உலகத் தமிழ் பேரவையின் (உ.த.பே) தீர்மானத்தால் வலுவடையும் தமிழீழ அரசியல்

இலண்டனில் நடைபெற்ற மாநாட்டில் உ.த.பே, 1976-ல் பிரேரிக்கப்பட்டு, 1977 தேர்தலில் தமிழீழம்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக, ஐ.நா.வின் மேற்பார்வையுடன் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிலும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களிடமும் ஓரு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும், அவர்களும் தனித்தமிழீழக் கொள்கைகளை ஏற்கிறார்களா அல்லது ஒற்றையாட்சியை விரும்புகிறார்களா என உறுதிபடுத்த வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இத்தகைய தீர்மானத்தின் மூலம், தாமாகவே தமது தமிழீழக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஜனநாயக வழியில், பாதிக்கப்பட்ட மக்களின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என மொழியப்பட்டமை புலம் பெயர் தமிழ் மக்களையும், தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் அரசியல்வாதிகளையும் ஊக்குவிக்குமெனத் தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்கள் மேலும், ஈழத்தமிழரின் அடிப்படை அரசுக் கொள்கையை அதில் கரிசனம் உள்ள மக்கள் ஜனநாயக விருப்பின் அடிப்படையின் தீர்மானிப்பது அல்லாது, வேறு சக்திகளால் இயக்கப்பட்ட சூத்திரங்களால் தீர்மானிக்கப்படுவோதோ, சில பிரமுகர்களால் இரகசியமாக ஆக்கப்பட்ட தொட்டும் தொடாத உருவாக்கங்களால், தீர்மானிக்கப்படுவோதோ நியாயமற்றது எனவும் கூறுகின்றனர். “உள்நாட்டுச் சுயாட்சி” எனும் கோட்பாட்டுக்குச் சர்வதேச அடிப்படையில் ஒரு ஆதாரமும் கிடையாது எனவும், அப்படி ஒன்றிற்கு ஈழத்தமிழரின் அரசியல் கொள்கையில் சற்றேனும் ஆணையில்லையெனவும் அவர்கள் மேலும் கூறினர். வுpயாழனன்று வெளிவந்த தினக்குரலின் கூற்றுப்படி, மேதகு பிரபாகரன் அவர்கள் “உள்ளக சுயநிர்ணயம்” பற்றி மௌனம் சாதித்தமை சில வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குத் திருப்தி அளிக்கவில்லையென்றும், அன்று முதல் “உள்ளக சுயநிர்ணயம்” என்ற அடிப்படையில் ஒரு தீர்வை உருவாக்கும் வேலைத் திட்டத்தைத் தாம் தொடங்கியிருப்பதாகவும், தமிழரசு கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் சில தமிழ்ப் பிரதிநிதிகளுக்குக் கூறினார். அதே சமயம், அவர், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் கொணரப்பட்டுத் தோல்வியடைந்த ஆஸ்லோ பிரகடனத்தை மேற்கோள் காட்டி அப்பிரகடனத்தில் உள்ளக சுயநிர்ணயம் மற்றும் ஒன்று சேர்ந்த அரசு ஆகிய கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும் திரித்துக் கூறி, அதனடிப்படையில் தனது கட்சி ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தைச் சமர்பிக்கும் எனவும் கூறினார். அதே சமயத்தில், ஆஸ்லோ அறிவிப்புகளுக்கு முதல் மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கொள்கை, இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் ஒரு பக்கம் சார்ந்தவை எனவும், அவற்றை இரு சார்பினரும் ஒருங்கிணைந்து ஏற்கவில்லை எனவும் கூறி அவற்றை முற்றாகப் புறந்தள்ளி விட்டார்.

சமீபத்தில் கனடாவில் தமிழ் வானொலி ஒன்றில் பேசிய அகில இலங்கை தமிழர் சம்மேளனத்தின் தலைவரான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில், மேதகு பிராபகரன் ஒஸ்லோ பிரகடனத்தில் ஒருபோதும் நம்பிக்கை வைக்கவி;ல்லையெனத் த.தே.கூ நன்கு அறிந்திருந்தது எனக் கூறினார்.

கடந்த வருடம் மே மாதம் முடிந்தவுடன் சம்பந்தன், மாவை சேனாதி இராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய த.தே.கூ தலைவர்கள், தாங்கள் இந்தியாவுடன் பேசுவதற்கு ஒரு முன்மொழிவைத் தயாரித்து வருவதாகக் கூறினார்கள். ஆனால், அதனுள் உள்ளடக்கப்பட்டது யாதென்பதை மற்றைய அங்கத்தினர்களுக்கு நெடுநாட்களுக்கு வெளியிடாது வைத்திருந்தனர். வெகு காலத்தின் பின்தான், தமிழர்களின் அபிலாட்சைகள், இத்திட்டத்தில் கைவிடப்பட்டன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வந்தது என அவர் கூறினார். அதே த.தே.கூ தலைவர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாட்சைகள் ஒருகாலமும் இந்தியாவின் விருப்பத்தை மீறிச் செல்லக்கூடாது என்று கருதினார்கள் எனவும் அவர் கூறினார். அரசியல்வாதிகள், மேற்பரப்பில் “தாயகம், தேசியம், சுயநிர்ணயம்” என்று கூறினாலும், அவர்களது நிகழ்ச்சி நிரலின் உட்பகுதி அதற்கு முரணாக உள்ளது. தமிழ் மக்கள் எவ்விடத்தில் யாருடனும் பேசினாலும் தமது அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை அவர்கள் எப்படி விட்டுக்கொடுக்க முடியும் எனப் பொன்னம்பலம் வினாவினார்.

