கஜேந்திரகுமார் அணி அடுத்தகட்ட அரசியலுக்கான தொடக்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே.


”ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பியிருக்க முடியாது. அதற்கு அந்த ஆற்றல் இல்லை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையுமே புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அவர் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாளர் அல்லர். ஆனாலும் ஒரு ஆய்வாளன் என்ற வகையில் அவர் தெரிவித்த கருத்தினை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வரலாறு முன்னே செல்லும் போது முன்னே செல்லும் அமைப்புகள் தான் தேவை. தற்போதைய தமிழரசுக் கட்சி என்பது 50 களின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 60 களின் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் அன்றே மங்கத் தொடங்கியிருந்தது. 70களின் தேவை முற்றாக வித்தியாசப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றம் பெற்றது. அது அக்காலத் தேவையின் ஒரு கட்டத்தை முடித்து வைத்தது. அதன் வெளிப்பாடுதான் வட்டுக் கோட்டைத் தீர்மானமாகும்.

80 களில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறையில் கொண்டுச் செல்ல ஆயுத இயக்கங்கள் தேவைப்பட்டன. விடுதலை இயக்கங்கள் அந்தத் தேவையை பூர்த்தி செய்தன. இந்தியா தன் தேவையிலிருந்து விடுதலை இயக்கங்களுக்கு பின்தள வசதிகளைச் செய்து கொடுத்தது. தமிழ்த் தேசிய அரசியலும் இலங்கை மட்டத்திலிருந்து பிராந்திய மட்டத்திற்கு வளர்ந்து சென்றது.

90 களில் அரசியல் தேவை வேறாக இருந்தது. தமிழ்தேசிய அரசியலை தனது தேவையின் மட்டத்திற்கு ஒடுக்க நினைத்த இந்தியாவை மீறி அதனைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. புலிகளின் ஏக இயக்கக் கொள்கையும் இறுக்கமான இராணுவ நிர்வாகக் கட்டமைப்பும் அந்த அடிப்படையிலேயே தவிர்க்க முடியாததாகியது. இந்த இரண்டும் இல்லாமல் அந்த காலகட்ட வரலாற்றினை நகர்த்தியிருக்கலாம் எனக் கூற முடியாது.

தற்போது தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்தபின்னர் புதியவகையான அரசியல் தேவைப்படுகின்றது. 40 களை நகர்த்த தமிழ்க் காங்கிரசும் 50 களை நகர்த்த தமிழரசுக் கட்சியும் 80 களை நகர்த்த விடுதலை இயக்கங்களும் 90 களை நகர்த்த விடுதலைப் புலிகளும் தேவைப்பட்டது போல 2010 களின் அரசியலை நடாத்த புதிய அரசியலும், புதிய அரசியல் இயக்கமும் தேவைப்படுகின்றது. 50 களை நகர்த்த உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி இதனை ஒருபோதும் மேற்கொள்ளமுடியாது. இதுவே யதார்த்தமாகும்.

இன்றைய காலகட்டம் என்பது சர்வதேச அரசியலை வெற்றிகொள்ள வேண்டிய காலகட்டம். நவீன அரசியல் முறைமையில் சர்வதேச அரசியலே ஒரு தேசிய போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். புலி எதிர்ப்புச் சக்திகளினால் புலிக்காய்ச்சல் காரணமாக எல்லாம் பூச்சியத்திற்கு வந்துவிட்டது எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. சாதாரண மக்கள் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றிகளைப் பார்த்தபடியால் புலி எதிர்ப்புச் சக்திகளைப்போல நினைக்க முற்படுகின்றனர். ஆனால் உண்மைநிலை அவ்வாறானதல்ல.

தமிழ்த்தேசிய அரசியல் இன்று சர்வதேச மட்டத்திற்கு வந்திருக்கின்றது. அங்கு பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளேக்கும், பிரித்தனியாவின் வெளிநாட்டமைச்சர் மில்லிபாண்டும் தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றி கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு தமிழ் அமைப்பு நடாத்தும் மாநாட்டில் மில்லிபாண்ட் பங்குபற்றுகின்றார். பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுன் மாநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகின்றார். சர்வதேச ஊடகங்கள் தமிழ்த் தேசிய அரசியல் பற்றி கருத்து தெரிவிக்கின்றன. மனித உரிமை நிறுவனங்கள் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகவும், அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றன.

இவையெல்லாம் தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்தையே வெளிக்காட்டுகின்றது. புலிக்காய்ச்சல் உள்ளவர்கள் எதைத்தான் கூறினாலும் புலிகளின் விலை போகாத, தியாகம் நிறைந்த தொடர்ச்சியான போராட்டமே இதற்கு காரணமாகும். ஆனால் போராட்டத்தின் வளர்ச்சி சர்வதேச மட்டத்திற்கு வந்தபின்னர் சர்வதேச அரசியலை நடாத்தியிருக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு இராணுவ ரீதியாக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பே தவிர சர்வதேச அரசியலை நடாத்துவதற்கென உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல. அதனால் தான் புலிகளினால் முன்னேற முடியவில்லை.

