பாராளுமன்றத் தேர்தல்: தமிழருக்கு தரும் செய்தி என்ன?

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தல் தமிழருக்கு தரும் செய்தி என்ன என்பதை அறிய உலகத்தமிழர் ஆவலாக இருக்கும் அதேவேளை உலக ஆதிக்க சக்திகளும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் முடிசூடா மன்னனான மகிந்த ராஜபக்ச பல கனவுகளுடன் இந்தத் தேர்தலை நடாத்தி தனது கட்சியே பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நாட்டை ஆளவேண்டும் என்பதுடன் அத்துடன் வடக்கு மாகாண தேர்தலையும் எப்படியாவது இந்தப் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியுடன் அதையும் நடத்தி வடக்கை எப்படி கிழக்கை பிள்ளையானிடம் கொடுத்தாரோ அதே மாதிரி வடக்கையும் தனது வேண்டப்பட்ட எட்டப்பன் கூட்டத்துடன் கையளிக்க எண்ணியுள்ளார்.

இவைகள் எல்லாம் தமிழரின் வாக்கு யாருக்கு இந்த தேர்தலில் அளிக்கப்பட்டது என்பதை வைத்துத்தான் கணிக்கப்படும். ஆக இலங்கையில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் நிச்சயம் தமிழருக்கு எந்த பிரயோசனமும் இல்லையாயினும் கண்டிப்பாக இந்த தேர்தல் தமிழருக்கு பல செய்திகளை தரும் என்பது மட்டும் நிஜம்.

கடந்த வருடம் முள்ளிவாக்காலில் விடுதலைப் புலிகளை அழித்து தனது அரசு மாபெரும் இராணுவ வெற்றியை ஈட்டியதாக தம்பட்டம் அடித்து சிங்கள மக்களில் அமோக ஆதரவை பெற்று மகிந்த தனது ஜனாதிபதிக்கான காலம் இருந்தும் இந்த இராணுவ வெற்றி மமதையுடன் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த ஜனவரி 26-ஆம் நாள் அந்த தேர்தலை நடாத்தி அதிலும் வெற்றி கண்டு பின்னர் அவருக்கெதிராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இராணுவச் சட்டத்தின் ஊடாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளார்கள். மகிந்தாவின் எண்ணப்படி பொன்சேகா வெளியே வந்தால் அவர் தனது அரசிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களை செய்வாரேயானால் நிச்சயம் மகிந்தாவின் கட்சிக்கு நிச்சயம் இருக்கும் செல்வாக்கு குறையும் என்ற கணிப்புடன் மகிந்த தனது அரசியல் காய்நகர்த்தலை நடாத்திக்கொண்டிருக்கின்றார்.

தமிழரின் இருப்பை அழிக்க எண்ணும் மகிந்த

மகிந்த தனது அரசியல் சாணக்கியம் ஊடாக தமிழ் தேசிய கூட்டணிக்குள் ஒரு பிளவை மறைமுகமாக ஏற்படுத்தி அதிலும் வெற்றி கண்டார். குறிப்பாக குமார் பொன்னம்பலத்தின் தனயன் கஜேந்திரகுமார் மற்றும் பல முன்னணி தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தேர்தலை சந்திக்க உள்ளதன் அடி நாதமே மகிந்தாவிடம் இருந்து வந்தது தான். அனைத்திற்கும் மேலாக இவர்கள் தமிழ் தேசிய கூட்டணி முன்னணி உறுப்பினர்களை சேறுவாரி இறைக்கின்றனர்.

இவைகள் அனைத்தும் தமிழரின் ஒற்றுமையை மீண்டும் சீரழிப்பதாகவே கணிக்கப்படும். மகிந்த மீண்டும் வெற்றி கண்டுள்ளார். எது எப்படியாயினும் தமிழர் நிச்சயம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கால நீரோட்டத்தில்; இன்று இருக்கின்றார்கள். காரணம் சிங்கள ஆதிக்க சக்திகள் தமிழரின் தாயக பூமியை சிங்களமயமாக்கபலபிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இன்று தமிழர் அகதிகளாக தமிழரின் கலாச்சாரக் கோட்டையான யாழ்ப்பாணத்தில் இருக்க சிங்கள மக்களோ யாழ்ப்பாணத்தை நோக்கி பல லட்சக்கணக்கில் படை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தின் கல்லூரிகளிலே சிங்கள ஆசிரியர்களினால் சிங்களப் பாடங்கள் கற்பிக்கபடுகின்றன.

