போராட வேண்டிய நேரமிது

இந்த நவீன உலகத்தின் பூகோள அரசியலில் சிக்குண்டு, சர்வதேச BIG Brothers என்று அழைக்கப்படும் வலிமை நாடுகளின் பனிப்போரில் சிக்குண்டு இன்று எமது மக்கள் உரிமையற்று நிற்கின்றார்கள். ஏப்பிரல் 2009 பன்னாட்டு இராணுவ அதிகாரிகள் வல்லுனர்கள் போர்கள முன்னரங்கில் நின்றார்கள் .

அவர்கள் ஏன் அங்கு போனார்கள் என்பது ஓரு கேள்வி? சனவரி 2009 முதல் மே 2009 வரை சிறீலங்கா இராணுவ வெறித்தாக்குதலில் சிக்குண்டு, இறந்த உறவுகளை இருந்த இடத்திலேயே புதைத்துவிட்டோ, அப்படியே விட்டுவிட்டோ, எமது மக்கள் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள்.

அந்த இடப்பெயர்வு 50ஆயிரத்திற்கு மேற்பட்ட எம் மக்களை பலியெடுத்து மே 19ல் முள்ளிவாய்க்காலில் அகோர இன அழிப்பிற்கு பின் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே 15ம் திகதி எமது போராளிகள் தமது ஆயுதம் மௌனிக்கப்பட்டு விட்டது என்று கூறிய பிறகும் சிறீலங்கா அரசு குண்டுகளை மழைபோல கொட்டி எமது நிலங்களை சுடுகாடாய் மாற்றியது.அங்கே விட்டு விட்டு வந்த உறவுகளின் உடல்களை மீண்டும் சென்று எடுத்து அடக்கம் செய்யவோ, இறுதி மரியாதை செய்யவோ எம்மால் முடியவில்லை.

வன்னி பிரதேசம் வெளிஉலகிற்கு மூடப்பட்ட சூனியப்பிரதேசமாக இருக்கின்றது. அங்கே இறந்த எமது உறவுகளை பற்றி எவரும் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள். சிறீலங்காவைச்சுற்றி உலகப்பலம்வாய்ந்த நாடுகள் ஒரு பனிப்போரை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் தமது இருப்பைக்காக்கத் தமிழ்தேசியத்தை விலைபேசிக்கொண்டிருக்கின்றார்கள். இன்று அந்த மக்களின் விடுதலை எம் கையில் தரப்பட்டுள்ளது. இதனால் வரை 37,000 வரையிலான மாவீரர்கள் தமிழீழக்கனவுகளை சுமந்து தம் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

இந்த மக்கள் சிங்கள மக்களை வெறுத்தவர்கள் அல்ல, தம் இனத்தை ஆழமாக நேசித்தார்கள். மதவெறிப்போராட்டம் அவர்கள் செய்யவில்லை. இந்த மாவீரர்கள், தமது மக்களையும், எதிர்கால சந்ததியையும் நினைத்து தமிழீழம் என்ற சுதந்திர தேசத்தில் உரிமையுடன், அமைதியும், சுதந்திரமுமிக்க வாழ்வு வாழ்வார்கள் என்பதற்காக தியாகங்களைச் செய்தார்கள்.

தமிழ் மண்ணிற்கு தமது உயிரையும், செங்குருதியையும் தந்தார்கள்."மனித வாழ்வில் சுதந்திரம் உன்னதமானது, மானிட நற்பேறுகளில் தலைசிறந்தது. மனித வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் ஆதாரமானது. சுதந்திரம் தான் மனிதவாழ்விற்கு அர்த்தத்தை கொடுக்கின்றது. முழுமையைக்கொடுக்கின்றது.

மனித ஆத்மாவின் ஆழமான, அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது என்று சொன்னார் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்.போராட்டம் ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறைக்கு சென்று கொண்டிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அடுத்த தலைமுறையினர் புலத்தில் இரவு பகலாக இந்த உலகிற்கு தாயகத்தில் நடந்து கொண்டிருந்த படுகொலைகளை நிறுத்த போராடி கொண்டிருதார்கள்;

உண்ணாவிரதம் இருந்தார்கள், மூத்த தலைமுறையினர் எல்லோருக்கும் இதை பார்த்து ஒரு நம்பிக்கை பிறந்தது. எமது இளைய சமுதாயம் எமது போராட்டத்தைக் கொண்டு செல்லும் என்ற பெருநம்பிக்கையை மக்கள் அவர்கள் மேல்வைத்தார்கள்.