அரசியல்வாதிகள், தாம் பிரநிதிப்படுத்தும் மக்களின் அபிலாட்சைகளை முன்னின்று நடைமுறைப்படுத்தி, அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென அதற்காக போராடுவது அல்லாது, மற்றவர்கள் கூறுவதைப் பின்பற்றுவார்களானால் அவர்கள் கைப்பொம்மைகளாகவே அன்றி அரசியல்வாதிகளாக முடியாது. த.தே.கூ-ன் முன்மொழிவு தமிழரின் இறையாண்மையை இழக்காத இருதேசங்களைப்பற்றிப் பேசுவதேற்கேற்ற மேடையை அமைக்க வேண்டும்என்பதே கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் அபிப்ராயம் ஆகும்.

சம்பந்தனும், அவரின் அடியார்களும், நாட்டின் அரசியல் நிலைமையால்தான் தாங்கள் இப்படித் தரங்குறைந்த அரசியல் தீர்வை ஏற்பதாகக் கூறுவதையும், அப்படித் தனது நிலையிலிருந்து இறங்குவதையும் தமிழ் வட்டாரங்களில் பலர் நியாயமற்றது எனத் திகைப்பும் கசப்பும் அடைகின்றனர். இவ்விடயத்தில் உ.த.பே இதைக் கையாண்ட இராஜதந்திர முறையையும் மக்கள் தீர்மானத்தைச் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் ஏற்க வேண்டுமெனும் கொள்கையையும் அவர்கள் போற்றுகின்றார்கள்.

ஈழத்தில் இருக்கும் இன்றைய சமுதாயத்தினர், த.தே.கூ, தனது சரித்திரபூர்வமானப் பொறுப்பை நிறைவேற்ற இன்னும் காலம் கடக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

சில மேற்குலக இராஜதந்திரிகளோ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழியில் சென்று, தமிழர் தமது இறையாண்மையை இழந்து விட்டால், அது எதிர்காலத்தில் சர்வதேசங்கள் ஈழத்தமிழர்களின் விவகாரங்களில் தலையிடுவதை, முதலும் கடைசியுமாக முடித்துவிடும் எனக் கூறுகின்றனர். இத்தகைய வகையில், தமிழ் பிரச்சனையை இயங்ஙகாமல் செய்வதற்குக் கொழும்பும், தில்லியும் மற்றும் வேறு சிலரும் கூட்டு முயற்சி செய்கின்றனர். தமிழர்களின் அரசியல் சரணாகதியைக் குறிவைத்தே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மகாணசபைத் தேர்தல் ஆகியன நடாத்தப்படுகின்றன என்று தீவில் உள்ள ஒரு தமிழ் ஆர்வலர் கூறுகின்றார்.

இராஜபக்சேவுடன் சேர்ந்த பாராளுமன்ற முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி தேர்தலின்பின் ஓரம் கட்ப்பட்டனர். அதுபோல பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் த.தே.கூ ஓரங்கட்டப்படும். அதன்பின் கொழும்பு – தில்லி சமாஜமானது ஏதாவது புதிதாகப் பிரதேச சபைகளுக்கு தயாரித்து, அதன்மூலம் இறுதியாகத் தமிழரின் தேசிய அபிலாட்சைகளுக்கு முடிவு கட்டலாமென அந்த உள்நாட்டு அரசியல்வாதி மேலும் கூறினார்.

சுயமாக இயங்கும் புலம் பெயர் தமிழர்கள் எல்லா சவால்களுக்கிடையிலும், நாட்டில் பொருளாதார மீட்பு என மேற்குலகும், ஆசிய இராட்சச வல்லரசுகளின் புதுஅமைப்பு எனும் மாயையின் நடாத்தும் அரசியல் சூழ்ச்சி நிறைந்த பரிசோதனைகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கினை வகுக்கின்றனர் எனக் கொழும்பில் உள்ள ஓர் இடதுசாரி அரசியல்வாதி கூறுகின்றார்.

அதே சமயம், நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவினரின் திருத்தப்பட்ட கொள்கைத் திட்ட அறிக்கை எதிர்வரும் திங்களில் வெளியாகுமென, அவர்களின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

எமது அடிப்படைக் கொள்கைகளை உதறித் தள்ளாது ஒருங்கிணைக்கும் குரலே தமிழ் மக்களின் நீதியான வெற்றிக்கு வழிகாட்டுமென ஓர் இராண்டாம் தலைமுறையைச் சேர்ந்த புலம்பெயர் அரசியல் நடைமுறையாளர் கூறுகிறார்.


(இந்தக் கீழ்காணும் கட்டுரை, Tamilnet இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் 'GTF resolution Inspires Tamil Polity' என்ற ஆங்கில கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம்:)

Comments