மீண்டும் பூகோள ஆதிக்க சக்திகளின் போட்டிக் களமாகப்போகும் தேர்தல்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்துலக சமூகமும் தனது உதவிகளை வழங்கவேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதன் வருடாந்த அறிக்கையை கடந்த வியாழக்கிழமை 4 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.மேற்குலகமும் இலங்கை மீது மேற்கொண்டுவரும் அழுத்தங்களில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அழுத்தமாக பற்றிப்பிடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதன் மூலம் இலங்கையில் மட்டுமல்லாது, ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும் என அது நம்புகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா நுழைந்துகொண்ட பின்னணியும் அதுவே.டப்பிளின் நகரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணைகளும், ஐ.நா. மேற்கொண்டுவரும் நகர்வுகளும் அதனை ஒட்டியே அமைந்துள்ளன. இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு மேற்குலகம் பல வழிகளை நாடி வருகின்றது. அதற்கு அவர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் உதவிகளையும் நாடியுள்ளனர்.

வன்னியில் நடைபெற்ற போர் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய வெளிநாட்டு குடியுரிமையுள்ள தமிழ் மக்களையும் நேரில் சந்தித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் அவர்களின் தகவல்களை பதிவுசெய்து சென்றுள்ளனர். மேற்குலகத்தை பொறுத்தவரையிலும் அவர்கள் இருமுனை அழுத்தங்களை இலங்கை அரசு மீது மேற்கொண்டு வருகின்றனர். ஒன்று மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணகைள் தொடர்பான நடவடிக்கைகள், இரண்டாவது பொருளாதார அழுத்தங்கள்.

பொருளாதார அழுத்தங்களை பொறுத்தவரையில் இலங்கைக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது, ஜேர்மனியும், பிரித்தானியாவும் அபிவிருத்தி உதவிகளை நிறுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்ட் மாதம் முதல் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் மேற்குலகத்தின் இந்த நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ யப்பான், இந்தியா, சீனா, பர்மா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றார். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கிய நாடாக சீனாவே மாறியுள்ளதுடன், அது உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றையும் பின்தள்ளியுள்ளது.

யப்பானும், மணிலாவை தளமாக கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கியுமே முன்னர் இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கி வந்திருந்தன. இலங்கையின் வீதி அபிவிருத்தி, அனல்மின் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு கடந்த வருடம் சீனா 1.2 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. 2009 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு உதவியான 2.2 பில்லியன் டொலர்களில் இது அரைப் பங்கிற்கு மேற்பட்டது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 1.9 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள சீனா 279.6 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாகவும் வழங்கியுள்ளது.

மேலும் இலங்கையின் படைக்கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் திட்டங்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர் உதவியை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு தற்போது தனது இராணுவ தேவைகளுக்காக சீனாவிடம் இருந்து ஆறு எம்60 ரக கனரக போக்குவரத்து விமானங்களையும் கொள்வனவு செய்துள்ளது. தனது எரிபொருள் கொள்வனவுகளுக்காக ஈரானிடம் இருந்து இலகுரக கடன்களை பெற்றுக்கொண்ட இலங்கை தற்போது எரிபொருள் விநியோகத்திற்கும் ரஷ்யாவின் முன்னணி நிறுவனமான கஸ்போரம் நிறுவனத்துடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

வடபகுதியில் வன்னியில் உள்ள இராணுவமுகாம்களின் நிர்மாண கட்டுமானங்களை தனது பொறுப்பில் எடுத்துள்ள சீனா தற்போது கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கும் உதவிகளையும், உபகரணங்களையும் வழங்கியுள்ளது. போர் நிறைவுபெற்ற பின்னர் சீனாவும், ரஷ்யாவும் இணைந்து இலங்கை படையினரை பலப்படுத்த மேற்கொண்டுவரும் திட்டங்களும், சீனாவின் படைத்துறை உபகரணங்கள் பெருமளவில் வழங்கப்பட்டு வருவது, இலங்கைப் படையினருக்கான ஆயுதக் கொள்வனவு என்ற போர்வையில் இலங்கையை நோக்கி சீனா தனது கனரக ஆயுதங்களை நகர்த்தி வருகின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வருடத்தின் பாதுகாப்பு செலவினத்தை சீனா 7.5 சதவீதம் அதிகாரித்துள்ளது.

இது கடந்த 15 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிக கூடிய அதிகரிப்பாகும். இந்த பாதுகாப்புத்துறை அதிகரிப்புக்களும் மேற்கூறப்பட்ட கேள்வியை வலுப்படுத்தியுள்ளன.எனினும் சீனாவின் இந்த நகர்வுகளுக்கு எதிராக மேற்குலகமும் வேகமாக செயற்பட்டு வருவதையே அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நகர்வுகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகளை மேலும் பாதிப்படையச் செய்துள்ளன. இதனிடையே இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இங்கு வாழும் எல்லா இன மக்களினதும் கவனங்களை ஒருங்கே குவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் அதன் நீளம் நான்கு அடியை தாண்டி விட்டதாம்.