வெகு சீக்கிரத்திலே தமிழர்களின் மொழியாம் தமிழ் அவர்களின் தாயகத்திலே அழிக்கப்பட இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் சோரம் போவது போலவே தமிழர் நடந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்து இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியீட்ட முடியாமல் பண்ணி மகிந்த அவர்களின் தோழமை கொண்ட அரசியல் வாதிகளை வெல்ல சதி அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் தமிழரின் தாயகக் கோட்பாட்டை அடியோடு இல்லாமல் பண்ணி தமிழரை தமது காலடியில் போட்டு மீண்டும் எப்படி அவர்கள் ஈழ விடுதலை போர் ஆரம்பிப்பதற்கு முதல் அடித்து உதைக்கப்பட்டார்களோ அதே பாணியிலான நடவடிக்கையை செய்ய தமிழரே மூல காரணமாக அமைகின்றார்கள் என்பது தான் உண்மை.

தமிழர் முன் உள்ள ஒரே அவா என்னவென்றால் முன் எப்போதும் இல்லாதவாறு இன்று தமிழர் ஒரு குடையின் கீழ் வந்து தமிழரின் தாயக கோட்பாட்டை வலியுறுத்தி உலக நாட்டின் ஆதரவுடன் குறிப்பாக இன்று போர் ஓய்ந்துள்ள வேலையில் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர் ஒரு குடையின் கீழ் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய கோரிக்கையை முன் வைத்து தமது அரசியல் வேலைத்திட்டங்களை செய்து தமிழரின் வேள்வியை பூர்த்தி செய்ய முனைவதை விட்டு ஏறுக்கு மாறாக நின்று சிங்கள பாசிச அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுக்கு ஆதரவளிப்பதோ அல்லது அவரின் வலையில் சிக்கி தமிழரின் ஓட்டை பிரித்து மகிந்த தான் கண்ட கனவை நனவாக்க தமிழரே துணை நிற்பதா என்பது தான் இப்போது எழும் கேள்வி.

தமிழரின் ஒற்றுமையே அவர்களின் வெற்றி

தமிழருக்கு இந்த தேர்தல் ஒரு முக்கியமாக நாம் கருதலாம். காரணம் இந்த தேர்தல் குறிப்பாக தமிழர் தாயகத்தில் மகிந்த ஆதரவு இயக்கங்களுக்கு செல்லுமாயின் நிச்சயம் மகிந்தாவின் அடுத்த இலக்கு வடக்கு மாகாண தேர்தலை நடத்தி வடக்கு மாகாண ஆட்சியை, குறிப்பாக எந்தவொரு ஒரு அதிகாரமும் இல்லாத ஒரு ஆட்சியை கொண்டு வந்து உலக நாடுகளையும் தமிழரையும் ஏமாற்றி தமிழரின் இருப்பையே ஈழத்தில் இல்லாதொழிப்பதே சிங்கள ஏகாதிபத்தியத் தலைமையின் கனவு. இவற்றிற்கு தமிழர் சோரம் போகலாமே என்பது தான் இப்போது உள்ள கேள்வி.

யார் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்து விடாமல் தமிழர் நிதானமாக சிந்தித்து தமது வாக்கை தமிழரின் ஒருமித்த ஆதரவுடைய கூட்டமைப்புக்கே வாக்களத்து அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்பது அனைவரினதும் அவா. அனைத்து வேற்றுமைகளையும் களைந்து ஒரு குடையின் கீழ் வந்து தமிழரின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். அயல் நாடான இந்தியாவோ தமிழரின் உரிமைகளுக்கு எப்பொழுதும் அரசியல் ரீதயாக குரல் கொடுக்கும் என்று கூறினாலும் இந்தியாவின் கொள்கையின் படி ஈழத்தமிழர் ஒரு பொழுதும் பரந்த பட்ட ஒரு அரசியல் அதிகாரத்தை பெற விரும்பவில்லை காரணம் அவர்களின் அதிகாரம் இந்தியாவிற்கு ஒரு நெருக்கடியாக வந்துவிடுமோ என்ற பீதி.

