காட்டமாகக் கருத்து வெளி யிட்டிருக்கிறார்.

மேலும் பிரிட்டிஷ் அரசு இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது; பிரிட்டனுடனான ராஜீக உற வைத் துண்டிக்கும் அளவுக்கு மில்லிபான்ட் செயலிலும் சொல்லிலும் எல்லைமீறி இருப்பதாக இலங்கை கருது வதாக பீரிஸ் சொற்களுக்கு இடையில் கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு எதிராக, இந்த நாட்டின் அரசுக்கு எதிராக, பிரிட்டிஷ் அரசு செயற்பட்டுள்ளது. அதனால் அந்த நாட் டுடனான ராஜீக உறவைத் துண்டிக்கும் நிலைகூட ஏற் படலாம் என்ற எச்சரிக்கைத் தொனியில் பேராசிரியர் பீரிஸ் ஊடகவியலாளர் மாநாட்டில் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

இது பிரிட்டிஷ் அரசுக்கு இலங்கை விடுக்கும் ஒரு ராஜீக "வெருட்டல்' என்றே கொள்ளவேண்டியதாகும். டூ பத்து மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான எனது விஜயத்தின்போது, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கியி ருந்த முகாம்களுக்குச் சென்றேன். அந்த மக்களின் முகங் களையும் அவர்கள் கூறிய கதைகளையும் என்னால் மறக்கமுடியாது.
  • இலங்கையின் ஏனைய மக்கள் போன்று தாமும் கௌர வமாக வாழ விரும்புவதாக அவர்கள் கூறினார்கள். அந்த மக்களின் உள்ளத்தில் இருந்து உதித்த அபிலாஷையே என்னையும் எனது அரசையும் இது விடயத்தில் முன் னோக்கி நகர்த்தத் தூண்டியது.
  • இலங்கை ஜனாதிபதி தமக்குக் கிடைத்துள்ள புதிய மக்கள் ஆணையை தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வும், அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரவும் பயன்படுத்த வேண்டும்.
  • இலங்கையை புதிய அரசியல் தீர்வு மூலமே கட்டி எழுப்ப வேண்டும். அதன் எதிர்காலம் குறித்துக் கவலைப் படும் எவரும் நிதி உதவியால் மட்டும் அதனைக் கட்டி எழுப்ப முடியாது. என்பவை அமைச்சர் மில்லிபான்ட் உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் முன்வைத்த கருத்து மோதகத்தின் உள்ளுடல் போன்றவை.

ஆக, அமைச்சர் மில்லிபான்ட் தெரிவித்த கருத்துக்கள் எந்தவகையில் இலங்கையின் இறையாண்மைக்குப் பங் கம் விளைவிப்பவையாக பேராசிரியர் பீரிஸையும் இலங்கை அரசாங்கத்தையும் சீற்றமுற வைத்தது என்பது துலக்கமா கப் புரியவில்லை.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகுறித்து, பிரிட் டிஷ் வெளிநாட்டு அமைச்சர் கூறும் நியாயமான கருத்து எவ்வாறு அதன் இறையாண்மையைப் பாதிக்கும் என்று பேராசிரியரும், இலங்கை அரசும் இது குறித்துப் புதிதாக "அகராதி' ஒன்றைத் தயாரித்துள்ளனரோ, என்னவோ?

உலகம் மிகச் சுருங்கிவரும் இப்போதைய நவீனத்து வங்களுக்கு மத்தியில், ஒரு நாட்டில் வாழும் மக்களின் நலன்மீது, மனிதாபிமானத்தின் பெயரில், ஜனநாயக விழுமியங்களின் பாற்பட்டு கருத்துக்கூறமுடியாது என்று வரைவிலக்கணம் எதுவும் இல்லை.

சிங்கள அரசுகளும், தமிழ் அரசுகளும் தனித்தனியாக இந்த நாட்டில் கோலோச்சித் தனித்துவங்களுடன் வாழ்ந்த இலங்கையரை ஆக்கிரமித்து, காலனித்துவ ஆட்சியைத் திணித்து புதிய கால மாற்றத்தை அனுசரித்து ஒரே நாடாக மாற்றியது பிரிட்டனே.

அந்தவகையில், இலங்கையில் இப்போது நடைபெறும் விவகாரங்கள் குறித்துக் கருத்துக் கூறும் உரிமை வேறு எந்த நாடுகளையும் விடப் பிரிட்டனுக்கு அதிகம் உண்டு என்பது குதர்க்க வாதம் அல்ல.

அது ஒரு புறமிருக்க, எந்த நாட்டிலும் இன ஒதுக்கலுக் கும் அடக்குமுறைக்கும் மனித உரிமைமீறல்களுக்கும் ஆளாகும் மக்களுக்காக அடுத்த நாட்டவர்கள் குரல் கொடுப்பது இப்போதைய உலகப் பொதுவழக்கு.

அவ்வாறிருக்க பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து, இலங்கையின் இறையாண்மையில் தலையிடு வது என்று சொல்வது எந்தவகையிலும் ஏற்புடைத்து அல்ல.

காமாலைக் கண்ணணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல இலங்கை அரசும், அதன் அமைச்சரும் பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்துகளைப் பார்த்தால், நோக் கினால் யார் என்ன செய்யமுடியும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதன் அர்த்தமும் இங்கே மிகப் பொருந் துகிறது. தமிழ் மக்களுக்குரிய பிறப்புரிமைகளை, அவர் களின் பிரிக்கமுடியாத அரசியல் உரிமைகளை வழங்கி னால் இந்தக் குறுகுறுப்புகள் நீங்கியும், நீர்த்தும் போய் விடும் அல்லவா?

நன்றி - உதயன்

Comments