இலங்கைத் தீவில் நடைபெறும் சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து விட்டதாகவே தெரிகின்றது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், கேலிக்குரியதாகத் தோன்றலாம். நம்ப முடியாததாகக் கருதலாம்.
ஆனாலும், கள யதார்த்தம் இதையே எடுத்துரைக்கின்றது. தமிழீழம் மீதான இறுதித் தாக்குதல் என்பதால், விமானங்கள் குண்டு வீசுகின்றன, பீரங்கிகள் குண்டுகளைப் பொழிகின்றன, கிளாஸ்ரர் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன, எரி குண்டுகள் வீழ்ந்து அனைத்தையும் பஸ்பமாக்குகின்றன என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு இதனைப் பார்க்க முற்படாதீர்கள்.
தற்போது, ஆயுதம் எடுத்துத்தான் தமிழர்களை அழிக்கவேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் கிடையாது. ஆயுதம் எதுவும் இல்லாமலே ஈழத் தமிழர்களை அழிப்பதற்கும், புதைப்பதற்கும் அரசியல் என்ற பேராயுதம் உள்ளதே. அதை வைத்து நடாத்தும் இறுதி யுத்தம். சிங்களத்திற்கு இந்தியா கொடுக்க விரும்பும் இறுதி மரியாதைக்கு ஈழத் தமிழர்களின் 'தாயகக் கோட்பாடு' குறி வைக்கப்படுகின்றது.
அங்கே இந்தியாவின் சிப்பாய்களாக மாற்றப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி வியூகம் வகுக்கின்றது. இங்கு மகிந்த சகோதரர்களுக்கு அதிகம் வேலை கிடையாது. இந்த யுத்த களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்பதற்காகவே, தனது வளர்ப்பிற்குரியவரின் வீணையைப் பிடுங்கிக்கொண்டு வெற்றிலையில் நிற்க வைத்துள்ளார்.
இந்தியா எதைச் செய்யவேண்டும் என்பதை மகிந்தவே தீர்மானிக்கிறார். இந்தியா எதைச் செய்யக் கூடாது என்பதையும் மகிந்தாவே முடிவு செய்கிறார். இந்தக் களத்தில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சிங்கள அதிபர் தேர்தலிலும் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று மகிந்தவே முடிவு செய்திருந்தார்.
அதற்காகவே, சிங்கள மக்களுக்கு உருவேற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்பட்டு, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற உத்தரவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மகிந்த வெல்லவேண்டும் என்று இந்தியா விரித்த வலையில், அரசியல் கத்துக்குட்டியான சரத் பொன்சேகாவும் சிக்குண்டு, தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்.
இது கற்பனையான கதை அல்ல, நடைபெற்று முடிந்த அரசியல் கணக்கு. இந்தியாவின் சொல்லை மீறாத, இப்போதும் தமிழர்களின் இரட்சகர் இந்தியாதான் என்று கைநீட்டிக் காட்டும் பக்குவத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயமாக சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார்கள் என்பது பொருந்தாத வாதம். ஈழத் தமிழர்கள் மீதான இறுதி யுத்தத்தின் இராணுவ வெற்றிப் பங்காளர்களான மகிந்தவும், சரத் பொன்சேகாவும் சிங்கள மக்கள் மத்தியில் சம பலத்துடன் இருந்தபோதே அவசரமாக மகிந்த தேர்தல் அழைப்பை விடுத்திருந்தார்.
யுத்த வெற்றியின் அரை நாயகனான மகிந்தவை எதிர்த்துப் போராட எதிரணிக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு மற்றைய அரை வெற்றியாளனான சரத் பொன்சேகா மட்டுமே. அவர் களம் இறக்கப்பட்டால் மகிந்தவுக்கு வெற்றி நிச்சயமில்லாமல் போகலாம் என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படியான கட்டளை இந்திய தரப்பால் விடுக்கப்பட்டது.
அந்த ஆதரவைப் பெறுவதன் மூலம் சரத் பொன்சேகா தமிழர்களுடன் சமரசம் செய்ய முற்படுகிறார் என்ற வதந்திகளும், கருத்துக்களும் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. சிங்கள தேசத்து அரசியலில் காலா காலமாக இனவாதமே வெற்றியைத் தீர்மானித்தது என்பது இந்தியாவுக்குத் தெரியும். அதனாலேயே மகிந்தவை வெல்ல வைக்கும் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தேர்தல் களத்தில் பயன்படுத்திக் கொண்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கூட்டுச் சதியை உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத ஈழத் தமிழர்களும் தேர்தல் முடிந்து, மகிந்த மீண்டும் தெரிவானபோதுதான் தாங்கள் இன்னுமொரு ஏப்ரல் 1 ஐ கடந்து வந்ததாக உணர்ந்தார்கள். இந்தியா தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை பணிய வைத்தது, தான் நினைத்தது போலவே, ஆயுதக் குழுக்களிடையே மோதல்களை உருவாக்கி விரிசலை ஏற்படுத்தியது. தான் நினைத்தது போலவே, தமிழீழ மண்ணில் கால் கதித்தது. தான் நினைத்தது போலவே, வரதராஜப்பெருமாள் என்ற தலையாட்டிப் பொம்மையை வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக்கியது. தான் நினைத்தது போலவே, எமது மக்களை அழித்தது, சிதைத்தது, மானபங்கப்படுத்தியது. தான் நினைத்தது போலவே, மேற்குலகால் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுக்களில் தீர்வுகள் கிட்டவிடாது தடுத்தது. தான் நினைத்தது போலவே, யுத்த நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை முள்ளிவாய்க்கால்வரை விரட்டிச் சென்று கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு உதவி வழங்கியது. தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை யுத்தக் குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றியும் வருகின்றது.