குறிப்பாக இந்தியாவின் கவலை என்னவென்றால் ஈழத் தமிழர் அதிகாரங்களை பெற்று விட்டால் தமிழ் நாட்டின் அரசியலில் கணிசமான செல்வாக்கை பெற்று பின்னர் இவர்கள் ஆதரவுடன் தமிழ் நாட்டுக்கும் மேலும் பல அரசியல் அதிகாரங்களை பெற போராடுவார்கள் என்பது ஒரு வித அச்சம். மற்றும் இந்தியா இரு எதிரும் புதிருமான இனங்களை இன தலைமைகளை விரும்பவில்லை குறிப்பாக ஈழம் மற்றும் சிறி லங்கா என்ற இரு அதிகார வர்க்கத்தை. காரணம் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கனவே இந்தியப் பெருங்கடலையே தமது நாட்டின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து அந்த சமுத்திரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் ரோந்து வர வேண்டுமென்பதே.

ஆக ஈழம் இந்தியாவிற்கு எதிராக இருந்தால் நிச்சயம் இந்திய கடற்படை பல சிக்கல்களை பாக்கு நீரிணை மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஈழ அதிகார வர்க்கத்தினால் உருவாக்கப்படும் மற்றும் சிறி லங்கா அதிகார வர்க்கத்தினால் நிச்சயம் இந்தியாவின் கடல் ரோந்து நடவடிக்கைளுக்கு பல சிக்கல்கள் அரேபியன் கடல் பிரதேசங்களில் சந்திக்க வேண்டி வரும். ஆக இந்திய இரு வேறு கட்சிகளை சமாதான படுத்த வேண்டி வரும். இது நிச்சயம் இந்தியாவிற்கு பல சிக்கல்களை கொடுக்கும் என்பது இந்தியாவின் வெளி விவகாரங்களுக்கு பொறுப்பான இரகசிய புலனாய்வு அதிகாரிகளின் ஆலோசனை. ஆக இந்தியா ஒரு போதும் ஈழ தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை குறிப்பாக பல அதிகாரங்களை கொண்ட வடகிழக்கு இணைந்த ஈழ மாநிலத்தை அமைக்க உதவாது.

ஆகவே மகிந்த கண்ட கனவு அதாவது வடக்கு மாகாண தேர்தலை நடாத்தி எந்த அதிகாரமும் வழங்காமலே ஈழ கோரிக்கையை முடக்கி தமிழரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்க முனையும் சிங்கள தலைமைக்கு ஒரு போதும் தமிழர் இடம் தரக்கூடாதென்பது தான் உலகத் தமிழரின் கோரிக்கை. தமிழர் முன் எப்போதும் இல்லாதவாறு இன்று அவர்கள் ஒரு குடையின் கீழ் வந்து ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் அவர்களின் பல கால போராட்டம் வெற்றி கண்டு அடுத்த கட்ட ஈழத் தமிழர்களின் விடிவுக்கான போராட்டத்திற்கான ஒரு மைல் கல்லாக அமையும்.
நடக்க இருக்கும் தேர்தல் தமிழருக்கு பல செய்திகளை தருகின்றது குறிப்பாக அவர்களின் ஒற்றுமையின்மை நிச்சயம் மகிந்தாவின் சிந்தனைக்கு இடம் தருவதாக அமையும்.

மற்றும் அவரின் தமிழின சுத்திகரிப்புக்கான அடுத்த கட்ட நகர்வுக்கு தமிழரே அத்திவாரம் அமைத்துக் கொடுத்தது போன்று அமையும். மகிந்த மற்றும் இந்தியாவின் விருப்பத்தின்படி எந்த அதிகாரமும் இல்லாத வடக்கு மாகாண தேர்தலை நடாத்தி அதற்கான ஒரு பொம்மலாட்ட அரசை நிறுவி தமிழரின் நீண்ட கால ஈழ போராட்டத்திற்கு ஒரு முடிவு கட்டி தமிழரின் இருப்பையே இல்லாதொழிக்க தமிழரே வழி சமைத்துக் கொடுத்தாற்போல் ஆகிவிடும். ஆகவே தமிழ் இனம் இன்று என்றுமில்லாதவாறு விழிப்பாக இருந்து இந்த தேர்தலில் யார் உண்மையான தமிழரின் சுய நிர்ணய கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பதென்று வாக்களித்தார்களோ அவர்களுக்கே வாக்களித்து அவர்களை வெற்றியாக்கி ஈழத்தின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஒரு வழி சமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே அடுத்த மாதம் இடம் பெற இருக்கும் தேர்தல் தமிழருக்கு சொல்லும் செய்தி.


அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments