ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?


தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்காலுடன் முழுவதும் முடிந்தது என எண்ணியிருந்த தமிழின எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும், மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, தங்கள் கனவுகள் ஏன் நிறைவேறவில்லை என விறைத்துப்போய் உள்ளனர். “விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் அத்துடன் தமிழீழக் கொள்கையும் சமாதியாகிவிட்டது” என இவர்கள் நப்பாசையில் மூழ்கியிருந்து, இன்னும் மீளமுடியாது தடுமாறுகின்றனர்.

1976-ன் வட்டுக்கோட்டைத் தீர்மானமும், 1977-ல் அதனை உறுதிபடுத்திய பிரகடனமும் தமிழரின் 30 வருடத் தியாகத்தின் வெளிப்பாடான விடுதலைப் போராட்டத்தின் மூலமும், எல்லாவற்றிற்கும் மேலாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் புலம்பெயர்ந்த மக்கள் 99 விகிதமும் ஆமோதித்ததன் மூலமும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாட்சை தமிழீழமே என்பதை, அவர்கள் எங்கிருந்தாலும் வெள்ளிடை மலையாக எடுத்துக்காட்டியுள்ளன.

ஆனால், இந்தியாவானது இத்தகைய ஒரு சுலபமான அரசியல் பிரச்சனையைப் பூதாகாரமாக்கித் தமிழரை அழிப்பதோடு அல்லாது தனது இறையாண்மைக்கும், மண்ணைத் தூவுவது பரிதாபத்திற்குரியதாகும். ஈழத்தமிழர்கள், தமது படைத்திறனைத் தற்காலிகமாக இழந்திருக்கலாம். ஆனால், அவர்கள் தமது தியாக மனப்பான்மையையோ, கொள்கைகளையோ, வீரத்தையோ இழந்துவிட்டார்கள் என்று எவரும் துணிந்து கூற முடியாது.

இலங்கையிலிருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசவோ, தீர்மானிக்கவோ இந்தியாவிற்கு ஏதாவது அருகதை உண்டா? என்பதே தற்போது நோக்க வேண்டிய முக்கியமான கேள்வி. இந்தியா தனது இராணுவ பலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் மீது டம்பப் பேச்சில் இறங்கலாம். ஆனால் அமைதிப்படைகளின் கதை என்னவென்று சற்று யோசித்தால் இப்படிப்பட்ட வீம்புப்பேச்சுக்கு இடம் வராது என இந்தியா அறியும். கூர்மையாக ஆராய்ந்து நோக்கின், இலங்கை அரசு ஒரு போதும் இந்தியாவிற்கு ஒரு நட்பு நாடாக நடக்கவில்லை. முன்பு நடந்த சீனா-இந்திய போரிலோ, இந்தியா-பாக்கிஸ்தான் யுத்தத்திலோ அல்லது தற்போதைய இலங்கை-சீனா உறவிலோ இந்தியாவின் நண்பன் போல இலங்கை அரசு நடக்கவில்லை. இந்தியப் பிரதமர் இராஜிவ் காந்தியை மரியாதை அணிவகுப்பின் போது தாக்க முயன்ற இலங்கைச் சிப்பாய்க்கு பதவி உயர்வு வழங்கியது எவ்வழியில் நியாயமாகும்?

ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் இத்தனைக்கும் மேலாக இந்தியா அவர்களின் நல்வாழ்க்கையை எப்போதாவது மனதிற் கொண்டதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இந்தியாவின் பார்ப்பன அதிகாரம், அடிப்படையாகவே தமிழினத்தின் பரம எதிரியாக நடந்தது போலவே முன்னைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதுபற்றி எழும் கேள்விகள் பல.

