திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதால், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், பொருளியல் ஆசிரியருமான சின்னத்துரை வரதராஜன் திருகோணமலையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்து விளக்குகின்றார்.
இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், திருக்கோணமலைத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பலராலும் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களினால் திருகோணமலை மண் பறிபோய்விட்டது என்றும் அதனைக் காப்பாற்றுவதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் என்றும் கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திருக்கோணமலையில் போட்டியிடுவதனால் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடப்போகின்றது என்றும் இதனால் திருக்கோணமலையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடப்போகின்றது என்றும் பலராலும் எழுதப்பட்டு வருகின்றது.
தேர்தல் வந்தவுடன் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றிப் பேசுபவர்களும், எழுதுபவர்களும் இவ்வளவு காலமும் எங்கு சென்றீர்கள்? தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப்பற்றி முழுமையான – முறையான ஓர் ஆய்வினை யாராவது செய்தார்களா? நுனிப்புல் மேய்ந்ததுபோல வெறுமனே கல்லோயா, கந்தளாய், அல்லைக் குடியேற்றத் திட்டங்களின் பெயர்களைக் கூறுவதன் மூலமோ அல்லது இரண்டு ஆண்டுப் புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு சிங்களவர் தொகை அதிகரித்துவிட்டது, தமிழர் தொகை குறைந்துவிட்டது என்று சிங்களக் குடியேற்றங்களின் பரிமாணத்தை விளங்கிக் கொள்ளமுடியுமா?
மண்மீட்புப் போரை நடாத்திய நாங்கள் இந்த மண் பறிபோன வரலாற்றைப்பற்றி ஆய்வு செய்திருக்கின்றோமா? எங்களின் மண் பறிபோனது இன்று நேற்றல்ல. 30 வருடங்களுக்கு முன்னரே பறிபோய்விட்டது. அப்பொழுது திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1965 – 70 காலப்பகுதியில் தமிழரசுக்கட்சியின் சார்பில் ஓர் அமைச்சரும் (திரு திருச்செல்வம் அவர்கள்) பதவியிலிருந்தார். இவர்கள் எல்லோரும் என்ன செய்தார்கள்?
1977ம் ஆண்டுத் தேர்தலில்தான் சேருவல என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டி.எல்.லீலாரட்ன என்ற சிங்கள இனத்தவர் முதல் தடவையாக இம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். உண்மை இவ்வாறிருக்க ஏதோ அண்மையில்தான் திருகோணமலை பறிபோய்விட்டது மாதிரியும் திருகோணமலைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தான் அதனைக் காப்பாற்றப் போகின்றோம் என்ற மாதிரியும் சம்பந்தர் உட்பட பலர் பேசுகின்றனர், எழுதுகின்றார்கள். இவ்வாறு பேசுபவர்கள் உண்மையில் திருகோணலையைக் காப்பாற்றப் பாடுபடுகின்றீர்களா? அல்லது சம்பந்தரைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களா? இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த 30 வருடங்களாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தின் மூலம் திருக்கோணமலையைக் காப்பாற்ற முடியாமல்போன நீங்கள் இப்போது யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகின்றீர்கள்.
ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்வரை இக் குடியேற்றங்களைத் தடுக்க முடியாது. இதைத்தான் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதனை நிராகரிக்கின்றது. தீர்வுத் திட்டம் தொடர்பில் இவ் விடயத்திலேயே தங்களுக்கும் கஜேந்திரகுமாருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதாக சுரேஸ் பிரேமச்ந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இக்கொள்கை முரண்பாட்டின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது. இக் கொள்கையை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்காகவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது.
1921-1946 காலப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றின் பெயரிலேயே திருகோணமலை நகரத்தில் பெருமளவு சிங்களவர்வர்கள் குடியேறினர். இதே நிலை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வரப்போகின்றது. அபிவிருத்தியின் பெயரால் யாழ்ப்பாண சனத்தொகையின் இனவிகிதாசாரம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படப்போகின்றது. இதனைத் தடுக்கப்போகின்றோமா? அல்லது 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வாறு பறிபோனது என்ற வரலாற்றை எழுதப்போகின்றோமா?
எஸ்.வரதராஜன்
யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர்
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
(பொருளியல் ஆசிரியர்)
Comments