ஒரு கட்டத்தினை நகர்த்திக்கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தினால் கட்டம் வேறொன்றிற்குச் செல்லும் போது அதனை நகர்த்த முடியாது. இதுதான் வரலாற்று நியதி. செல்வநாயகத்தின் கட்டத்தினை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் நகர்த்த முடியவில்லை. பிரபாகரனின் கட்டத்தினை செல்வநாயகத்தினால் நகர்த்த முடியவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..

சர்வதேச அரசியலை நகர்த்தும் போது இராணுவச் செயற்பாட்டினை விட அரசியல் செயற்பாடே முன்னிலையில் நிற்கும். எனவே இராணுவச் செயற்பாட்டிற்குரிய அணுகுமுறை இங்கு உதவப்போவதில்லை. நெகிழ்ச்சியான அரசியல் செயற்பாட்டிற்குரிய கட்டமைப்பு வடிவங்களே இங்கு தேவை. கூடிய வரை அதிகமான தரப்புகளை உள்வாங்கக்கூடியதாக கட்டமைப்புக்கள் நெகிழ்ச்சியான வகையில் விரிவாக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மூன்று பெரும் சக்திகள் உள்வாங்கப்படக் கூடிய சக்திகளாக உள்ளனர். தாயக சக்திகள், சேமிப்புச் சக்திகள், துணைச்சக்திகள் என்பவையே அவை மூன்றுமாகும். அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக நின்றுகொண்டு அணுகுமுறைகளில் நெகிழ்ச்சித் தன்மையை பேணும்போதே இச்சக்திகளை அணிதிரட்டக் கூடியதாக இருக்கும்.

இங்கு தாயகசக்திகள் என்போர் தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தென் இலங்கையில் வாழும், வட கிழக்கு வம்சாவழியினரும் புலம்பெயர் நாடுகளில் வாழும் வட கிழக்கு வம்சாவழியினரும் ஆவர்.

சேமிப்பு சக்திகள் என்போர் இலங்கையில் வாழும் மலையக மக்கள் உட்பட தமிழகம், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மேற்குலகம் என உலகெங்கும் பரந்து வாழும் தமிழக வம்சாவழி தமிழ் மக்களாவர்.

தாயக தமிழ் மக்களையும், உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித் தமிழ் மக்களையும் இணைத்து உலகத்தமிழர் என்ற அடையாள அரசியலையும் கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கவேண்டும்.

நட்புச்சக்திகள் என்போர் முஸ்லிம் மக்கள், தென் இலங்கையில் வாழும் சிங்கள, முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர். இம் மூன்று சக்திகளையும் இணைத்த பரந்த கூட்டணி ஒன்று இன்று தேவை. மாற்று அணி இந்த பரந்த கூட்டணியை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.

இதற்கு முதல் நிபந்தனையாக சர்வதேச ரீதியாக செயற்படும் புலிகள் அமைப்பினர் தமது பழைய அரசியலை கைவிட்டு புதிய அரசியலுக்கு வரவேண்டும். பழைய மாதிரியான கட்டமைப்பினையும் அணுகு முறையினையும் கொண்டு புதிய அரசியலை நகர்த்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதனை புரிந்து கொள்ளாவிடின் அவர்கள் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவுவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இரண்டாவது இராஜதந்திர அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். இது மூலோபாயத்தில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளாது அணுகு முறைகளில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதை வேண்டிநிற்கின்றது. அதே நேரம் இது தொழில்சார் நிபுணத்துவத்தை வேண்டிநிற்கின்ற அரசியலாகும். எனவே இதில் தேர்ச்சியைப் பெறுவதற்கு தேசிய சக்திகள் முயலுதல் வேண்டும்.

முதலாளித்துவ ஜனநாயகம் பிரிவினையை அங்கீகரிப்பதில்லை. ஆனால் அவ் ஜனநாயகம் பெரும்பான்மை ஜனநாயகமாக மாறக்கூடாது என்பதற்காக உச்ச வகையிலான அதிகாரப் பங்கீட்டினை அங்கீகரிக்கின்றது. எனவே தேசிய சக்திகள் இரு தேசக் கோட்பாடு என்பதற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் போது சர்வதேச அரசியலை நகர்த்துவது இலகுவானதாக இருக்கும்.

தற்போது உருவாகியுள்ள மாற்று அணி இன்றைய காலகட்ட அரசியலை முன்னெடுக்க போதுமானது எனக் கூறிவிட முடியாது. தேர்தல் காலத்தில் அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டதால் அதன் மீது பெரிய தவறுகளையும் எம்மால் சுமத்த முடியாது. ஒரு தொடக்கம் என்ற வகையில் அதன் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் அது தொடர்ந்தும் முன்னேற வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தற்போதைய காலகட்ட அரசியலை முன்கொண்டு செல்லமுடியாது. தொடர்ந்தும் அதில் தங்கியிருப்பது தமிழ்த் தேசிய எதிர் அரசியலை வலுப்படுத்தும் நிலைக்கே நிலைமையை கொண்டு செல்லும். எனவே மாற்று அணியின் உருவாக்கம் ஒரு வரலாற்றுக் கட்டாயமே. ஆனால் தொடக்கம் மட்டும் போதுமானதல்ல. புதிய அரசியலின் தேவைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள தற்போதே அவர்கள் தயாராக வேண்டும்.

– முத்துக்குமார்

Comments