சுதந்திரமாகப் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை, ஊடக பலமும் இல்லை: மணிவண்ணன்

பொதுத் தேர்தலுக்கான பரப்புரை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாது இருப்பதாகவும், தமது தேர்தல் பரப்புரைக்கு தாயகத்தில் ஊடக பலம் இல்லை எனவும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்டத்திற்கான இளம் வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கொள்கை சார்ந்த கட்சிகள் யாழ் தீவகத்திற்குச் சென்று பரப்புரையில் ஈடுபடுவதற்கு துணைப்படை ஈ.பி.டி.பி குழுவினர் தடை விதித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடு எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதை அவதானித்த பின்னர், அது பற்றி அகில இலங்கைத் தமிழ் காங்கிரசுடன் பேச்சு நடத்தச் சென்றபோது, தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டதாகக் கூறும் இவர், கடந்த மாதமே தனது சட்டத்துறைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கின்றார்.

உதயன், சுடரொளி போன்ற பத்திரிகைகளின் அதிபர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதால், இந்தப் பத்திரிகைகள் அந்தக் கட்சிக்கு சார்பான விடயங்களை மட்டும் ஏழதி வருவதுடன், சில வேளைகளில் எதிரான பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றன.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் சில இணையத்தளங்களும் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் தாங்கள் மனம் தளராது மக்கள் மத்தியில் இறங்கி பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், தமது கொள்கை விளக்கத்தினைச் செவிமடுத்த மக்கள் தெளிவைப் பெற்றிருப்பதாகவுமு, இன்று (புதன்கிழமை) காலை பருத்தித்துறையில் பரப்புரையில் ஈடுபட்ட மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருக்கும் சிலர் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments