தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை!


பாவத்தின் சம்பளம் மரணம்' என்கிறது கிறிஸ்தவம். 'இந்திய பாவத்தின் சம்பளம் பயங்கரவாதம்' என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் 'லக்சர் ஈ தொய்பா' ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்களை ஏமாற்றியது. இந்தியா எங்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. இந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்தது. இந்தியா எங்களை அழித்தது. இந்தியா எங்களை அவமானப்படுத்தியது என்ற மனப் பதிவுகளுடன் இந்திய எதிர்ப்பு இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் 'பாவத்தின் சம்பளம்' ஆகவே ஈழத் தமிழர்கள் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர். முன்னைய காலம் போல், இந்தியக் கால்களில் காயம் பட்டால், ஈழத் தமிழர்களுக்கு நெறி கட்டும் என்ற நிலை முற்றாக மாற்றம் பெற்றுவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று நொருக்கப்பட்டு பயங்கரவாத முத்திரையுடன் அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை.

இந்தியாவின் தெற்குப் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு அரணாக இருந்த தமிழீழ மக்கள் இந்திய சதிக்கு இரையாகி, முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் செல்லப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து கொள்வதற்கான பகடைக் காய்களாகப் பலி கொள்ளப்பட்ட தமிழீழ மக்கள் இந்தியத் துரோகங்களை வேதனையுடனும் கோபத்துடனும் பதிவு செய்து வருகின்றார்கள். இந்தியாவை நிராகரிக்கவும், மறந்துவிடவுமே தமிழீழ மக்கள் விரும்புகிறார்கள்.

அந்நியர் காலடி படாத தமிழீழ மண் சிங்களக் காலடிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களது தேசிய நினைவுகள் எல்லாம் சிங்களத்துக் காடைத் தனங்களுக்கு இரையாகி வருகின்றது. முன்பெல்லாம், மதவாச்சி தாண்டி இருக்கைகளில் அமர்ந்து தொடரூந்தில் பயணித்த தமிழர்கள் வலு கட்டாயமாக எழுந்து நிற்கப் பணிக்கப்பட்டு, இடையில் ஏறும் சிங்கள இனவாதிகள் அமர்ந்துகொள்ளும் அவலக் கொடுமைகள் இப்போது தமிழர் இல்லங்கள் தேடிக் கதவைத் தட்டுகின்றது. 'இந்தப் பெரிய வீட்டில் நீங்கள் மூவர்தானே குடியிருக்கிறீர்கள். தெற்கிலிருந்து வந்துள்ள எங்கள் மக்களும் இங்கே சில நாட்கள் தங்குவார்கள்' என்ற பதில் எதிர்பார்க்காத அச்சுறுத்தல்களோடு சிங்களப் படையினரால் சிங்கள மக்கள் குடியமர்த்தப் படுகின்றார்கள். 'ம்' என்று சொன்னால் காணாமல் ஆக்கப்படும் அவலங்களுக்குள் அவர்கள் குடியிருந்த வீட்டை சிங்களவர்களுக்கு வழங்கிவிட்டு அயல் வீடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

என்னதான் நடக்கிறது யாழ் குடாநாட்டில்? எல்லா அக்கிரமங்களும் கண்முன்னே நடந்தாலும் எதிர்த்துக் கேட்க மக்களிடம் மனோ பலமும் இல்லை. அவர்களுக்காக உரத்துக் குரல் எழுப்ப அரசியல் தலைமைகளும் இல்லை. வாக்கு வேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ள தேசியக் கூட்மைப்பு இப்போதும் 'எங்கள் தேசத்தின் அவலங்கள் இந்தியாவால் தீர்க்கப்படும்' என்று கூசாமல் சொல்கின்றார்கள். 'பாவம், இவர்களும் எம்மிடம் ஒரு வாய் இரத்தம் குடிக்கப் பேயாய் அலைகிறார்கள்' என்று நொந்து கொள்வதைத் தவிர அந்த மக்களுக்கு வேறு வகை எதுவும் இல்லை. வாக்குக்கள் போட்டு அனுப்பி வைத்தால், அடுத்த முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்வார்கள் என்பது ஈழத்து மக்கள் அனைவரும் புரிந்தே வைத்துள்ளார்கள்.

இந்த இலட்சணத்தில், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு ஒரு துணைத் தூதரகம் அமைக்கும் பணியும் நடைபெறுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம் யாழ். நகரில் கடை விரிக்க, அதே நாளில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இடித்துத் தரைமட்டம் ஆகிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. இதுவும் இந்தியப் பின்னணியில் நடந்தேறியதாக ஈழத் தமிழர்கள் நம்புகிறார்கள். அதனால்தான், இந்திய வளர்ப்புக்கள் தமது கண்டனங்களைக்கூடப் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கிழக்கை தமிழர்கள் இழந்து விட்டார்கள். வடக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் கைப்பற்றுவதற்கு இந்தியா எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. கூட்டமைப்பு வென்றால் மட்டுமே இந்திய இருப்பு இலங்கைத் தீவில் நிலைப்படும். தெற்கே பலமாகப் பதிந்துவிட்ட சீனப் பாதங்கள் வடக்கே நிலை கொள்வதைத் தடுக்க வேண்டிய அவல நிலை இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றே ஆக வேண்டும். அப்படி வென்றுவிட்டால், புதிய வரதராஜப் பெருமாளாக சம்பந்தர் அல்லது கூட்டமைப்பின் மும்மூர்த்திகளில் ஒருவர் முடிசூட்டப்படலாம். அதன் பின்னர், பிரேமானந்தாக்களும், நித்தியானந்தாக்களும் ஆச்சிரமக் கிளைகள் அமைத்து ஈழத்துப் பெண்களுக்கு ஆசி வழங்குவார்கள். திவாரிகளும், கருணாநிதிகளும் வருகை தந்து எம் தேசத்து மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பார்கள்.

வாழ்க சம்பந்தர்! வாழ்க மாவை சேனாதிராஜா!! வாழ்க சுரேஷ் பிரேமச்சந்திரன்!!! என்ற வாழ்த்தொலிகள் வானம்வரை கேட்க கூலிக்கு ஆட்கள் அமர்த்தப்படுவார்கள். கோடிகளாகப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகின்றது. அடுத்த தேர்தலில் கருணாநிதி பாணியில் பண நோட்டுக்கள் பட்டுவாடா செய்யப்படும். பல நூறு திரையரங்குகள்; கட்டப்படும். அங்கே புதிய படங்கள் திரையிடப்பட்டுஇ கற்பூரங்கள் காட்டப்படும். கல்கி பகவானின் போதை மடங்கள் அமைக்கப்படும். மக்களுக்கு இலவச தொக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இதற்குமேல், என்ன வேண்டும் ஈழத் தமிழர்களுக்கு.

'போடு புள்ளடி வீட்டுக்கு நேரே!'

பாரீஸ் ஈழநாடு.

Comments