மே 21 க்கு பின் அவர்கள் எவரையும் காணவில்லை? தமது குழந்தைகளுடன் வந்து நின்ற பெற்றோர்களையும் காணவில்லை? என்ன நடந்தது? அங்கே ஆயுதப்போராட்டம் மௌனமாக்கப்பட்ட போது, எமது மக்களும் தமது பலத்தை இழந்து விட்டார்களா? ஆயுத பலத்தை மட்டுமே நம்பி எமது வீரர்கள் போராடவில்லை, அவர்களிடம் மனோ பலம் அதிகமாக இருந்த படியால்தான் நின்று போராடினார்கள், அவர்களுடன் மக்களும் இருந்தார்கள் அந்த மனேபலத்துடன் தான் நாமும் இரவு பகலாக புலத்திலும் போராடினோம்.இன்று இந்த உலகப்பனிப்போரில் எமது விடுதலை ஒரு கருவியாக்கப்பட்டுள்ளது.

உலக மயமாக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாம்தான் பங்காளிகள். தருணத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டியது நாங்கள். இன்று போராட்டம் எம் கையில், அங்கு சூழல்மாறும் அதுவரை உலக மயமாக்கப்பட்ட போராட்டத்தை முன்னோக்கி போர்க்குற்றங்கள், இனப்படுகொலையை வலியுறுத்துவதும், சிறீலங்காவுக்கெதிரான பொருளாதார புறக்கணிப்புக்கள், சர்வதேசபீடங்களிலிருந்து அழுத்தங்கள் என்று பல வகையான ஐனநாயக வழி ஆயுதங்கள் எம்மிடம் நிறையவே இருக்கின்றன.

எம் மண்ணின் மாவீரர்கள், மக்களின் ஆத்மாக்கள் அமைதி பெறுவதென்றால் நாம் போராடவேண்டும். அங்கே எமது மக்கள் தம் உயிர்களை வித்தாக நிலத்தில் விதைத்திருக்கின்றார்கள். அந்த வித்துக்கள் தமிழீழம் என்ற பெரும் விருட்சமாக மலரும் மட்டும் ஆவலாக அங்கேயே இருப்பார்கள். எங்கள் போராட்டம் வெற்றி பெற நாட்கள் ஆகலாம். தலைமுறைகள் தாண்டிக்கூட போகலாம், ஆனால் அந்த மாவீரர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நிராக வீணாகிப்போய்விட நாம் அனுமதிக்க முடியாது. போராட்டம் என்பது ஒரு தனிமனித முயற்சியல்ல.

அது ஒரு கூட்டு முயற்சி அங்கு எமது விடுதலைக்காய் போராடும் போது அதற்குரிய அரசியல் மேடையை வகுக்க நாம் போராடவில்லை. சந்தர்ப்பங்கள் பலதை கைநளுவ விட்டோம். இனியும் நாம் அதை செய்ய முடியாது. இன்று சனநாயகப்பலம் எம் கையில் அதை பயன்படுத்திக் கொள்வோம். எமது தலைவர் தனது மாவீரர்நாள் உரையில் கூறினார் " எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது.உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம். நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனை இடர்வரினும் எத்தனை துயர்வரினும் நாம் எமது விடுதலையை நோக்கிய பயணத்தை தொடருவோம். எமது இலட்சியப் பயணத்தில் எத்தனையே சவால்களை, ஆபத்துக்களை நெருக்கடிகளை நாம் சந்தித்து விட்டோம்.இனி எம்மை எதுவும், எவரும் அச்சுறுத்த முடியாது. நாம் துணிந்து போராடுவோம். வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது சத்தியம் எமக்கு சாட்சியாக நிற்கிறது" என்றார்.

இன்று எம்மிடம் நியாயத்தின் சாட்சியங்கள் நிறையவே இருக்கிறது. அயர்லாந்தில் நடந்த Peoples Tribunal ( மக்களின் நீதிமன்றத்தில்) அந்த சாட்சியங்கள் பேச தொடங்கி விட்டது. போராட்ட வலு இன்று மிக அதிகமாக நிற்கிறது. நாடுகளை அணைத்துக்கொண்டு போக பலவழிகளும் இருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் மரணத்துக்கு நியாயம் கேட்க சிறையில் வாடும் எமது மக்களினை மீட்க, உலக நீதிமன்றத்தில் நியாயம் கேட்க இனப்படுகொலையை விசாரணையை வலியுறுத்த எமது தாயகத் தமிழீழத்தை பெற்றிட நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

இது எங்கள் நேரம்

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு தொடர்புகளுக்கு: Thiru

மின்னஞ்சல்: mte-France@gmail.com

Comments