உலகத் தமிழர் பேரவை” மாநாட்டில் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்

பிரித்தானியாவில் கடந்த 24ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசுத் தலைவர் வேட்பாளரும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவிற்கு மிகவும் நெருங்கியவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் கனறிவூப் பகுதியில் அமைந்துள்ள “பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில்” இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டின் இறுதி நிகழ்வும், இராப்போசன விருந்தும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜோர்ஜ் புஸ்ஸிற்கு எதிராக அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவரும், பிரபல மனித உரிமை ஆர்வலருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டு தமிழ் மக்களின் விடுதலை பற்றி உரையாற்றினார்.

“இந்த முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும் எனவும், எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது எனவும் அவர் தனது உரையில் கூறினார்.

தென்னமெரிக்க மக்களும், தென்னாபிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியுமாக இருந்தால், ஏன் தமிழ் மக்களால் அது முடியாது எனவும் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடையலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக தாம் மேற்கொண்ட போராட்டங்களை எடுத்து விளக்கிய அவர், விடுதலைப் பாதை கடினமானது எனினும், கடந்த வரலாறுகளைக்கொண்டு தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் மிகவும் நெருங்கி பணியாற்றக்கூடிய இவர், ஒபாமாவின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர் என்பதுடன், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத் தலைவரான பராக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு நிகழ்வின்போது கண்ணீர்மல்க நின்றதை சி.என்.என், மற்றும் பி.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிநாள் நிகழ்வு

“உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய அடிகளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson), பன்னாட்டு நாணய நிதியத்தின் நிதி சிறீலங்காவிற்கு செல்வதைத் தடுப்பதற்கு முன்னின்று உழைத்தவருமான ஈஸ்ற்ஹாம் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ் ரீவன் ரிம்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான கீத் வாஸ், விரேந்திர சர்மா, அன்றூ பெல்லிங், பிரித்தானிய மாகாராணியால் மதிப்பளிக்கப்பட்ட, முன்னாள் கிங்ஸ்ரன் நரகபிதா யோகன் யோகநாதன் போன்றவர்கள் மதிப்பளிக்கப்பட்டு உரையாற்றியிருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து “உலகத் தமிழர் பேரவை” அமைப்பில் பணியாற்றிவரும் திருமதி சாரதா இராமநாதன், அன்றூ தில்லைநாதன், கீர்த்தி, சென் கந்தையா, நல்லைநாதன் சுகந்தகுமார், பிரகாஸ் ராஜசுந்தரம், திருமதி அனுராதை பிரகாஸ் ஆகியோரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இராப்போசன விருந்துடன், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதுடன், போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பொதுமக்களிற்கு உதவி செய்யவென அதிஸ்டலாப சீட்டிழுப்பின் மூலம் நிதி சேகரிப்பும் இடம்பெற்றது.

சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்குரிய ஏற்பாடுகளைச் செய்வது, சிறீலங்கா பொருள்களை புறக்கணிக்கச் செய்து, முதலீடுகள் மற்றும் பொருண்மிய செயற்பாடுகளைத் தடுத்தல், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள், மற்றும் மக்களை விடுதலை செய்வது, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை வரித்து, உலகிலுள்ள 14இற்கும் மேற்பட்ட நாடுகளின் அமைப்புக்களை இணைத்து “உலகத் தமிழர் பேரவை” ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“உலகத் தமிழர் பேரவையின்” மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், இந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தமைக்கு கண்டனம் தெரிவித்தும், பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரது நிழற்படங்களைத் தாங்கியவாறு நேற்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகத்திற்கு முன்பாக சிங்கள இனவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இதேவேளை, பிரித்தானியாவிற்கான சிறீலங்கா தூதுவர் நிஹால் ஜயசிங்கவும் தெற்காசியாவிற்கான பிரித்தானியாவின் மேலதிக இயக்குனர் அன்றூ பற்றிக்கை (Andrew Patrick) லண்டனில் சந்தித்து இது பற்றிய தமது அரசின் கண்டனத்தை வெளியிட்டதுடன், கொழும்பிலுள்ள தூதரக அதிகாரியிடம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம தமது அரசின் கண்டத்தைத் தெரிவித்ததும் நினைவூட்டத்தக்கது.





Comments