1. ஒரு இலட்சம் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்த போது இந்தியா அதுபற்றி மூச்சு
விட்டதா?
2. சிரிமாவோ–சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின் இலங்கையில் தங்கிய மலையகத் தமிழர்களில் 60
விகிதமானோர் அதன்பின்பும் பிரஜா உரிமை மறுக்கப்பட்டது பற்றி இந்தியா கவலைப்பட்டதா?
3. 1958 முதல் 1983 வரை தொடர்ந்து நடைபெற்ற அரசின் ஆதரவுடன் தமிழருக்கு எதிராக
அரங்கேற்றப்பட்ட இனக்கலவரங்களைப்பற்றி என்றேனும் கவலை கொண்டதா?
4. தமது உரிமைகளுக்காக அறவழியில் நின்று இலங்கை அரசுடன் சத்தியாகிரகப் போராட்டம்
நடத்திய போது தமிழத்; தலைவர்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டதை எப்போதாவது
கண்டித்ததா?
5. இராஜிவ்காந்தி-ஜெயவர்த்தனா (தமிழ் மக்களின் சம்மதம் பெறாது) அரங்கேற்றிய
ஒப்பந்தத்தைக்கூட நிறைவேற்ற முடியாத இந்திய வல்லரசின் வெட்கக் கேடான நிலைப்பாட்டை
தமிழ் மக்கள் மறப்பார்களா?
6. சிங்கள பௌத்த அரசின், அரச பயங்கரவாதத்திற்கெதிராக, அறவழிப்போராட்டம் தோல்வி உற்ற
நிலையில், தமிழ் மக்கள் நடாத்திய ஆயுதப் போராட்டத்தை அடக்கும் நோக்குடன் சிங்கள
பௌத்த அரசுக்கு ஆயுத, படைபல, போர்த்தந்திர வகைகளின் உதவி செய்ததின் மூலம் தமிழ்
மக்களுக்கு இழைத்த துரோகத்தை மறக்க முடியுமா?
7. ஐ.நா சபையிலும் மற்றும் இராஜதந்திர அரங்குகளிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு
மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் ஆகியனவற்றை மேற்குலக நாடுகள்
மும்மொழிந்த போதும் அதை எதிர்த்து நின்ற துரோகச் செயலை மறக்க முடியுமா?
8. 50,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு 3 இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள்
அடைக்கப்பட்டு, கொலை சித்திரவதை, கற்பழிப்பு, காணாமற் போதல் ஆகியனவற்றுக்கு
உட்படுத்தப்பட்டதைக் கண்டிக்கும் தமிழ் ஆர்வலர்களை மிரட்டியதை மறக்க முடியுமா?
9. ஈழப் போராட்டம் ஆரம்பித்தக் காலத்தில் இருந்து இந்தியக் கடலில் இதுவரை 500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழக மீனவர்கள், அவர்கள் தமிழர்கள் என்றக் காரணத்தால், இலங்கை சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகாயபடுத்தப்பட்டும், அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவில் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்திய போதும்கூட, அதற்காக இந்திய மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?


1948 முதல் இன்றுவரை இந்தியா எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழினத்திற்கு எதிரானதே அன்றி ஒருபோதும் சார்பாக அமையவில்லை. இந்திரா காந்தி காலத்தில், இந்திரா காந்தி அம்மையார், அமெரிக்க வல்லரசுடன் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஏற்படுத்திய வெளிநாட்டுக் கொள்கையால் சினமடைந்து, அவருக்குப் பாடம் புகட்டுவதற்கே தமிழ் ஆயுதக் குழுவைத் தயார்படுத்தினாரே அன்றி, தமிழரின் நன்மை கருதி அல்ல. ஏனெனில், இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில், தமிழீழம் ஒருபோதும், உள்ளடக்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.

எனினும், அப்துல் ரகுஃபில் தொடங்கி முத்துக்குமார் முதல் வெங்கடேசன் வரை ஈழத்தமிழருக்கு எதிரான போரை நிறுத்தும்படியும், இந்தியாவின் தமிழருக்கெதிரான நிலைப்பாட்டைக் கண்டித்தும் தம்மைத்தாமே தீக்கிரையாக்கிய 18 தியாகிகளைப் படைத்த தமிழகத்தை நாம் குறைகூற முடியாது. 120 கிலோமீட்டர் தொடரில், மனித சங்கிலிக் கோப்பாக நின்று தமது உணர்ச்சி வெள்ளத்தை மடை திறந்த வெள்ளம் போல தமிழக தமிழ் மக்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக, சுயநலமும், ஊழலும் மிக்க தலைமைகளால் சென்னையிலும் டில்லியிலும் தமிழரின் அரசியல் கோரிக்கைகள், புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அற்பர்கள் அரசியலில் இருக்கும் வரை தமிழ் மக்கள் தமக்கு நலன்சார்ந்த தீர்வுகளை என்றும் எதிர்பார்க்க முடியாது. மேலும், அவர்கள் தமது பாராமுகப்போக்கைத் தமிழ் மாநாடுகள் நடத்துவதன் மூலம் தற்காலிகமாக மூடி மறைக்கலாம். இத்தகைய கோடரிக்காம்புகளைத் தமிழ் மக்கள் இனம்கண்டு அவர்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும். தமிழரின் போராட்டங்களுக்குப் பாரிய அளவில் நிதி தேவைப்படும் நிலையில், இத்தகைய துரோகிகளால் நடத்தப்படும் ஊடகங்களையும், தயாரிக்கப்படும் படங்களையும் ஆதரிப்பதன் மூலம் வருடந்தோறும் 2000 கோடி ரூபாய் அவர்களுக்குச் சென்றடைகிறது என்பதை உணர்ந்து அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்..