அங்கு 7 உறுப்பினர் வெற்றிடங்களுக்கு 660 பேர் போட்டியிடுகின்றனர்.அதனைப் போலவே எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர் தொகைகள் மிக மிக அதிகம். இலங்கை முழுவதிலும் 196 ஆசனங்களுக்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் திணைக்களம் அறி வித்துள்ளது. ஏறத்தாழ ஒரு ஆசனத்திற்கு 38 பேர் போட்டியிடுகின்றனர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 192 சுயேச்சைக்குழுக்களை சேர்ந்த 6,049 பேர் போட்டியிட்டிருந்தனர். ஆனால் தற்போது 36 அரசியல் கட்சிகளும், 336 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 2004 ஆம் ஆண்டு 12.8 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர், தற்போது அது 14 மில்லியனாக உயர்ந்துள்ளது.

வேட்பாளர்களில் ஒருசிலர் மக்களுக்கு சேவை செய்வதற்காக போட்டியிடுகின்ற போதும், பெருமளவானவர்கள் தமது சுயலாபங்களுக்காவும், வேறு கட்சிகளின் நலன்களுக்காகவும் போட்டியிடுவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகளில் இருந்து புறம்தள்ளப்பட்ட பெருமளவானவர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகளும் பெருமளவானவர்களை சுயேச்சையாக போட்டியிட வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் பலர் இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து விலகி குறிப்பிட்ட கட்சிகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ தமது ஆதரவுகளை தெரிவிக்கலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு இவ்வாறு பெருமளவான சுயேச்சை வேட்பாளர்களை ஆளும் தரப்பு போட்டியிட வைத்துள்ளதாக தமிழ்க் கட்சிகள் தெரிவித்துள்ளன. அங்கு 9 இடங்களுக்கு 327 பேர் போட்டியிடுகின்றனர்.ஒரே கட்சியில் பெருமளவானவர்கள் போட்டியிடுவதாலும், கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாலும் தற்போ தைய தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வேறுபட்டதாகவே உள்ளது.

அதாவது தற்போதைய தேர்தலில் நடைபெறும் வன்முறைகளில் பெருமளவானவை கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்று வருகின்றன.கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் 14 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ள போதும் அவற்றில் 9 வன்முறைகள் ஓரே கட்சி வேட்பாளர்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும், சுயாதீனமானது மான தேர்தல் மக்கள் நடவடிக்கை அமைப்பின் தலைவர் றொஹண கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் சீர்திருத்த விதிகளின்படி வாக்காளர்கள் கட்சிகளுக்கு வாக்களிப்பதுடன், தாம் விரும்பும் வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியும்.

எனவே தான் விருப்பு வாக்குகளை பெறும் போட்டிகள் ஒரே கட்சியின் வேட்பாளர்களிடையே அதிகரித்துள்ளது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவுசெய்யப்படுவர். இது கட்சிகளோ அல்லது சுயேச்சை உறுப்பினர்களோ பெற்றுக்கொள்ளும் வாக்கு சதவீதத்தில் தங்கியுள்ளது.இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டும் என செயற்பட்டு வருகின்றது. ஆனால் அது சாத்தியப்படப்போவதில்லை என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், அரசு வெற்றியடையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவே கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த வெற்றிகளின் பின் னால் இலங்கை அரசு மட்டுமல்ல அங்கு ஆதி க்கம் செலுத்திவரும் பிராந்திய வல்லரசுகளும் செயற்படப்போகின்றன என்பது தெளிவானது. அவ்வாறான ஒரு வெற்றி என்பது இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் மோசமாக்குவதாகவே அமையும். ஏனெனில் தற்போது அதிக அதிகாரங்களை தன்வசம் கொண்டுள்ள ஜனாதிபதியை அது மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்.அதனைத் தான் ஹொங்கொங்கை தளமாக கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடந்த 2 ஆம் திகதி வெளியிட்ட தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது இலங்கையில் நடைமுறையில் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்களை நீதித்துறையினால் தடுக்க முடியாதுள்ளது. எனவே இலங்கையில் நீதித்துறையினால் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உண்மை என்னவெனில் இங்குவாழும் மக்கள் தமது உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என்பது தான் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதை நாம் இங்கு கவனிப்பது பொருத்தமானது.

வேல்ஸிலிருந்து அருஷ்

Comments