கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும், அனைத்து வகையான சித்திரவதைகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டனர்.
இவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரின் சித்திரவதைகள் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கும் பெரும் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது. தற்போதும் இரகசிய தடுப்புமுகாமில் 12500 தமிழ் மக்களும் போராளிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய நிலை தொடர்பாக அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Comments