ஈழத்தமிழர்கள், இந்தியாவின் தவறான வழியில் செல்ல முயலும் அபேட்சகர்களைப் புறந்தள்ளி, தமிழீழமே தமது தீர்வு என முழங்கும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். நேர்முகமாக, இலங்கையின் அரசியல் யாப்பின்கீழ் தமிழீழமென வெளிப்படையாகக் கூற முடியாத நிலைமையில், தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்னும் அடிப்படையில் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். தமிழர் தாயகம் என்று கூறுவதன் மூலம் சிங்களக் குடியேற்றத்தை நாம் எதிர்ப்பதாகும். ஒரு நாடு இரு தேசம் என்பது, சட்டரீதியான கோரிக்கையாக உள்ளதால், இந்த இலட்சியத்தை நோக்கி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உறுதியாகப் போராடும். தமிழ் மக்கள் வெளிப்பகையை வெல்லும் முன் தம் உட்பகையைத் தெரிந்து களைய வேண்டும்.

உலக அரசியல் அரங்கில் தற்போது இந்தியா இலங்கை, மேற்குலக நாடுகளின் நிலைமையை நோக்கின் எமது பாதையில், சிறிதளவு வெளிச்சத்தைக் காணமுடியும். விடுதலைப் புலிகளின் போரினால், இலங்கை சந்தித்த பேரழிவைச் சீனாவால் அன்றி வேறொரு நாடுகளினாலும் ஈடு செய்ய முடியவில்லை என்பது உலகறிந்த உண்மை. இதன் பயனாக இலங்கை அரசு (இராஜபக்சேயும் அவரின் அடி வருடிகளும் உட்பட) சீனாவின் “கொத்தடிமை” என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன்விளைவாக, இந்து சமுத்திரமும் சீனாவின் ஆளுமைக்கு உட்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது இந்தியாவின் இறைமையின் பாதுகாப்பையும் அல்லாது, ஆபிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியா வரை உள்ள கடல் மார்க்கத்தையும் ஆழமாகப் பாதிக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் பாரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி நடைபெற்றுவரும் இவ்வேளையில், பொருளாதார மேலாதிக்கத்தை அடைந்திருக்கும் சீனா, அதே மேலாண்மையைக் கடல் ரீதியிலும் அடைவது, மேற்கு நாடுகளில் பாரிய மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். அத்தோடு, சீனாவுக்கு (முன்பிருந்த புவியியல் ஆதிக்க பகைமையுடன்) தற்போது பொருளாதாரத் துறையிலும் இந்தியா ஒரு போட்டியாளராக வரும் வாய்ப்பு உள்ளது. இதை மடக்கச் சீனா தருணம் பார்த்து நிற்கின்றது எனக்கூறினால் அது மிகையாகாது. தற்பொழுது சீனா, இந்தியாவைச் சூழ்ந்த மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் காலூன்றி இருப்பது, இந்தியாவிற்கு “எதிர்பாராத” அச்சுறுத்தலாகும்.

