இன்னமும் மறைந்து போகாத தமிழருக்கு எதிரான இனக்குரோதம்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரவோடு இரவாக ஒரு காரியம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவமே அது. இது தற்செயலானதொரு சம்பவம் அல்ல.
அதேவேளை வர்த்தக நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு காரியமும் அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு- ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் விட்டு வைக்காது- அவற்றைப் பார்வையிடுவதற்குச் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றதையும் அரசு விரும்பவில்லை.
இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும்” என்று அரசாங்கம் கூறியதன் பின்னணியில் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கப் போவதில்லை. அப்படி நடந்தால் கூட அதற்குக் காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படப் போவதும் இல்லை. காரணம் இப்போதைய சூழ்நிலை அப்படியானது. திலீபனின் நினைவுத்தூபியை உடைத்த சக்திகளின் நோக்கம் என்ன என்ற கேள்வி இப்போது யாழ்ப்பாண மக்களிடையே மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவரிடமும் தோன்ற ஆரம்பித்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் கட்டியமைக்கப்படும் புதிய புதிய நினைவுச் சின்னங்களும், தமிழரின் வழக்கில் இல்லாத பௌத்த மத சின்னங்களும் பல்வேறு அச்சங்களைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்கள் மீதான இன அடக்குமுறை வேறொரு வடிவத்தை அடைந்து கொண்டிருப்பதன் சாட்சியாகவே இவை அமைந்துள்ளன.
இனக்கலவரங்கள், போர் ஆகியவற்றின் பெயரால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பற்ற சூழல் நிலவுவதால், தமிழரின் வரலாற்று- பாரம்பரிய அடையாளங்களையும் கலாசாரப் பின்னணிகளை விளக்கும் நினைவுச் சின்னங்களையும் அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே திலீபனின் நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபனின் நினைவுத் தூபியை எங்கிருந்தோ வந்தவர்கள் சிதைப்பதை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு தமிழரின் நிலை வந்து விட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்திருக்காது. அதற்கான துணிவும் யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் தமிழரிடம் இருந்த ஆயுதபலம் என்ற கவசம் உடைக்கப்பட்ட பின்னர் தான் இப்படியொரு துணிவு அவர்களுக்கு வந்திருக்கிறது.
- புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சிங்களச் சமூகமோ சாதிக்கப் போவது எதுவுமில்லை. அது வரலாறு. புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட தொன்று. அந்த வரலாற்றை யாரும் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதற்கான வலு இலங்கை அரசிடமோ சிங்கள சமூகத்திடமோ கிடையாது. புலிகளினதோ தமிழரினதோ வரலாற்று அடையாளச் சின்னங்களை சிதைத்து விடுவதன் மூலம் தமிழரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று கருதுவது வியப்பானது. ஏனென்றால் இந்த வரலாற்று- நினைவுச் சின்னங்களில் இருந்து தான் உரிமைக் கோரிக்கைகள் பிறப்பெடுக்கப் போவதில்லை. அது தமிழரின் இரத்தத்தில் ஊறிப் போயிருப்பது.
தமிழரின் வரலாற்று- நினைவுச் சின்னத்தில் இருந்தா புலிகளின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது? இல்லையே. புலிகளின் நினைவுச் சின்னங்களை- அடையாளச் சின்னங்களை சிங்கள மக்கள் வியப்புடன் பார்ப்பதை அரசாங்கத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் தான் இந்த நினைவுச் சின்னங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச ரீதியாக போர் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் என்று ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களின் கல்லறைகளையோ நினைவுத்தூபிகளையோ அழிக்கக் கூடாது என்பதே அது. இந்த உயர் விழுமியம் இப்போது இலங்கையில் செத்துவிட்டது.
தன்னோடு போர்புரிந்து மரணத்தைத் தழுவிய எல்லாள மன்னனுக்கு நினைவுச் சின்னம் அமைத்த துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக் கொள்வோர் அதற்கு மாறான செயல்களின் ஈடுபடுகின்றனர். புலிகளைப் போன்றே அவர்களின் நினைவுத்தூபிகள் கல்லறைகளையும் சிதைத்து விடுவதன் மூலம்- புலிகளின் கனவு, அவர்களின் நினைவுகளையும் இல்லாது அழித்து விடமுடியும் என்று கருதுகிறது அரசாங்கம்.
புலிகள் இயக்கம் தமிழ்மக்களுக்கு எதிரானது- அவர்களின் சுதந்திரத்துக்கு தடையாக இருந்தது- தமிழரின் நலனுக்கு விரோதமானது என்ற, அரசின் வாதங்களும் பிரசாரங்களும் உண்மையாக இருக்குமேயானால் இத்தகைய நினைவிடங்களையிட்டு ஒரு போதும் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளை இந்த நினைவிடங்கள் அடையாளச் சின்னங்களை அழிப்பதன் மூலம் தமிழரின் மனங்களில் இருந்து புலிகள் பற்றிய நினைவுகளை அழித்து விடலாம் என்று கருதினால் அதுவும்; முடியாது.
- ஏனெனில் புலிகள் இயக்கம் கடந்த முப்பதாண்டு காலம் தமிழரினது வாழ்வுடன் பின்னிப் பிணைந்து போயிருந்தது. தீதோ நன்றோ அது தவிர்க்க முடியாதாக அமைந்திருந்தது. அதைவிட புலிகள் என்ற பிரமாண்டத்தைக் காண்பித்தே அரசாங்கம் தனது படைகளின் வீரதீரத்தை எடுத்துக் கூற முடியும். புலிகள் என்பது மாயை- என்று அதன் அடிச்சுவட்டை அழித்து விட்டால் புலிகளை அழித்ததற்கான பெருமை இலங்கைப் படைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் திலீபனின் நினைவுத்தூபியைச் சிதைத்துள்ளனர். இது அநாகரீகத்தின் உச்சம் என்றால் மிகையில்லை.
இரவோடு இரவாக நடந்து முடிந்த இந்தக் காரியத்தை யாழ்ப்பாண மாநகரசபை பார்த்துக் கொண்டிருந்ததா அல்லது பின்னணியில் இருந்ததா என்பது கேள்வி. ?
அப் பிரதேசத்தை நிர்வகிப்பது யாழ்ப்பாண மாநகரசபை தான். அதன் நிர்வாகம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிம் இருப்பதால் மௌனம் காக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் நடந்திருக்கின்ற இந்தச் சம்பவம் மிகவும் முக்கியமானது.
- யாழ்ப்பாணம் தமிழரின் தொன்மையான பண்பாட்டுப் பூமி. அதற்குள் புகுந்து தமிழரின் உரிமைக்காக- அமைதி வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஒருவரின் நினைவுத்தூபியை உடைக்கும் சக்தி யார் யாருக்கோ எல்லாம் வந்து விட்டது.
இது தமிழ் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கின்ற போக்கின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. தமிழருக்கு எதிரான இன ரீதியான காழ்ப்புணர்வுகள் மறைந்து போகவில்லை என்பதன் வெளிப்பாடு இது. அதுவும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இப்படியொரு காரியத்தை செய்யும் இந்த இனக்குரோதம் வளர்க்கப்பட்டு வருகிறது.
- இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுறை, ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் அதற்கு மாறான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. திலீபன் நினைவுத்தூபி உடைப்பே இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
- கொழும்பிலிருந்து சத்திரியன் -
Comments