இங்கு, முள்ளிவாய்க்காலின் அவலங்களை உங்கள் கண்களின் முன்னால் நிறுத்திப் பொருத்திப் பாருங்கள் அத்தனை உண்மைகளும் உங்கள் நெஞ்சில் அறைந்து சொல்லும். இந்த நினைவுகளுடன், இப்போதைய யுத்த களத்திற்குச் செல்வோம். முள்ளிவாய்க்கால் யுத்த களத்தைப் பின்நின்று இயக்கிய அதே சாட்சாத் இந்தியாவே இந்த யுத்த களத்தின் பின்னாலும் நிற்கின்றது.
அதற்குக் காரணம்... புலம்பெயர் தமிழர்கள். சிறிலங்காவாலும், இந்தியாவாலும் நெருங்க முடியாத, கடத்திச் செல்ல முடியாத நிலையில் விசுவரூபம் கொண்டு தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பெற்ற வெற்றியைத் தோற்கடிக்கத் தொடங்கிவிட்டார்கள். புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றது.
ஆயுதும் ஏந்திக் களத்தில் நிறைவு செய்ய முடியாத 'தமிழ்த் தேசியம்' என்ற இலட்சியத்தை புலம்பெயர் நாடுகளில் அமைதி வழிப் போராட்டங்கள் மூலமாகப் பெற்றுவிடப் போகிறார்கள் என்பதே அந்த அச்சம். அதற்கு, அவர்களுக்கு உள்ள ஒரே குறி தமிழீழ மக்களது அரசியல் தலைமை. அந்த அரசியல் தலைமையை அவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டுவிட்டால், அவர்கள் மூலமாக பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபையை ஏற்கப்பண்ணிவிட்டால்... முடிந்தது பிரச்சினை.
ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையுடன் நாங்கள் உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொண்டு விட்டோம். எங்களுக்கு வெளியார் யாரும் சமரசம் பேசி வரத் தேவையில்லை என்ற வார்த்தைகளுடன் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும், அதனூடான புலம்பெயர் நாடுகளின் அரசியல் நகர்வும் தடுத்து நிறுத்தப்படும் என்பதே இந்தப் போர்க்களத்தின் கணக்கு.
அந்தக் கணக்கில் சறுகல் வரக் கூடாது என்பதனாலேயே தமிழ்த் தேசியத்தை விட்டு நகரமுடியாத கஜேந்திரனும், பத்மினியும் வெளியேற்றப்பட்டனர். அதை உணர்ந்து கொண்டதனால் கஜேந்திரகுமாரும் வெளியேறினார். இந்தத் தேர்தல் போர்க் களத்தில் இந்திய தேசத்தால் இறக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் துரோகம் அரங்கேற்றப்பட விடாமல் களத்தில் பின்புலமற்ற நிலையிலும் போராடுகின்றார்கள்.
இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், 'இந்த இடத்தில் இந்தியா எங்கே நிற்கிறது?' என்று. இங்கேதான், இந்திய ராஜதந்திரம் தோற்றுப்போய், சிங்களத்திடம் சரணாகதி அடையும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு வழிக்கும் இந்தியாவின் பரிதாப நிலை புரியும்.ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினை ஊடாக இலங்கையில் கால் பதிக்க இந்தியா நினைத்த காலத்தில் இருந்த களநிலை வேறு. இப்போதைய கதை வேறு.
தங்களை மிரட்டும் அரசியலைத் தொடரும் இந்தியாவுக்கு செக் வைக்க சிங்களம் காலத்தை நோக்கிக் காத்திருந்தது. சோவியத் ரஷ்யா சிதைவடைவதற்கு முன்னர், இரு தரப்பு இராணுவ ஒப்பந்தங்களுடன் தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாக எண்ணி இறுமாந்திருந்த இந்தியாவுக்கு ரஷ்யச் சிதைவு பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. இந்த வரலாற்றுச் சிதைவினால் ஏற்பட்ட நெருக்கடிகளை ஈடு செய்ய இந்தியா அமெரிக்காவை நெருங்க வியூகம் வளர்த்த வேளையில், அயல்நாட்டு அரசியல்களில் மூக்கைச் செலுத்தி அடிவாங்கும் அவலத்தை விரும்பாத சீனா, தன்னைப் பொருளாதாரப் போரில் முற்றாக ஈடுபடுத்தியது.
