கனடா பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்த தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கான வெற்றிக்கு ஆதரவு தெரிவித்த பொதுக்கூட்டம்

Congress_Meeting-w550

தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு ஆதரவு தெரிவித்த கூட்டம் ஒன்று சனிக்கிழமை அன்று மாலை 3:00மணிக்கு, ஸ்காபரோ எவரெஸ்ற் விழா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.கா.ஈழவேந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பது தமிழர்களின் கடமை என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆய்வாளர் நேரு குணரெத்தினம் முதலான பலர் உரை நிகழ்த்தினார்கள். கனடா பட்டதாரிகள் சங்கம் ஊடகங்களுக்குத் தந்த அறிக்கை இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

கனடா

27/03/2010

ஊடகஅறிக்கை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலானது, தமிழர் உரிமைப் போராட்டம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்து, மீண்டும் அரசியல் வடிவம் பெற்றுள்ள நிலையில் நடைபெறும் தேர்தலாகையால், தமிழ் மக்கள் மிகத் தெளிவான,தீர்க்க்கமான முடிவினை உலக நாடுகளிற்கு சொல்லக் கடைமைப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் குறுகிய கால நலன்களை முன்னிறுத்தாமல் நீண்ட கால அரசியல் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய தெரிவுகளை மேற்கொள்வதே எதிர்கால சந்ததிக்கு இத்தருணம் நாம் செய்யும் கைமாறாக இருக்கமுடியும்.

இந்த புதிய அரசியல் போராட்டத்தை அறுபதுகளை நோக்கி பின் தள்ளாமல், நவீன உலக ஒழுங்குகளையும், பிராந்திய நலன்சார் விடயங்களையும் புரிந்துகொண்டு, எமது போராட்டத்தை உலக அரங்கில் முன்னோக்கி நகர்த்தக்கூடிய, மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமைத்துவமே இன்றைய எமது தேவையாக உள்ளது. இப்புதிய தலைமைத்துவத்தை அறுபதுகளிட்கே பொருத்தமான சித்தாந்தங்களில் ஊறிப்போனவர்களால் தர முடியாதென்பது எமது அமைப்பின் நிலைப்பாடாகும். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி புதிய தலைமைத்துவத்திற்கான சில உட்கூறுகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஆதரவு வழங்க எமது அமைப்பு முன்வந்துள்ளது. இவற்றுள் தலையாயதாக நாம் நோக்குவது, அளப்பெரிய தியாகங்களின் ஊடாக உலக அரங்கிற்கு கொண்டுவந்த எமது போராட்டத்தை மீண்டும் பிராந்திய அளவில் சுருக்கி முடக்குவதற்கு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வழிகோலாது.

மேலும், உலக அரங்கில், அரசியல் இராயதந்திர நகர்வுகளிட்கு உலகத் தமிழரின் ஆதரவும் பலமும் இன்றியமையாதவை என்பதை இனம்கண்டு, புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்வந்ததையும் எமது அமைப்பு வரவேற்கிறது. இறுதியாக, எமது அரசியல் போராட்டப் பாதையை பாராளுமன்ற அரசியலுடன் மட்டுப்படுத்தாமல், அதற்கு வெளியிலும் தமிழ்த் தேசியத்திற்கு உயிரூட்டக்கூடியவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் எமது அமைப்பு வேண்டிக்கொள்கின்றது.

Congress_Meeting-w550


Congress_Meeting-w550


Congress_Meeting-w550

Comments