மேற்கூறிய நிலையில், இந்தியா இதுவரை தொடர்ந்து முன்னெடுத்தது போல, இராஜபக்சே அரசை தன்வசம் கொண்டு வந்தால் சில சமயம் இப்பிரச்சனையை “ஒரளவு” தீர்க்கலாமென ஒரு நப்பாசையுடன் உள்ளது. இயற்கையாகவே, பார்ப்பன ஆதிக்கத்தில் தமிழ் துவேஷத்துடன் இயங்கும் இந்தியாவிற்கு, இத்தகைய அழுத்தம் அதை முற்றாக திசை மாற்றி, ஒரு பித்த நிலைக்கு இழுத்துச் செல்வதைக் காணலாம். தற்போது, இந்தியாவானது ஈழத்தில் (தனது இராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையும் உதாசீனம் செய்துவிட்டு) வடக்கு கிழக்கு என இரண்டாகக் கூறுபோட்டு அதில் தானும் இராஜபக்சேவும் விரும்பும் ஓர் அரைகுறைத் தீர்மானத்தைத் தமிழ் மக்கள் மேல் திணித்துப் பின் “ஈழத்தமிழர்கள் ஜனநாயக வழியில் தீர்வை அடைந்து விட்டார்கள். இனித் தமிழீழம் என்பது ஓர் பழைய கதை” என்று பறை சாற்றுவதன் மூலம், உலகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒருங்கே ஏமாற்றலாம் என எண்ணுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவும் உலகத் தமிழரும் ஒருங்கே யோசிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் இன்னும் காத்திருக்கின்றன. சமீபத்தில் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் எனும் ஆராய்ச்சியாளர் தமது கட்டுரையில் கூறியது போல் “டில்லியின் இலங்கை இந்திய கொள்கைகள், இன்னும் திசை தெரியாது ஒரு பேராபத்தை விளைவிக்கக்கூடிய செங்குத்துச் சரிவை நோக்கிச் செல்கின்றன”. ஆயிரக்கணக்கான புத்திஜீவிகளும், தமிழறிஞர்களும், கோடிக்கணக்கான தமழ் உணர்வாளர்களும் தமது தாய் நாட்டை இத்தகைய அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

மேல்வாரியாக நோக்கும்போது, இக்கண்ணோட்டம் தமிழர்களை மட்டும் ஆதரிப்பது போல் தோன்றினாலும், அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இது ஒன்றே ஏற்ற வழி என்பதுதான் கசப்பான உண்மை.

தர்க்கபூர்வமாக ஆராயின் இன்று இலங்கை இராஜபக்சேவின் கட்டுப்பாட்டிலா அல்லது சீனாவின் கட்டுப்பாட்டிலா உள்ளது என்பதை நோக்க வேண்டும். கச்சதீவிலும், பாலதீவிலும் அத்துடன் வவுனியாவிலும் சீனாவின் இருப்பு புற்று நோய் போல் பரந்திருப்பது எமக்கு ஒரு பதிலை உணர்த்தும். இந்தியா, இராஜபக்சேயை தன்வயப்;படுத்துவதால், சீனாவை அகற்ற முடியுமா? துரதிர்ஷ்டவசமாக, உண்மையான நிலை யாதெனில், இராஜபக்சே இலங்கையைச் சீனாவிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். இதிலிருந்து முற்றாக மீள்வது, பகீரதப் பிரயத்தனம் ஆகும். ஆனால், வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரித்து தமிழீழம் என ஒரு நாட்டை அமைத்தால், அதையாவது இந்தியா தனக்குச் சார்பான நிலைப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஒரு சிறுவாய்ப்பு உண்டாகலாம். மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ இதைவிட வேறு வழி இருப்பதாகத் தற்போது கூற முடியாது.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் குறள்:435

துன்பம் வருவதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்தத் தெரியாதவனின் வாழ்க்கையானது, நெருப்புக்கு முன்னே போடப்பட்ட வைக்கோற போர் அழிவது போன்றது.

இந்தியா இத்தகைய ஆதரவிற்குத் தன்னைத் தயார்படுத்த வேண்டும். முதற்படியாக ஈழத்தமிழர்கள், தமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அழிவுகள், சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள், காணாமற்போதல் ஆகிய கொடுமைகளுக்கு எதிராக நிகழ்த்தும் போராட்டங்களுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுடன் இணைந்து மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனஅழிப்பு ஆகிய இலங்கை அரசின் மேல் நடாத்தும் வழக்குகளுக்கு உலகரங்கில் பூரண ஆதரவை வழங்க வேண்டும். இது ஒரு சிறியளவில் கணிப்பிடக்கூடிய பிராயச்சித்தம் எனக் கூறலாம்.

- பண்டார வன்னியன்

Comments