அதற்கு உலகின் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. சீனாவுக்குத் தேவை உலக பொருளாதாரத்தை வென்றெடுப்பது மட்டுமே. அந்தப் பொருளாதாரப் போரில் சீனா பெற்ற வெற்றி மகத்தானது. அளவுக்கதிகமான பொருளாதார பெருக்கத்தையும், உற்பத்தித் திறனையும் கொண்ட சீனாவுக்கான சந்தை வாய்ப்புக்கள் உலகெங்கும் விரிந்து சென்றன.
சீனாவின் உற்பத்திக்கான மூலப் பொருட்களின், மசகு எண்ணைகளில் தேவையும் அதிகரித்தது. அந்தத் தேவையின் அடிப்படையில் பெருகிய கடற் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இலங்கைத் தீவு சீனாவைக் கவர்ந்தது. சீனாவின் காதலைப் புரிந்து கொண்ட சிறிலங்கா, இந்தியாவின் மிரட்டும்பாணி அதிகாரக் காதலை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறிலங்கா சீனாவுக்கு சீதனமாக வழங்கியது.
இந்தியா முறைத்துப் பார்த்தது. 'இந்தா! உனக்கும் தருகிறேன் திருகோணமலையை, வைச்சுக்கோ' என்றது. பேரம் படிய மறுத்ததால் குடியிருந்த தமிழர்களின் வாழ்விட மண் பறிக்கப்பட்டு, சாம்பூரும் வழங்கப்பட்டது. இந்தக் கதை இப்படியெ தொடர்வதால், இப்போதைக்கு இதை விட்டு விடுவோம். வடக்கும் - கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு சிங்கள நீதிமன்றத்தால் உடைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டாகிவிட்டது.
அதை, இனி எந்தக் காலத்திலும் பலப் பிரயோகமின்றி இணைப்பது சாத்தியமே இல்லை. திட்டமிட்ட குடியேற்றங்களினாலும், யுத்தப் படுகொலைகளாலும், விரைவான புலம் பெயர்தல்களினாலும், தமிழ் மக்களின் கறாரான குடும்பக் கட்டுப்பாட்டினாலும் தென்தமிழீழத்தில் தமிழர்களின் மக்கள் தொகை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.
கிழக்கை வடக்குடன் இணைப்பதில் இஸ்லாமியத் தமிழர்கள் விருப்பம் கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. மகிந்த சிந்தனை மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கில் மகிந்த விரும்பியே பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தினார். பெரும்பாலும், இவரே கிழக்கின் கடைசித் தமிழ் முதல்வராகவும் இருப்பார் என்பதே பலரது கணிப்புமாக இருக்கின்றது.
கிழக்கு, தமிழர்களின் கைகளை விட்டு வெகு வேகமாகச் சென்று கொண்டுள்ளது. இருப்பது வடக்கு மட்டுமே. அங்கேதான் இந்தத் தேர்தல் உச்சவத்தின் தேர்த் திருவிழா நடைபெறப் போகின்றது. இத்தனை அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது வட தமிழீழ அரசியல் களம் மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக அதனைக் கைப்பற்றி, இன்னொரு அரை வரதராஜப்பெருமாளாக சம்பந்தரை முதல்வராக்கினால் மட்டுமே இலங்கையிலிருந்து வழுக்கிச் செல்லும் தன் கால்களைப் புதைத்து நிற்க முடியும் என்பதே இந்தியாவின் இறுதிக் கணிப்பு.
சீனாவுடன் பொருளாதார உதவிகளை வலுப்படுத்திவரும் சிறிலங்காவை மிரட்டி அடிபணிய வைக்கும் நிலை தற்போது இல்லை. அடித்துப் பணியவைக்க இந்தியாவின் ஆயுதங்களைக் கையேற்கவும் அங்கே இளைய தலைமுறை இல்லை. இந்தியாவுக்கு இப்போதுள்ள ஒரே இலக்கு வட தமிழீழம் மட்டுமே.
அவர்களது அரசியல் பலம் மட்டுமே. அதற்காகவே இந்த இறுதிப் போர். தமிழீழ மக்கள் மீது தொடுக்கப்படும் இந்தப் போரில் 'தமிழ்த் தேசியம்' சிதைக்கப்படும். இந்த இறுதி யுத்த வெற்றிக்குப் பாடுபட்ட இந்தியாவை மகிந்த கைவிட்டுவிடப் போகிறாரா, என்ன?
வடக்கிற்குள் சீனா நுழையாது என்ற உத்தரவாதத்துடன், இந்தியா வளமாக அங்கே காலூன்ற அனுமதிக்கப்படும். இதுதான் தமிழீம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்! இதைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொண்டால் மட்டுமே தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும் காப்பாற்ற முடியும்.
Comments