பிரான்சில் மாநகரசபையிலிருந்து மாநிலத்தை நோக்கி....

நாளை 14 மற்றும் மார்ச் 21 ஆம் திகதிகளில், நாடு தழுவிய ரீதியில் பிரான்சில் மாநிலத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதில் Seine Saint Denis 93 மாநிலத்தில் பசுமைக்கட்சியின் [ Europe - Ecologie ] சார்பில் இரண்டு தமிழின விடுதலைச் செயற்பாட்டார்கள் போட்டியிடுகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கான அரசியல் தளம், புலம்பெயர் நாடுகளில் உருவாகும் இவ்வேளையில், அனைத்து ஈழத்தமிழ் மக்களும் இத்தேர்தலில் பங்குகொண்டு, தமது அரசியல் இருப்பினை நிலை நிறுத்திக்கொள்வது அவசியமானது.

ஏற்கனவே 2007 மாநகரசபைத் தேர்தலில், 9 பிரதிநிதிகளை, பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தெரிவுசெய்தது, புலம்பெயர் அரசியல் வாழ்வில் பெரியதொரு திருப்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசியலில் கால் பதிப்பதன் ஊடாக, தேசிய அளவிலும், தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய முடியும்.

அத்தோடு தேசிய, ஐரோப்பிய மற்றும் அனைத்துலக அரசியல் முன்னெடுப்புக்களில் இணைந்து கொள்வதன் மூலம் மறைக்கப்பட்டுவரும் எமது தாயக அரசியல் அபிலாசைகளையும் வெளிக்கொணரமுடியும். இத்தேர்தலில் போட்டியிடும் செல்வி.கிருஷாந்தி சக்திதாசன் [ஷாலினி] அவர்கள், பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும், அதன் உத்தியோகபூர்வ அனைத்துலக பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் வரலாற்றுப் பதிவான ,வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில், எம் போன்ற ஊடகவியலாளருடன் இணைந்து, அதன் வெற்றிக்காக உழைத்த தமிழ் தேசிய உணர்வாளர் இவர்.

போட்டியிடும் முருகநாதபிள்ளை ரவிசங்கர் அவர்களும், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற lle Saint Denis மாநகரசபைத் தேர்தலில், மக்களால் தெரிவான தமிழின உணர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமொன்றின் [Bio Technic Company ] உரிமையாளரான ரவிசங்கர், ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் மக்கள் பணியாளராகவும், மற்றும் தமிழ் மாணவர் சங்க பிரதிநிதியாகவும் விளங்கியவர்.

இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு , இவர்களின் செயற்பாடுகள் குறித்து, மேலே விபரித்த விடயங்களே போதும். எமது அடிப்படைப் பிரச்சனைகளை தேசிய, சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்வதற்கு களமொன்று திறந்து விடப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்த வேண்டியது மக்களின் கடமை. நாம் எங்கே வசிக்கிறோம். எந்த தளத்தில் நிற்கிறோம் என்பது அல்ல பிரச்சனை. எமது அடிப்படை இலட்சியத்திலும் ,அதை முன்னெடுத்துச் செல்லும் பாதைத்தெரிவிலும், தெளிவாக இருப்பதுவே முக்கியமானதாகும்.

சிந்தனைக்கும், செயலுக்கும் இடைவெளியற்றுச் செயல்படும் இந்த இருவரையும் தெரிவு செய்து, தமது அரசியல் தளச்செயற்பாட்டினை, பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ் மக்கள் விரித்துச்செல்வார்கள் என்று நம்புவோம்.

சிறகுகள் விரியும் காலமிது. அதன் இயங்குதளமே மக்கள்தான்.

- இதயச்சந்திரன்

Comments